ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் மாற்றம்.. அதிரடியாக அறிவித்த பிரதமர்.. இனி எப்படி பாடப்படும் தெரியுமா?
கான்பெரா: ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தை மாற்றியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன்.
வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். ஆனால் அதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு ஆஸ்திரேலியா.
ஆனால், அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர் என்று, அழைக்கப்படும் தேசிய கீதத்தில் 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என்று பொருள் தரும் வகையில் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி இடம் பெற்றது.

பாடல் வரிகளில் மாற்றம்
அந்த வரி நீக்கப்பட்டு, 'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் ஒன்றே மற்றும் சுதந்திரமானவர்கள் என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிளாடிஸ் பெரஜிக்லியன் இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்த நிலையில், அரசு இதை ஏற்றுள்ளது. இதுகுறித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையிலய், இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன்.

இளமை, சுந்திரம்
ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் நாங்கள் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்ற தொடருக்கு பதிலாக, நாங்கள் அனைவரும் ஒன்று மற்றும் சுதந்திரமானவர்கள் என்ற வரி இடம்பெற்றுள்ளது.

வேற்றுமையில், ஒற்றுமை
பழங்குடியினரையும் மதிக்கும் வகையில் எல்லோரும் ஒன்று என்று அந்த நாட்டு அரசு தேசிய கீதத்தை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையோடு இருப்பதுதான் பலம் என்பதை ஆஸ்திரேலியா தீர்க்கமாக நம்புகிறது.

காது கொடுத்து கேட்கலாம்
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரின்போது தேசிய கீதம் இசைப்பார்களே, அப்போது இனி உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். வித்தியாசம் பிடிபடுகிறதா என பார்க்கலாம்.