அடிக்கடி சந்திப்போம்.. டெய்லி பேசிக்குவோம்.. பட் நினைச்சு கூட பார்க்கலை.. சோக்ஷியின் தோழி பெருமூச்சு
ஆன்டிகுவா: நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம், பேசுவேன், ஆனால் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என நினைத்துக் கூட பார்க்கவில்லை என மெஹுல் சோக்சியுடன் கைதான பெண் பர்பரா ஜபாரிகா விளக்கம் அளித்துள்ளார்.
டொமினிகாவில் மெஹுல் சோக்சியுடன் கைதான பெண் யார் என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. இந்த நிலையில் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
மெஹுல் சோக்சியை தவிர்த்து வேறு யாராவது இந்தியர்களுடன் உங்களுக்கு பழக்கம் இருக்கிறதா என ஜபாரிகாவிடம் ஏஎன்ஐ கேட்டதற்கு அவர் கூறுகையில் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடத்தல் சம்பவம் ஏதும் நடக்கவே இல்லை. ஜாலி ஹார்பர் என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பாதுகாப்பான இடம். இங்கு யாரும் யாரையும் கடத்த முடியாது.

ஆகஸ்ட் மாதம்
எனக்கு மெகுலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தெரியும். அவர் வீட்டுக்கு பக்கத்தில் நான் வாடகைக்கு குடியிருந்த போது அவரை ஜாலி ஹார்பரில் சந்தித்துள்ளேன். அவர் தன்னை ராஜ் என அறிமுகம் செய்து கொண்டார். எனக்கு அவ்வப்போது அவர் மெசேஜ் அனுப்புவார். நான் மாதத்திற்கு ஒரு முறை அவருக்கு பதில் அனுப்புவேன்.

வாரத்திற்கு ஒரு முறை
இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் வாரத்திற்கு ஒரு முறை பேசுவோம். இருவரும் சேர்ந்து தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசுவோம். ஏப்ரல் - மே மாதத்தில் நான் அந்த தீவில் இருந்த போது நாங்கள் இருவரும் தினந்தோறும் பேசினோம். நான் அவருடன் பெண் தோழி அல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

பூர்த்தி
அவரது "தேவையை" பூர்த்தி செய்து கொள்ள எனக்கு அவர் பணத்தையும் பரிசுகளையும் வாரி இரைத்தவர் கிடையாது. நான் தனியாக தொழில் செய்கிறேன், அதன் மூலம் லாபம் ஈட்டுகிறேன். அவருடைய பணமோ அவருடைய உதவியோ எனக்கு தேவையில்லை. அவர் இந்தியாவிலிருந்து தப்பி வந்தவர் என்பதை என்னிடம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் தான் கியூபா சென்றதில்லை, நாம் இருவரும் ஒரு முறை கியூபாவில் சந்திப்போம் என இருமுறை என்னிடம் கேட்டிருந்தார்.

தப்பியோட்டம்
எனக்கு தெரிந்து அவர் தலைமறைவு வாழ்க்கை குறித்து சொன்னதே இல்லை. ஊர் ஊராக தப்பியோடிய அவருக்கு டொமினிகாதான் இறுதி இடம் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. என்னுடைய கருத்து என்னவெனில் அவரது கடைசி இடம் கியூபாவாக இருந்திருக்கலாம். ஆனால் எப்படியோ அவர் டொமினிகாவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்திய செய்திகள்
நான் ஒரு ஐரோப்பியர். நான் இதுவரை இந்திய செய்திகளை பார்ப்பதில்லை. அது போல் மோசடிபேர்வழிகளின் பட்டியல் குறித்தும் எனக்கு தெரியாது. எனவே கடந்த வாரம் வரை அவரது உண்மையான பெயரும் பின்புலமும் எனக்கு தெரியாமல் போயிற்று. அவரது உண்மையான பெயரும் பின்புலமும் எல்லாரும் தெரியும் என கருதவில்லை. அவரது புகைப்படங்களை பார்த்தேன். வித்தியாசமே தெரியவில்லை. ஆன்டிகுவாவில் உடல் எடை குறைந்து காணப்பட்டார். விடுமுறை காலத்தில் கரீபியன் தீவில் நடந்து சென்ற போது பிடிபட்ட நபர் மெகுல் சோக்ஷி என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார் பராபரா ஜபாரிகா.