For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் மீண்டும் ஒரு பெண் முதல்வர்?!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மீண்டும் ஒரு பெண்தான் முதல்வராக வருவார் என்று ஆருடங்கள் கூறிவருகின்றன. அதற்கு ஏற்றார் போலவே கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளது பாஜக.

டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்று பெருமை சேர்த்தவர் பாஜகவின் சுஷ்மா சுவராஜ். அவரைத் தொடர்ந்து மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்ஷித். அவருக்குப் பின் வந்த அர்விந்த் கெஜ்ரிவால் 50 நாட்கள் கூட முதல்வராக நீடிக்கவில்லை. எனவேதான் மீண்டும் முதல்வராக ஒரு பெண்தான் வருவார் என்று கணிக்கின்றனர் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

1993 முதல் 2013 வரை 20 ஆண்டுகளில் 5 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது டெல்லி. ஒருமுறை பாஜகவும், மூன்று முறை காங்கிரஸ் கட்சியும் டெல்லியை ஆண்டுள்ளன.

Will a woman lead the Delhi govt again as CM?

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிதாக முளைத்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியை மண்ணை கவ்வ வைத்தது. ஆனாலும் காங்கிரஸ் தயவுடனேயே ஆட்சியில் அமர்ந்தது. ஆனாலும் 49 நாட்களுக்கு மேல் ஆம் ஆத்மியின் ஆட்சி நீடிக்கவில்லை.

இதோ மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது டெல்லி. பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்று டெல்லியின் முதல்வராக கிரண்பேடி அரியணையில் ஏறுவாரா என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கேள்வி. அதற்குமுன் டெல்லியின் அரசியல் வரலாற்றை சற்றே திரும்பி பார்ப்போம்.

70 சட்டசபை தொகுதிகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, 1991-ஆம் ஆண்டில் டெல்லி ஒன்றிய ஆட்சிப் பகுதியைத் தேசியத் தலைநகரப் பகுதியாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய 70 பேர் கொண்ட சட்டசபை ஒன்றும் டெல்லியில் அமைக்கப்பட்டது.

மாநில அந்தஸ்து

இதன் மூலம் மாநில அந்தஸ்து உள்ள தேசியத் தலைநகர் பகுதியாக டெல்லி மாறியது. டெல்லியைப் போலவே புதுச்சேரியும் மாநில அந்தஸ்து உள்ள ஒன்றியப் பகுதிதான். மற்ற ஒன்றியப் பகுதிகள் நேரடியாகக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், டெல்லியிலும் புதுச்சேரியிலும் மட்டும் தேர்தல் மூலம் அரசுகள் அமைக்கப்படுகின்றன.

கைப்பற்றிய பாஜக

டெல்லி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு 1993-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.

மாநில அந்தஸ்து பெற்ற டெல்லியின் முதல் முதலமைச்சராக மதன்லால் குரானா பதவியேற்றார். பின்னர் சாகிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதல்வர்களாகப் பதவியேற்றார்கள். முதல் சட்டப்பேரவையிலேயே மூன்று முதல்வர்களை டெல்லி மாநிலம் பார்த்தது.

Will a woman lead the Delhi govt again as CM?

மூன்று முறை முதல்வர்

பாஜகவின் மீது ஏற்பட்ட அதிருப்தியில் 1998-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு இறுதி வரை காங்கிரஸின் ஷீலா தீட்சித் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தார்.

தலைநகரில்  அதிகாரம்

மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் தங்கள் வசம் இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல மத்தியில் ஆளும் கட்சிகள் டெல்லி தங்கள் வசம் இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். 1993-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தபோது டெல்லியை பாரதிய ஜனதா கட்சி வென்றது.

‘கை' பற்றிய காங்கிரஸ்

1998-ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டெல்லி காங்கிரஸ் வசமானது. மீண்டும் 2003-ஆம் ஆண்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்தபோது காங்கிரஸே வெற்றி பெற்றது. 2008-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருந்தபோது டெல்லியில் காங்கிரஸே வெற்றி பெற்றது.

பெண் முதல்வர்கள்

1993-ஆம் ஆண்டின் தேர்தலைத் தவிர்த்து மற்ற தேர்தல்களில் ஒரு ஒற்றுமையுண்டு. முதல்வர் பதவிக்கு முக்கியக் கட்சிகளில் ஒன்று பெண்ணை வேட்பாளராக முன்னிறுத்துவதுதான் அது. 1998-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வர் பதவிக்குக் களமிறக்கப்பட்டார்.

ஷீலா தீக்ஷித்

அப்போது நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதலமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்து ஷீலா தீட்சித் முதல்வரானார். 2003, 2008, 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

கிரண்பேடி

மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் வசீகரம், பிரச்சார வலிமை ஆகியவை பா.ஜ.க.வின் பலம். அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலோடு இணைந்து நின்று,பிறகு ஆம் ஆத்மி கட்சியின் எதிர்ப்பாளராக மாறி பா.ஜ.க.வில் சேர்ந்த கிரண் பேடியைத் தங்கள் முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி

மத்தியில் ஆட்சி செய்த கட்சியே டெல்லியிலும் வெற்றி பெற்றது அதுதான் முதல்முறை. 2013-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் அக்கட்சியின் உதவியுடன் ஆம் ஆத்மி ஆட்சியில் உட்கார்ந்தது. இம்முறையும் தூய்மையான அரசியல் என்னும் கோஷத்தையும், எளிமையான பிரச்சாரத்தையும் கெஜ்ரிவாலின் நற்பெயரையும் நம்பிக் களத்தில் நிற்கிறது.

ஊழல் எதிர்ப்பு இயக்கம்

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அண்ணா ஹசாரேவுக்கு தோள் கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் அதிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியை 2012, நவம்பர் 26-இல் தொடங்கினார். சில மாதங்களிலேயே அக்கட்சிக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. கட்சி தொடங்கி ஓராண்டு முடிவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிற கட்சிகளிலிருந்து முக்கியத் தலைவர்களும் ஆம் ஆத்மியில் சேர்ந்தனர்.

வெற்றிக்களிப்பில்

இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனியாகப் போட்டியிட்டது ஆம் ஆத்மி. முடிவில், 28 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது.

முதல்வரான கெஜ்ரிவால்

மேலும், மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று முதல்வரானார். இது டெல்லிவாசிகளை மட்டுமின்றி மற்ற மாநில மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

49 நாட்களில்

இந்நிலையில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஆட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி 14-இல் ஆம் ஆத்மி ராஜினாமா செய்தது. இதையடுத்து, சட்டப்பேரவை முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. 49 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார் அர்விந்த் கெஜ்ரிவால்.

சரிந்த செல்வாக்கு

2013 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளிலும் லோக்சபா தேர்தலின்போது 2, 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் அதன் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது வெட்ட வெளிச்சமானது.

பெண் முதல்வர்

எனவே கடந்த முறைபோல தொங்கு சட்டசபையாக இல்லாமல் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து சரியான முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். டெல்லியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெண் முதல்வரை சந்திக்க உள்ளனர் டெல்லி வாசிகள்

அதிகார பிரச்சினை

அதேசமயம் பிற மாநிலங்களில் இருப்பதுபோல டெல்லிக்கு அதிகாரங்கள் கிடையாது. காவல் துறைகூட டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் காவல்துறை செயல்படுகிறது. அதேபோல எந்த முக்கிய முடிவாக இருந்தாலும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

முழு அதிகாரம்

மத்திய அரசின் ஆட்சி மையம் கொண்டுள்ள பகுதியாக டெல்லி இருப்பதால் மாநில அந்தஸ்துக்குரிய முழு அதிகாரங்கள் இங்கு வழங்கப்படவில்லை.

இந்தியாவின் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்குப் பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால், மாநிலங்களின் தலைநகர்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் பொதுவாகக் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

டம்மி முதல்வரா?

டெல்லி முதல்வருக்கு அதிகாரமே இல்லாததால் மற்ற மாநில முதல்வர்களைப் போல செயல்பட முடிவதில்லை. தேசியக் கட்சிகள் டெல்லியில் ஆட்சியில் உட்கார்ந்தபோது அதிகாரங்கள் பற்றி எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி பதவியேற்றபோது அதிகாரங்கள் பற்றிய பிரச்சினை வெடித்தது.

போராடிய முதல்வர்

பணியைச் சரியாகச் செய்யவில்லை என்று கூறி நான்கு காவலர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் கோரினார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால் அதற்காக அவரே இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தினார்.

அதிகாரம் கிடைக்குமா?

மற்ற மாநிலங்களுக்கு உள்ளதுபோல டெல்லிக்கும் மாநில அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் அங்குத் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகின்றன. களத்தில் பா.ஜ.க.வும் ஆம் ஆத்மியும் கடுமையாகப் போராடுகின்றன.

கில்லி முதல்வராவாரா கிரண்பேடி

இம்முறை டெல்லியில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக கிரண்பேடி அமரும் பட்சத்தில் அதிகார பிரச்சினை தலை தூக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் சட்டசபையை விட கெஜ்ரிவால் சாலைகளில்தான் அதிகம் நேரம் செலவிட வேண்டியிருக்கும் என்றே கூறப்படுகிறது.

எது எப்படியோ எல்லாம் டெல்லிவாலாக்களின் கைகளில்தான் உள்ளது.

English summary
Will Delhi see another woman CM soon? The talk of the capital goes like this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X