For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை : மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் சிறையில் இன்று காலை 6.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் காலை 7.01 மணிக்கு யாகூப் மேமன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி மருத்துவர்கள் அறிவித்தனர்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி 13 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றினர். இதில் 257 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 713 பேர் படுகாயமடைந்தனர். சுதந்திர இந்தியாவின் முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது.

yakub

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமன், பாகிஸ்தானில் இருந்து வந்து நேபாளத்தில் இந்திய அதிகாரிகளிடம் சரணடைந்தவர். தம் மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்காக யாகூப் மேமன் சரணடைந்திருந்தார். அத்துடன் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக பல்வேறு தகவல்களையும் வழங்கியிருந்தார்.

இருப்பினும் மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதனால் ஜனாதிபதியிடம் யாகூப் மேமன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார். இக்கருணை மனுவும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை வரும் யாகூப் மேமன் இன்று தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டது.

ஆனால் யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்று 300க்கும் மேற்பட்ட பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மரண தண்டனையை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாகூப் மேமனுக்கு கருணை காட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கடைசி நேர சட்ட வாய்ப்புகளை, கருணை மனுக்களை யாகூப் மேமன் மேற்கொண்டார். உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமனின் நிவராண மனு மீதான விசாரணையில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான கூடுதல் பெஞ்ச் முன்பு யாகூப் மேமன் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது. அந்த 3 நீதிபதிகள் பெஞ்சும் யாகூப் மேமனின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரித்தார். அப்போது ஜனாதிபதியும் தம் முன் உள்ள யாகூப் மேமனின் கருணை மனு மீது முடிவெடுக்க நேற்று இரவு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் மிக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தமது கருணை மனு மீது இரவோடு இரவாக ஜனாதிபதி முடிவெடுக்கக் கூடாது எனக் கூறி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதியும் மேமனின் கருணை மனுவை நிராகரித்தார்.

இந்நிலையில் மேமன் தாக்கல் செய்த மனு மீது இன்று அதிகாலை 2.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுபோன்ற அதிகாலையில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது இதுவே முதல் முறை. அப்போது, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கு தண்டனையை 14 நாட்களுக்கு நிறைவேற்றக் கூடாது என்று மேமன் தரப்பில் வாதிடப்பட்டது. மேமன் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் வாதாடினார்.

விடிய விடிய நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் அதிகாலை 4.58 மணிக்கு யாகூப் மேமனின் கடைசி சட்ட முயற்சியையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. யாகூப் மேமனின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் யாகூப் மேமனுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து இன்று காலை யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 6.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்னராக அவரை உறவினர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு புத்தாடைகள் கொடுக்கப்பட்டன.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்றுதான் பிறந்த நாள் (53 வயது) என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள் உறுதி..

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். பின்னர் காலை 7.01 மணிக்கு யாகூப் மேமன் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்து மருத்துவர்கள் அறிவித்தனர்.

முதல்வர் அறிக்கை

தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11 மணியளவில் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வரின் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது.

English summary
1993 Bombay serial blasts convict, Yakub Memon has been hanged at the Nagpur jail on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X