For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்னாப்பின் சேனல் பேர் மாறிடுச்சி... ஆனா சேனலின் பின்னணியில் இருக்கும் விவிஐபி யாரு?

By R Mani
Google Oneindia Tamil News

அர்னாப் கோஸ்வாமி விரைவில் துவங்கவிருக்கும் ஆங்கில செய்தி சேனலின் பெயர் மாற்றப்பட்டு விட்டது. ரிபப்ளிக் (Republic) என்று முதலில் தனது சேனலுக்கு பெயர் சூட்டியிருந்தார் அர்னாப் கோஸ்வாமி. இதற்கு பாஜக தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். Republic என்ற பெயர் 1950 ம் ஆண்டு இந்திய பெயர்கள் மற்றும் முத்திரைகள் சட்டப் பிரிவுகளின் கீழ் பயன்படுத்தப் படக் கூடாததென்று சாமி பிரச்சனையை கிளப்பியிருந்தார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளருக்கும் இது தொடர்பாக சாமி புகார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தான் இது தொடர்பாக அர்னாப் கோஸ்வாமிக்கும், அவரது புதிய கம்பெணியின் முக்கிய பங்குதாரரான தொழிலதிபரும், எம் பி யுமான ராஜீவ் சந்திரசேகருக்கும் எழுதிய கடிதங்களுக்கும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறியிருந்தார். தனக்கு உரிய பதில் வரவில்லை என்றால், தான் நீதிமன்றத்துக்குப் போக வேண்டியிருக்கும் என்றும் சாமி எச்சரித்திருந்தார்.

Who backs Arnab's new Channel Republic TV?

இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் மன்மீத் கவுருக்கு அர்னாப் கோஸ்வாமி எழுதியிருக்கும் கடிதத்தில் தன்னுடைய புதிய சேனலின் பெயரை Republic என்பதிலிருந்து Republic TV என்று மாற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை முறையாக பதிவு செய்து விட்டதாகவும் தெரிவித்திருக்கும் கோஸ்வாமி, இனிமேல் எல்லா கடிதங்களையும் புதிய பெயரிலேயே அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் இந்த தகவலை, அதாவது அர்னாப் மத்திய அரசுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் நகலை சாமி வெளியிட்டதுதான். ஆம். ஜனவரி 30 ம் தேதி சாமி தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டார். அதோடு மட்டும் சாமி நிற்கவில்லை. வழக்கம் போல தன்னுடைய பொன் மொழிகளாலும் ஆர்னாப்பை அசிங்கப் படுத்தினார்.

'வாணலியில் வருபடுவதற்காகவே கோழிகள் வீடுகளுக்கு வருகின்றன என்பது கோஸ்வாமிக்குத் தெரியும். என்னுடன் பொறுக்கிப் போல நடந்து கொள்ள வேண்டாம்' என்று அர்னாப்பை எச்சரித்து விட்டார். வழக்கமாக தமிழர்களை மட்டுமே பொறுக்கிகள் என்று கூறி வந்த சாமி தற்பொழுது தமிழ் நாட்டுக்கு வெளியில் இருக்கும் தன்னுடைய எதிரிகளையும் இந்த பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார்.

தன்னுடைய டிவி யின் பெயரை மாற்றினாலும் அர்னாப்பை சாமி விடுவதாக இல்லை. ஆர்னாப்பின் சேனலுக்கு பணம் முதலீடு செய்பவர்கள் பற்றிய விசாரணையை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று புதிய வில்லங்கத்தை சாமி துவக்கி வைத்திருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து அமெரிக்க டாலரிலும், இந்தியாவின் அஸாம் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவரிடமிருந்து இந்திய ரூபாயிலும் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் பற்றி உரிய விசாரணை வேண்டும் என்று பிரச்சனையை கிளப்பி விட்டார்.

Republic TV பற்றி வரும் புதிய தகவல்கள் இந்த சர்ச்சைகளுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இது பற்றி டில்லியில் இருக்கும் இந்திய காட்சி ஊடகத்தைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியாளர் கூறும் தகவல் சுவாரஸ்யமானது:

"Republic TV முழுக்க, முழுக்க இந்தியாவின் நம்பர் ஒன் விஐபி அரசியல்வாதியின் செல்லக் குழந்தை. பெரும்பாலான ஆங்கில சேனல்கள் இடது சாரி சிந்தனை கொண்டிருக்கின்றன. பாஜக மற்றும் சங் பரிவாரத்துக்கு எதிராக இருக்கின்றன. ஆகவே 2019 தேர்தலில் தங்களுக்கு ஊது குழலாக இருப்பதற்குத் தோதான ஒரு ஆங்கில செய்தி சேனலை அந்த நம்பர் ஒன் அரசியல்வாதி விரும்புகிறார். மேலும் நாட்டில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள், அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்தால் அப்போது ஊடகங்கள் அதனை அரசுக்கு எதிராகவே விவாதிக்கும். அந்தக் கால கட்டங்களில் வேறு வேறு புதிய புதிய பிரச்சனைகளைக் கிளப்பி, குட்டையை குழப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒரு சேனல் தேவை. அதுதான் Republic TV. இந்தக் காரியத்தை அர்னாப் கனகச்சிதமாக செய்வார். அந்த திறமை அவருக்கு உண்டு," என்கிறார் அவர்.

அவர் மேலும் கூறும்போது, "பணம் ஒரு பிரச்சனையே கிடையாது இந்த சேனலுக்கு. ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொண்டு வந்து கொட்டத் தயாராக இருக்கிறார்கள் அந்த விஐபி யின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக் கிடப்பவர்கள். அதனால்தான் இப்போதே சில செல்வாக்கு மிக்க மனிதர்கள் Republic TV யில் தங்களுக்கும் பங்குகள் வேண்டும் என்று கோரி மறைமுகமாக சம்மந்தப்பட்ட தரப்புக்கு கோரிக்கைகளை வைக்கத் துவங்கியிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை நிறைவேறா விட்டால் ஆர்னாப்புக்கு எதிராக புதிய புதிய பிரச்சனைகளை அவர்கள் எழுப்புவார்கள்,'' என்கிறார் அவர்.

Republic TV பெயருக்கும், சாமியின் தாக்குதல்களுக்கும், ஆர்னாப்பின் சங்கடங்களுக்கும், மேலே சொல்லப்பட்ட சமாச்சாரத்துக்கும் ஏதாவது சம்மந்தம், இருக்கிறதா இல்லையா என்று சத்தியமாக நமக்குத் தெரியாது. இது காதில் விழுந்த செய்தி, அவ்வளவுதான். 'கண்ணிருப்பவர் காணக் கடவர், காதிருப்பவர் கேட்க கடவர்'' என்றார் விவிலயத்தில் இயேசு பிரான். ஆகவே இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்பதை கண்ணிருப்பவர் கண்டுணரலாம், காதிருப்பவர் கேட்டு உணரலாம். அவ்வளவுதான்!

English summary
Who is the backbone of Arnab's new Channel Republic TV? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X