4 டோஸ் போட்ட பிறகும்.. இளம் பெண்ணுக்கு கொரோனா! இந்தூர் ஏர்போர்டில் பரபரப்பு.. மருத்துவர்கள் விளக்கம்
இந்தூர்: துபாய் செல்லவிருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணின் வேக்சின் ஹிஸ்டரி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வேக்சின் பணிகள் மூலம் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தான், திடீரென தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 27ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன் பிறகே உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய எனப் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கொரோனா.. சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி கடிதம்

ஓமிக்ரான் பாதிப்பு
இந்த புதிய ஓமிக்ரான் பாதிப்பால் பல நாடுகளும் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்தியாவிலும் அப்படிப் பல கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் கொரோனா உறுதியாகும்போது, அது மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள்
அதேபோல இந்தியாவில் இருந்து வருவோருக்கும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. துபாய் செல்லும் நபர்களுக்கு 48 மணி நேரம் முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், விமான நிலையத்தில் ரேப்பிட் டெஸ்ட் செய்ய வேண்டும். அதன்படி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து இளம் பெண் ஒருவர் துபாய் செல்ல விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்குச் செய்யப்பட்ட ரேப்பிட் பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதியானது.

லேசான பாதிப்பு
கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அந்த இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எந்தவொரு கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றும் ஒரு நாள் முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகடிவ் என்றே முடிவு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூரில் இருந்து துபாய் செல்லவிருந்த அனைவரையும் பரிசோதனை செய்ததாகவும் அதில் இந்த இளம் பெண்ணுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதியானதாகவும் இந்தூர் சுகாதாரத் துறையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பிரியங்கா கவுரவ் தெரிவித்துள்ளார்,

4 டோஸ் வேக்சின்
இதில் ஹைலேட்டான விஷயம் என்னவென்றால், அந்த இளம் பெண் ஏற்கனவே 4 முறை கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டவர் ஆவர். அவர் இரு வேறு நாடுகளில் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 2 டோசும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி 2 டோசும் போட்டுக் கொண்டுள்ளார். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் சீனோபார்ம் தடுப்பூசி போட்டிருந்தால் கூடுதலாக இன்னொரு வேக்சின் போட்டுக் கொள்கிறார்கள். அப்படி தான் இந்த பெண்ணும் நான்கு டோஸ் வேக்சின் போட்டுள்ளார்.

மருத்துவர் தகவல்
இருப்பினும் அதையும் தாண்டி இந்த 30 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம் வந்ததாகவும் மோவ் நகரில் நடந்த திருமணம் ஒன்றில் இவர் கலந்து கொண்டதாகவும் டாக்டர் பிரியங்கா கவுரவ் தெரிவித்துள்ளார். இவர் வேக்சின் போட்டுக் கொண்டாலும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்றும் ஆனால் அது தீவிரமான பாதிப்பாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இந்த பெண்ணும் வேக்சின் போட்டுக் கொண்டதாலேயே லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைவில் 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.