For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிவதை நேரில் கண்ட பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்

By BBC News தமிழ்
|
ரகைனில் உள்ள கவ்டு ஜாரா கிராமம் எரிவை படம் பிடித்து ட்வீட் செய்துள்ள பிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட்
JHEAD/BBC
ரகைனில் உள்ள கவ்டு ஜாரா கிராமம் எரிவை படம் பிடித்து ட்வீட் செய்துள்ள பிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட்

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர்.

ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அரசாங்கம் அதை நிராகரிக்கிறது. தீவிரவாதிகளும், அங்குள்ள முஸ்லிம்களும் தங்கள் கிராமத்துக்கு தாங்களே தீ வைப்பதாக அரசு கூறுகிறது.

ஆனால், அங்குள்ள பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜொனாதன் ஹெட், முஸ்லிம் கிராமத்துக்கு ரகைன் பெளத்தர்கள் தீ வைத்ததை தான் நேரில் கண்டதாகக் கூறுகிறார். தான் நேரில் கண்டதை அவர் விவரிக்கிறார்:

மவ்ங்தாவில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்ப்பதற்காக மியான்மர் அரசால் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் குழுவில் நானும் ஒருவன். அந்தக் குழுவில் இணைக்கப்படுவதற்கான நிபந்தனை என்னவெனில், யாரும் தனியாகச் செல்லாமல் தொடர்ந்து அந்தக் குழுவுடன் இணைந்திருக்க வேண்டும் என்பது. அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்லுமாறு கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், அவை பாதுகாப்பனவை அல்ல என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

மங்தாவின் தெற்கே அல் லெ தான் கியாவ் நகருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சற்று முன்னர்தான் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அங்கு புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, ரோஹிஞ்சா தீவிரவாத அமைப்பினர் போலீஸ் நிலையைத் தாக்கியதை அடுத்து, அங்குள்ள மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்ட போதிலும், அங்கு குடியிருக்கும் மக்கள்தான் தீ வைத்தார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

அங்கு மூன்று தொகுப்புக்களாக புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு சுடப்படும் தொடர் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

நாங்கள் திரும்பி வரும்போது, நெல் வயல்களில் உள்ள மரங்களுக்கிடையில் இருந்து பெரும் புகை வந்து கொண்டிருந்தது. அவை கிராமத்துக்கான அடையாளமாக இருந்தன.

நாங்கள் கீழே இறங்கி, அந்த வயல்வெளியை நோக்கி விரைந்தோம். அப்போதுதான் கிராமத்தின் முன்பகுதியில் இருந்த கட்டடங்கள் தீயில் எரிந்துகொண்டிருந்தன. அந்த கிராமத்தில் இருந்த வீடுகள், 20-30 நிமிடங்களில் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன. அப்போதுதான் தீ வைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாங்கள் தொடர்ந்து அந்த கிராமத்துக்குள் சென்றபோது, கட்டுமஸ்தான உடலுடன் சில இளைஞர்கள், ஆயுதங்களை ஏந்தியவாறு வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, படம் பிடிக்க அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

எனினும், மியான்மரைச் சேர்ந்த எனது சக பத்திரிகையாளர்கள், அந்த நபர்களுடன் கேமராவில் பதிவு செய்யப்படாமல் பேசினார்கள். அவர்கள் ரகைனைச் சேர்ந்த பெளத்தர்கள் என்று தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், தாங்கள்தான் தீ வைத்ததாகவும், போலீசார் தங்களுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் மேலும் தொடர்ந்து சென்றபோது, அங்குள்ள இஸ்லாமிய மதப்பள்ளியான மதரஸாவின் கூரையில் தீ எரியத் தொடங்குவதைப் பார்த்தோம். எதிரில் உள்ள ஒரு வீட்டிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மூன்று நிமிடங்களில் பெரும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அந்த கிராமம் வெறிச்சோடிக் கிடந்தது, அங்கு தீ வைத்து வன்முறைக்குக் காரணமாக இருந்தவர்களைத் தவிர. குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், பெண்களின் ஆடைகள் என வீதியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. சில குவளைகள் பெட்ரோல்களுடன் கிடந்தன.

நாங்கள் அங்கிருந்து வெளியேறும்போது, எரிந்த வீடுகள் அனைத்தும், சிதைந்து, சிதிலங்களாகிவிட்டன.

பிற செய்திகள் :

நீட்' தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி ஆசிரியை ராஜிநாமா

உற்சாக வரவேற்புடன் விடுதலையான மாணவி வளர்மதி (காணொளி)

BBC Tamil
English summary
About 164,000 Rohingya Muslims have poured into Bangladesh from Myanmar's Rakhine state since violence erupted two weeks ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X