மீண்டும் வருகிறது தனிமைப்படுத்தும் விதி! முதல் நாடாக அறிவித்த பெல்ஜியம்.. காரணம் மங்கி பாக்ஸ்
பிரஸ்ஸல்ஸ்: உலகெங்கும் மங்கிபாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக பெல்ஜியம் அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இப்போதுதான் மெல்ல மீண்டு வருகிறது. வேக்சின் பணிகள் காரணமாக உலக மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்தச் சூழலில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வித வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவ தொடங்கி உள்ளது. இது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மங்கிபாக்ஸ் பரவ பாலியல் உறவு முக்கிய காரணமாம்... எச்சரிக்கும் ஆய்வு...கவனம் மக்களே!

மங்கி பாக்ஸ்
இந்த மங்கி பாக்ஸ் ஆப்பிரிக்காவில் தான் பொதுவாக இருக்கும். ஆனால், இப்போது இந்த மங்கி பாக்ஸ் ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 15 நாடுகளில் பரவுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என மொத்தம் 100 கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த பாதிப்பு பெரியளவில் பரவ வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இந்த மங்கிபாக்ஸ் கொரோனாவை போல மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது.

தனிமைப்படுத்துதல்
இருப்பினும், சில நாட்களில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதால் ஆய்வாளர்கள் இது குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் இதுவரை 4 பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்படும் நபர்கள் 21 கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முதல் நாடு பெல்ஜியம்
மங்கி பாக்ஸ் நோய்க்குத் தனிமைப்படுத்துதல் விதியை அறிவிக்கும் முதல் நாடு பெல்ஜியம் ஆகும். இதுவரை 4 பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், பெரியளவில் இது பரவும் வாய்ப்பு குறைவு என்றே பெல்ஜியம் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அறிகுறி
மங்கி பாக்ஸ் என்பது பெரியம்மை பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ஏற்படுத்தும் ஒரு நோயாகும். தோல்களில் தடிப்பு, கொப்பளங்கள், காய்ச்சல், தசை வலி மற்றும் தலைவலி ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இது பெரியம்மை நோயை விடக் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும். பொதுவாக இந்த வைரசால் பாதிக்கப்படுவோரில் 4 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே உயிரிழப்பார்கள் என்பதால் இதைக் கண்டு இப்போது அஞ்சத் தேவையில்லை.

புரியாத புதிர்
இருப்பினும், வழக்கமாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவும் இந்த மங்கி பாக்ஸ் இப்போது உலகின் மற்ற நாடுகளுக்குப் பரவி உள்ளதை ஆய்வாளர்கள் புதிராகவே பார்க்கிறார்கள். இதற்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எப்படி பரவும்
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. தோல் புண்கள் மற்றும் அசுத்தமான பொருட்கள் மூலமும் இந்த நோய் பரவும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு பெரும்பாலும் 14 முதல் 21 நாட்கள் அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு இருக்கும்.

12 நாடுகள்
இதுவரை மொத்தம் 12 நாடுகளில் 90க்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 28 பேருக்குச் சோதனை முடிவுகள் வரவில்லை. இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.