கொல்லைப்புற கொட்டகையிலிருந்து பேசுறேன்.. அங்க "ஸ்டார்"ஸெல்லாம் நல்லாருக்கா?
லண்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரருடன், தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு, சாதாரண ரேடியோ ஒலிபரப்பு அலைவரிசை மூலம் பேசி சாதனைப் படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர்.
பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்த பணிகளை செய்து வருகின்றனர். மும்பெல்லாம் விண்வெளி மைய திட்ட அதிகாரிகளே பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தான் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேச முடியும்.
ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர சாதனையின் மூலம் இவை எளிதாக சாத்தியமாகி வருகின்றன.

சாதாரண ஒயர்லெஸ் ரேடியோ...
இந்நிலையில், தனது திட்டமிட்ட முயற்சி மூலம் வீட்டில் இருந்த படியே சாதாரண ஒயர்லெஸ் ரேடியோ மூலம் பேசி விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயது அட்ரியென் லேன் என்பவர்.
வீட்டிலிருந்த படியே...
இங்கிலாந்தின் குளோவ்ஸ்டெர்ஷைர் நகரில் அமெச்சூர் ரேடியோ எனப்படும் ‘ஹேம் ரேடியோ' ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார் அட்ரியென். இவர் தனது வீட்டின் பின்புறமுள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு, சாதாரண ரேடியோ ஒலிபரப்பு அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களுடன் பேசி சாதனை படைத்துள்ளார்.
விண்வெளியிலிருந்து ஒரு ஹலோ...
அட்ரியெனின் அழைப்பை விண்வெளியில் வட்டமிட்டுவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ஒரு வீரர் கவனித்து விட்டார். உடனடியாக அங்கிருந்த ரிசீவரை எடுத்து, ‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என அவர் பதில் அளித்தார்.
நட்சத்திரங்கள் எப்படி இருக்கிறது?
இதைக் கேட்டு ஆனந்தமடைந்த அட்ரியென், ‘விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரங்கள் எப்படி உள்ளன?' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விண்வெளி வீரர், ‘புவிஈர்ப்பு விசையின் தூரத்தை கடந்த நிலையில் அங்கிருந்து காண்கையில் அவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக' கூறியுள்ளார்.
வர்ணஜால பூமி...
அதனைத் தொடர்ந்து, ‘உலகின் பூமிப்பந்து எப்படி காட்சி அளிக்கிறது? என அட்ரியென் கேட்க, ‘மேலே இருந்து பார்க்கும்போது இடைப்பட்ட பகுதி அனைத்தும் கும்மிருட்டாகவே உள்ளது. பூமிப்பந்து மட்டும்தான் பலவித வண்ணங்கள் கொண்ட வர்ணஜாலக் கோலமாக ரம்மியமாக தோன்றுகிறது' என விண்வெளி வீரர் பதிலளித்துள்ளார். இப்படியாக 50 வினாடிகள் இந்த உரையாடல் நடந்துள்ளது.
திட்டமிட்ட முயற்சி...
விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் தற்போது எங்கு சுற்றிக் கொண்டுள்ளது?, நமது நகரின் மீது, குறிப்பாக வெகு துல்லியமாக நமது வீட்டின் மேற்பரப்பை எந்த நேரத்தில் கடக்கும்? என பலமுறை நன்கு ஆராய்ந்து, முறையாக திட்டமிட்டு செயல்பட்டதாலேயே அட்ரியென்னால் இந்தச் சாதனையை செய்ய முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய நம்பிக்கை...
அட்ரியெனின் இந்த முயற்சி ஜெயித்ததன் மூலம் இனி வரும் காலங்களில் உலகின் எந்த மூலையில்இருந்தும், சாதாரண ரேடியோ அலை வரிசை மூலமாகவே, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட வீரர்களுடன் பேசி மகிழலாம் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.