For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சா எண்ணெய் உற்பத்தி: செளதி அரேபியாவின் முடிவால் இந்தியா அதிருப்தி அடைந்தது ஏன்?

By BBC News தமிழ்
|
கச்சா எண்ணெய் உற்பத்தி
Getty Images
கச்சா எண்ணெய் உற்பத்தி

கொரோனா நெருக்கடிக்குப் பின்னர், இந்தியாவின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் உள்ளது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரியாற்றல் வளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றன.

ஆனால் செளதி அரேபியா தலைமையிலான எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் (OPEC) நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் இடையூறுகள் வரக்கூடும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தவரை, எந்தவித இடையூறும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பது மட்டுமல்லாமல், அவை மலிவான விலையில் கிடைப்பதும் முக்கியமாகும். இந்தியா தனது எரியாற்றல் தேவைகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு, 135 கோடி மக்கள் வசிக்கும் இந்த நாடு உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் நாடாக மாறியுள்ளது.

செளதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்கள் குறைப்பதாக இந்த வாரம், அறிவித்தது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 97 லட்சம் பீப்பாய்கள் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன.

இது இந்தியாவுக்கு ஒரு கெட்ட செய்தி. கச்சா எண்ணெயின் பெரிய நுகர்வோர் என்பதால், இந்தக் குறைப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதை, தெரியப்படுத்தினார்.

"தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரின் நலனுக்காக, நியாயமான விலை நிர்ணயத்தின் அவசியத்தை நான் வலியுறுத்தினேன். உலகளாவிய பொருளாதார மீட்சியை ஊக்குவிக்க உற்பத்தியை வெட்டுவது சிறந்த வழியாக இருக்காது," என்று பின்னர் அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.,

இந்தியாவின் அதிருப்தி

இந்த "முரண்பாடான" கொள்கை, எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக தர்மேந்திர பிரதான், ஒபெக் தலைமைச் செயலர் முகமது பர்கிண்டோவிடம் தெரிவித்தார். "இந்தியாவும் பிற வாங்கும் நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் விலைகள் குறையும் என்றும் எதிர்பார்த்தன, ஆனால் ஒபெக்கின் முடிவு காரணமாக மாற்று எரிசக்தி வளங்களை தேடும் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டியிருக்கும்" என்றும் அமைச்சர் கூறினார்.

"உற்பத்தியை நாளொன்றுக்கு 97 லட்சம் பீப்பாய்கள் குறைப்பதான இந்த வரலாறு காணாத முடிவு, முன்னெப்போதும் இருந்திராத மந்தநிலைக்கான ஒட்டுமொத்த பதில் நடவடிக்கை," என்று ஒபெக் தலைமை செயலர் முகமது பெர்கிண்டோ, கூறினார். எந்த முடிவை எடுத்தாலும், இந்தியா போன்ற நாடுகளின் நலனை கருத்தில்கொண்டு எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை, ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 92.69 ஆக இருந்தது. இது நாட்டிலேயே மிக அதிக விலையாகும். சண்டிகரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.04 க்கு விற்கப்பட்டது, இது நாட்டிலேயே மலிவானது.

செளதி அரேபியா மற்றும் ஒபெக் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதால் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கும். வரவிருக்கும் மாதங்களில் எண்ணெய் விலை மேலும் உயரும், இது கோவிட்டுக்குப் பிந்தைய மீட்புக் கட்டத்தில் அதிக சிரமங்களுக்கு வழிவகுக்கும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கும் என்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எரியாற்றல் நிபுணர் ஷைலஜா நாராயண் பிபிசியிடம் கூறினார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதற்கு ஒரே காரணம் அல்ல என்று ஷைலஜா கூறுகிறார்.

"இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நுகர்வோர் வெவ்வேறு விலையில் பெட்ரோல் மற்றும் டீசலைப் பெறுகிறார்கள். இதற்குக் காரணம் மாநில அரசுகளும் உள்ளூர் நிர்வாகமும் இவற்றின் மீது வெவ்வேறு அளவு வரிகளை விதிக்கின்றன. வெளிநாட்டு சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அத்தனை அதிகம் இல்லை. இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அதிக விலையில் விற்கப்படுவதற்கு அதன் மீது விதிக்கப்படும் வரியே முக்கியக் காரணம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விலைகள் ஏன் உயர்கின்றன?

விலைகள் ஏன் உயர்கின்றன?
Getty Images
விலைகள் ஏன் உயர்கின்றன?

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிப்பதில் பல விஷயங்கள் உள்ளன. இந்த நாட்களில் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 21 ரூபாய். பல நிபுணர்களின் கூற்றுப்படி இது மிக அதிகம். இது குறைக்கப்பட்டால் நாட்டில் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்.

மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரி அதாவது வாட் வரி விதிக்கின்றன. மும்பை, டெல்லி போன்ற நகரங்களில், இந்த வரி மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக இந்த நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உள்ளது.

இவை தவிர, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி அதிகரிப்பு மேலும் பல காரணங்களால் ஏற்படுகிறது.

இந்தியாவில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களால் சர்வதேச விலைகளின் அடிப்படையில் பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படுகிறது. எனவே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போது, இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது என்று ஷைலஜா கூறுகிறார்.

மறுபுறம், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தால், அன்றாட பெட்ரோல் விலையில் நாம் சரிவை பார்க்கமுடிகிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையை விட இந்தியாவில் எண்ணெய் விலை அதிகம். முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் அரசு மானியம் அளித்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது சந்தை விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மோதி அரசு தொடர்ந்து பெட்ரோல் மீதான கலால் வரியை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Why India disappoints on Saudi Arabia's decision about Crude Oil?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X