• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை ஸ்ரீதேவிக்கு தேசியக்கொடி மரியாதை ஏன்?

By Bbc Tamil
|

திறமைமிக்க தென்னிந்திய திரைப்படத் தாரகை என்ற முத்திரையுடன் மும்பையில் காலூன்றிய ஸ்ரீதேவியின் 'ஜுதாயி' இந்தி திரைப்படம் வெளியானது 1997 பிப்ரவரி 28. ஆண்டுகள் உருண்டோட, மும்பையில் ஆலமரமாய் வேரூன்றிய ஸ்ரீதேவி துபாயில் வீழ்ந்தாலும், பிப்ரவரி 28ஆம் தேதியன்று சாம்பலாக மும்பை மண்ணில் கலந்தது காலத்தின் நகைமுரண்.

உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீதேவி தமிழில் அறிமுகமான நடிகை, தமிழச்சி என்று சொல்வதை மற்றவர்கள் மறுத்து அவரை இந்தி நடிகையாகவே பார்ப்பது அவர் செய்த சாதனை, அவர்மீது மக்கள் கொண்ட பற்று.

தமிழ் திரையுலகில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி, மலையாள மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, தெலுங்கு திரையுலகத்தில் ராணியாய் இடம் பிடித்து, இந்தித் திரையில் சக்ரவர்த்தினியாக ஆதிக்கம் செலுத்தி, இறுதியில் காலத்திற்கு இரையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் சாம்பலாவதற்கு முன் மூவர்ணக் கொடி போட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

துபாயில் திருமண விழாவில் கலந்துகொள்ள விமானத்தில் ஏறிச் சென்று அமர்ந்த அவர் திரும்பி வரும்போது சிறப்பு விமானத்தில் சடலமாக கொண்டுவரப்பட்டார்.

ஆறடி குளியலறைத் தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீர், நாடு புகழும் ஸ்ரீதேவியின் உயிரை குடித்துவிட்டது.

மும்பை அந்தேரியில் செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் சுமார் ஐந்தரை கி.மீ. தூரத்தைக் கடந்து சென்று, வில்லே பார்லே பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

அவர் உடலை சுமந்து சென்ற பாதை நெடுகிலும் காவல்துறையினரும், சிறப்பு ஆயுதப்படை போலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

உடலுக்கு மூவர்ணக்கொடி மரியாதை ஏன்?

ஆனால், நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை வழங்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.

மாநில அரசின் சார்பில் மரியாதை செய்வது என்பதன் பொருள், இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்துள்ளது என்பதாகும். நடிகை ஒருவரின் இறுதி ஊர்வலத்திற்கு உச்சகட்ட காவல் துறை பாதுகாப்பு, மூவர்ணக் கொடி மரியாதை, துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க இறுதி மரியாதை என்பது அனைவரின் மனதிலும் கேள்விகளை எழுப்பியது.

பொதுவாக தலைவர்களுக்கும், பிரதமர், துணைப் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் சாசனத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அரசு தரப்பில் இறுதி மரியாதை வழங்கப்படும்.

அரசு மரியாதை பெறத் தகுதியுள்ளவர்களின் இறுதி பயணத்திற்கு மாநில அல்லது மத்திய அரசு ஏற்பாடு செய்யும். அவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கும்விதமாக மூவர்ணக் கொடி போர்த்தி, துப்பாக்கி குண்டுகளை முழக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்படும்.

அரசு மரியாதை யாருக்கு என்பதை தீர்மானிப்பது யார்?

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்ட அரசு மரியாதை வழங்கும் வழக்கம் இப்போது மாறிவிட்டது. இப்போது மாநில அரசின் சார்பில் இறுதிச்சடங்கு அல்லது மாநில கௌரவம் என்பது சம்பந்தப்பட்டவரின் நிலை அல்லது சமூக நிலையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கின்றனர்.

சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சராக பணியாற்றிய எம்.சி நானாயியாஹ், இவ்வாறு கூறுகிறார்: "இறந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் முடிவை ஆளும் அரசின் விருப்பத்தை சார்ந்துள்ளது. யாருக்கு மாநில அரசின் மரியாதை வழங்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் விதிமுறைகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை."

அரசியல், இலக்கியம், சட்டம், அறிவியல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பிரபலமானவர்கள் அல்லது தங்கள் துறையில் குறிப்பிட்த்தக்க சேவை புரிந்தவர்களுக்கு அரசின் இறுதி மரியாதை வழங்கப்படுகிறது.

श्रीदेवी
Getty Images
श्रीदेवी

முடிவெடுப்பவர் முதல்வரா?

இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுப்பவர் பொதுவாக மாநில முதலமைச்சராகவே இருப்பார். அவர் தனது அமைச்சரவையின் மூத்த சகாக்களுடன் கலந்தாலோசித்து இதுபற்றி முடிவெடுக்கலாம்.

எடுக்கப்பட முடிவு, காவல் ஆணையர், துணை ஆணையர் உட்பட மாநில அரசு காவல்துறையின் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அரசு மரியாதைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.

சுதந்திர இந்தியாவில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு, முதல் முறையாக முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது தேசத் தந்தை மகாத்மா காந்திக்குத்தான்.

நாட்டின் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி உட்பட பலருக்கு அரசு மரியாதையுடன் இறுதி விடை அளிக்கப்பட்டது.

வேறு யாருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது?

அரசியல் சம்மந்தப்படாதவர்களில் அரசு மரியாதை வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் அன்னை தெரீசா இடம்பெறுகிறார். சிறப்பான சமூக சேவை புரிந்த அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டபோது யார் மனதிலும் கேள்விக்கணைகளை தொடுக்கவில்லை.

லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த சத்ய சாய்பாபா 2011 ஏப்ரல் மாதம் காலமானபோது மகாராஷ்டிர அரசு, அரசு மரியாதை அளித்து அவருக்கு கெளரவம் செய்தது.

அரசு மரியாதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்காக பிபிசி பலருடன் உரையாடியது. உள்துறை அமைச்சக செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.சி. ஸ்ரீவஸ்தவிடம் பேசியபோது, இறுதி மரியாதை என்ற கெளரவத்தை யாருக்கு வழங்கலாம் என்று முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்றார் அவர்.

"திரையுலகை பிரபலங்களில் ஸ்ரீதேவிக்குதான் முதன்முதலாக அரசு மரியாதை என்ற சிறப்பு கெளரவம் வழங்கப்படவில்லை, இந்தி திரைப்பட நடிகர் சஷி கபூருக்கு மாநில அரசு மரியாதை வழங்கியது" என்பதை நினைவுகூர்கிறார் ஸ்ரீவஸ்தவ்.

அரசு மரியாதை பெற்ற சஷி கபூர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சஷி கபூர் மறைந்தபோது, அவரை அரசு மரியாதையுடன் அனுப்பி வைத்தது என்றாலும், திரையுலக சாம்ராஜ்ஜியத்தில் முடிசூடா மன்னர்களாக வலம்வந்த ராஜேஷ் கன்னா, வினோத் கன்னா, ஷம்மி கபூர் உட்பட பலருக்கு இந்த கெளரவம் வழங்கப்படவில்லை.

அரசு மரியாதை வழங்கப்படும்போது அதுதொடர்பான சர்ச்சைகளும், விவாதங்களும் பலமுனைகளில் இருந்து எழுவது இயல்பான ஒன்றே.

ஆனால் மத்திய அரசின் சார்பில் அரசு மரியாதை அளிப்பதாக இருந்தால் அதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதுவே நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் பல சந்தர்ப்பங்களில் தேசியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

ஒருவரின் இறப்பை தேசிய துயரமாக மத்திய அரசு அறிவித்தால் என்ன நடைமுறை கடைபிடிக்கப்படும்?

இந்திய தேசியக்கொடி பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் இந்திய தேசியக்கொடி சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக் கொள்வோம்.

तिरंगा
AFP
तिरंगा
  • தேசியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும், அரைக்கம்பத்தில் தேசியக்கொடி எவ்வளவு நாட்கள் இருக்கலாம் என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார் என்கிறது இந்திய தேசியக்கொடி சட்டம்.
  • தேசிய அளவில் பொது விடுமுறை அறிவிக்கப்படும்.
  • சவப்பெட்டியின்மீது தேசியக்கொடி போர்த்தப்படும்.
  • சிதையூட்டல் அல்லது புதைக்கப்படும்போது துப்பாக்கி முழங்க வீரவணக்கம் செலுத்தப்படும்.

பிரதமராக இருக்கும்போதே இறந்தவர்கள்

ராஜீவ் காந்தி
AFP
ராஜீவ் காந்தி
  • ஜவஹர்லால் நேரு
  • லால் பகதூர் சாஸ்திரி
  • இந்திரா காந்தி

முன்னாள் பிரதமர்கள்

  • ராஜீவ் காந்தி
  • மொரார்ஜி தேசாய்
  • சந்த்ரசேகர் சிங்

முன்னாள் முதலமைச்சர்கள்

ஜோதி பாசு

ஈ.கே.மாலாங்க்

சிறப்பு பிரமுகர்கள்

மகாத்மா காந்தி

அன்னை தெரீசா

கங்குபாய் ஹங்கல் (பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகி)

பீம்சென் ஜோஷி

பால் தாக்கரே

சரப்ஜீத் சிங்

ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங்

சமூக ஊடகங்களில் ஆட்சேபணை

சரி, இப்போது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதையைப் பற்றி பார்ப்போம். தேசியக் கொடி போர்த்தப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வேகமாக சுற்றிவர, விமர்சனங்களோ அதைவிட வேகமாகவும், சூடாகவும் வெளிப்பட்டது.

துஷார் என்பவர் கேட்கிறார், ''ஸ்ரீதேவியின் உடலுக்கு மூவர்ணக் கொடி மரியாதை எதற்கு? அவர் நாட்டுக்காக தியாகம் செய்தவரா?''

"ஒரு சினிமா நடிகையின் மரணத்தை, நம் நாட்டை பாதுகாக்க, எல்லையில் உயிர் துறக்கும் சிப்பாய்களுடன் ஒப்பிட முடியுமா? நாட்டுக்கு சேவை செய்வது, சினிமாவில் நடிப்பதற்கு சமமானதா?"

தஹ்சீன் பூனாவலா தனது கருத்தை சொல்கிறார், "ஸ்ரீதேவிக்கு முழு மரியாதை செலுத்தப்பட்டது, அவரது சடலத்திற்கு மூவர்ணக் கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. அப்படியானால், அவருக்கு அரசின் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறதா? நான் வெறுமனே கேட்கிறேன் ... நான் யாரையும் அவமதிக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.

இண்டியா ஃபர்ஸ்ட் ஹேண்டலில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது, "ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டதைப் போல நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களது பங்களிப்புக்காக இத்தகைய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்."

பிற செய்திகள்:

BBC Tamil
 
 
 
English summary
நடிகை ஸ்ரீதேவிக்கு மூவர்ணக்கொடி மரியாதை ஏன்? இந்த விவாதமே இன்று பரவலான சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இது சரியா, தேசியக்கொடி மரியாதை, துப்பாக்கித் தோட்டாக்கள் மரியாதை யாருக்கு வழங்கப்படவேண்டும்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X