40 நாட்களுக்கு பிறகு.. 280 அடி ஆழத்திலிருந்து 2-ஆவது உடல் மீட்பு.. தொடரும் மேகாலயா சுரங்க பரிதாபம்

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி உள்ள பணியாளர்களில் நேற்று முன் தினம் ஒருவரது உடல் மீட்கப்பட்டது போல் இன்று மற்றொருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் ஜெயின்டிஷியா குகை பகுதியில் எலி பொந்து அளவிலான சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மழை நீர் நிரம்பியதால் கடந்த 40 நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 12-ஆம் தேதி 15 பணியாளர்கள் சிக்கினர்.
மிகவும் ஆழமான இந்த துளைகளில் இருந்து பணியாளர்களை மீட்பதில் மீட்பு பணியினருக்கு தொய்வு ஏற்பட்டது. நீச்சல் வீரர்களாலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியவில்லை.

மீட்பு படை
ஆனால் தொழிலாளர்களின் உறவினர்களோ அவர்களது கை விரலையாவது கண்ணால் காட்டுங்கள். நாங்கள் இறுதிச் சடங்குகளை செய்து கொள்கிறோம் என மீட்பு படையினரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

அதிகம்
இந்த நிலையில் இந்திய கடற்படையின் சிறிய ஆளில்லாத ரோபோ மோட்டார் வாகனம் மூலம் நேற்று முன் தினம் ஒருவரது உடல் சிதிலமடைந்த நிலையில் எடுக்கப்பட்டது. அவரது பெயர் அமீர் ஹூசைன். மேற்கு அசாமை சேர்ந்த சிராங் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே மற்றவர்களும் இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டது.

சல்பர் பொருட்கள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் சுரங்கங்களில் ஆளில்லா ரோபோ எலும்புக் கூடுகளை கண்டறிந்துள்ளது. இவை அநேகமாக தொழிலாளர்களுடையதாக இருக்கும். சுரங்கத்தில் அதிக அளவிலான சல்பர் பொருட்கள் உள்ளதால் அவை உடல்களை எளிதில் அழுக வைத்துவிடும் என்றனர்.

உறவினர்கள்
இந்த நிலையில் 280 அடி ஆழத்தில் இன்று மற்றொரு உடலையும் மீட்பு படையினர் மீட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தொழிலாளர்களும் சடலமாக கண்டெடுக்கப்பட்டது மற்ற தொழிலாளர்களின் உறவினர்களை கவலை கொள்ள வைத்தது.