For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் பகைமையின் பின்னணி

By BBC News தமிழ்
|

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்?

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?
REUTERS/EPA
சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?

சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன் ஒத்துப்போவதில்லை?

இந்த இரண்டுமே சக்திவாய்ந்த அண்டை நாடுகள் - பிராந்திய ஆதிக்கத்திற்காக இவையிரண்டும் கடுமையாக முட்டி மோதுகின்றன.

பல ஆண்டுகளாக இந்த நாடுகளுக்கிடையே உள்ள முரண்பாடுகள், மத வேறுபாடுகளால் அதிகரித்து வருகிறது. அவை இரண்டும் இஸ்லாமின் இரண்டு முக்கிய பிரிவுகளில் ஒன்றை பின்பற்றுகின்றன - இரான் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் நாடு, சௌதி அரேபியா சுன்னி முஸ்லிம் சக்தியாகத் தன்னைக் கருதுகிறது.

அவர்களுக்குள்ளான இந்த மத வேறுபாடு மத்திய கிழக்கு நாடுகளின் அதிகார வரைபடத்தில் பிரதிபலிக்கிறது. சில நாடுகளில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், வேறு சில நாடுகளில் ஷியா முஸ்லிம்களின் பெரும்பான்மையாகவும் உள்ளனர். தங்கள் நாடுகளின் மத அடையாளத்துக்கு ஏற்ப அவை இரானிடம் இருந்தோ, சௌதி அரேபியாவிடம் இருந்தோ ஆதரவையும் வழிகாட்டுதலையும் நாடுகின்றன.

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?
BBC
சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?

வரலாற்று ரீதியாக, இஸ்லாமின் பிறப்பிடமான சௌதி அரேபியா தன்னை இஸ்லாம் உலகின் தலைவராக கருதியது.

இதற்கு சவால் விடும் விதமாக 1979 ஆம் ஆண்டு இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி இப்பிராந்தியத்தில் ஒரு புதிய வகை அரசை உருவாக்கியது. இந்த மத சாம்ராஜ்ஜியம் இந்த மாதிரியை தனது எல்லைகளைக் கடந்தும் பரப்புவதை இலக்காகக் கொண்டிருந்தது.

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில், சௌதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஒரு சில தொடர் நிகழ்வுகளால் கூர்மையடைந்த வண்ணம் உள்ளன.

2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படை இராக் மீது நடத்திய போரில் சுன்னி முஸ்லிம் மதப்பிரிவை பின்பற்றிய அராபியரான சதாம் உசேன் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இவர் இரானின் மிக முக்கிய எதிரியாக இருந்துவந்தார். இராக்கை சமன்செய்துவந்த முக்கியமான ராணுவ பலமான சதாம் வீழ்ந்தது முதல் இராக்கில் இரானின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.

2011 ஆம் ஆண்டு அரபுலகில் நிகழ்ந்த எழுச்சி அப்பகுதி முழுவதிலும் அரசியல் உறுதியற்றத் தன்மையை உருவாக்கியது. இந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு குறிப்பாக சிரியா, பஹ்ரைன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்ள இரானும் சௌதி அரேபியாவும் மேற்கொண்ட நடவடிக்கைகள், பரஸ்பரம் சந்தேகங்களை அதிகப்படுத்தியது.

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?
BBC
சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?

தமது அதிகாரத்தை நேரடியாகவோ, ஆதரவு நாடுகள் மூலமோ இப்பகுதி முழுவதும் நிறுவி இரான் முதல் மத்தியத்தரைக்கடல் வரையிலான நிலப்பகுதியைக் கட்டுப்படுத்த இரான் விரும்புவதாக அந்நாட்டின் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எப்படி திடீரென சில விஷயங்கள் மோசமானது?

பிராந்திய போராட்டங்களில் பல வழிகளை கையாண்டு இரான் வெற்றி பெறுவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான பகை அதிகரித்து வருகிறது.

சிரியாவில், அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு இரான் (மற்றும் ரஷ்யா) அளித்துவரும் ஆதரவு சௌதி அரேபிய ஆதரவு கிளர்ச்சியாளர் குழுவை பெருமளவில் முடக்கிவிட்டது.

உயர்ந்து வரும் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சௌதி அரேபியா முயற்சிப்பதும், அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின் சல்மானின் ராணுவ சாகசவாதமும், அங்குள்ள பதற்றத்தை மேலும் மோசமாக்குகிறது.

தமது அண்டை நாடான ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரை மொகம்மது பின் சல்மான் நடத்திவருகிறார். அங்கு பெருகிவருவதாகக் கருதப்படும் இரானின் செல்வாக்கை மட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை சௌதி எடுத்தது. ஆனால் மூன்றாண்டு முயற்சிகளுக்குப் பிறகு இது அதிக விலை தரவேண்டிய சூதாட்டம் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே இரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா என்ற ஷியா தீவிரவாதக் குழு அரசியல் ரீதியாக, ராணுவரீதியாக செல்வாக்கு பெற்றுள்ள லெபனான் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதற்காக அந்நாட்டுப் பிரதமரை பதவி விலகச் செய்ய சௌதி அழுத்தங்கள் தருகிறது.

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?
BBC
சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?

இதில் வெளிநாட்டு சக்திகளின் பங்கும் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவால் சௌதி அரேபியா துணிச்சல் பெற்றுள்ளது. மறுபுறம், இரான் நாட்டை ஆபத்தான அச்சுறுத்தலாக பார்க்கும் இஸ்ரேல், இரானை கட்டுப்படுத்த சௌதி அரேபியா எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறது. சிரியாவில் தமது நாட்டு எல்லைக்கு அருகாமையில் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து யூத நாடான இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.

இரான் அணு குண்டு தயாரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு அதற்கு சில சலுகைகளை அளித்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் இரானோடு 2015ல் செய்துகொண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்த நாடுகள் இஸ்ரேலும், சௌதி அரேபியாவும்.

அவர்களின் பிராந்திய கூட்டாளிகள் யார்?

மத்திய கிழக்கின் இந்த வரைபடம் ஷியா- சுன்னி முஸ்லிம்களின் பிளவை நமக்கு விளக்குகிறது.

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?
BBC
சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?

ஐக்கிய அரபு நாடுகள், குவைத், பஹ்ரைன், எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் சௌதிக்கு ஆதரவளிக்கும் சுன்னி முஸ்லிம்கள் அதிகமுள்ள பெரிய நாடுகள்.

இந்நிலையில், இரானால் வலுவாக ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய அரசாங்கம் இரான் முகாமில் உள்ளது. மேலும், அதனுடன் சேர்ந்து இரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஷியா போராட்டக் குழுக்கள், ஆகியவை சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சௌதி - இரானுக்கிடையிலான போட்டி எவ்வாறு நடத்தப்படுகிறது?

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'பனிப்போர்' என்று அழைக்கப்படும் அதிகாரப் போட்டியை ஒத்த, பிராந்திய வடிவமாக இந்த இரான்-சௌதி போர் திகழ்கிறது.

இரானும், சௌதி அரேபியாவும் நேரடியாக சண்டையிடவில்லை. ஆனால், அவை அப்பகுதி முழுவதும் பல ஆதரவாளர்களைக் கொண்டு மோதிவருகின்றன.

சௌதி மன்னருடன் டிரம்ப்
EPA
சௌதி மன்னருடன் டிரம்ப்

இதற்கு சிரியா வெளிப்படையான உதாரணம். ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியா மீது ஏவிய பேலிஸ்டிக் ஏவுகணை இரானால் வழங்கப்பட்டது என்று சௌதி குற்றம்சாட்டிவருகிறது. இந்த சம்பவத்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவில் வீழ்ச்சியையும், ஏமனில் பின்னடைவையும் சந்தித்த சௌதி அரேபியா லெபனான் நாட்டை ஆதரவாளர்களைக் கொண்டு நடத்தும் 'பதிலாள் போர்களமாக' (Proxy battlefield) ஆக்க சௌதி அரேபியா முயற்சிப்பது போல் தெரிகிறது.

சௌதியும் இரானும் நேரடிப்போருக்கு தயாராகின்றனவா?

இதுவரை ஆதரவாளர்கள் அல்லது பதிலாள்கள் மூலமாக மட்டுமே இவ்விரு நாடுகளும் மோதிக் கொண்டன. உண்மையாக நேரடி போருக்கு அவர்கள் தயாராகவில்லை, ஆனால் ஏமனில் இருந்து சீறிப்பாயும் ராக்கெட் ஒன்று சௌதி தலைநகர் ரியாத் விழுமென்றால் இந்த சமநிலை மாறிவிடும்.

இரண்டு நாடுகளும் சந்திக்கும் கடல் எல்லையான வளைகுடா பகுதி, அவர்கள் நேரடியாக மோதிக் கொள்ளும் இடமாக அமையலாம். ஆனால் இங்கு சண்டை மூளுமானால், அது இன்னும் பெரும் போராக மாறும் ஆபத்தும் உள்ளது. அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடாவில் பயணம் செய்வது அடிப்படைத் தேவை. சர்வதேச கப்பற் போக்குவரத்துக்கும் எண்ணையை கொண்டு செல்வதற்கும் இன்றியமையாத இந்தக் கடல் வழியில் தடங்கலை ஏற்படுத்தும் ஒரு சண்டை உடனடியாக அமெரிக்க கடல் மற்றும் வான்படைகள் இங்கு வருவதற்கு வழி வகுக்கலாம்.

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?
BBC
சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்?

நீண்ட காலமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், இரானை மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் ஒரு சக்தியாகவே பார்த்து வருகின்றன. சௌதியின் தலைமையும் இரானை தம்முடைய இருப்புக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இரானின் உயரும் செல்வாக்கை எதிர்க்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேவையானது என தாம் நினைக்கும் இடத்தில் எடுக்க அந்நாட்டு இளவரசர் தயாராக இருப்பதாக தெரிகிறது.

இதில் ஆபத்து என்னவெனில், சௌதியின் புதிய செயலூக்கம் இப்பிராந்தியத்தின் உறுதியற்ற தன்மைக்கான இன்னொரு காரணமாக வேகமாக ஆகிவருகிறது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Saudi Arabia and Iran are at loggerheads. They have long been rivals, but it's all recently got a lot more tense. Here's why?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X