"குறி".. வெடித்து சிதறிய பெண்கள்.. கராச்சி பல்கலை.யில் குண்டுவெடிப்பு.. 3 சீனர்கள் உட்பட 4 பேர் பலி
இஸ்லாமாபாத்: கராச்சியில் உள்ள பல்கலையில் திடீரென நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 2 சீனர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.. 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. இதில் 3 பேரின் நிலைமை சீரியஸாக இருக்கிறது.
கராச்சியில் உள்ள பல்கலையில் உள்ள ஒரு மையத்தில் இன்று மதியம் திடீரென வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது..
இங்கு உள்ளூர் மக்களுக்கு சீன மொழியை கற்று கொடுக்கும் மையம் ஒன்று உள்ளது.. அதன் அருகே ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.

சீன பெண்கள்
அந்த வேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுதான் திடீரென வெடித்து சிதறியது.. அதில், 2 சீன பெண்கள் , வேன் டிரைவர் மற்றும் செக்யூரிட்டி என 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்... 2 சீன பெண்களை குறிவைத்தே இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... அவர்களில் 3 பேரின் நிலைமை சீரியஸ் கண்டிஷனில் உள்ளதாக கூறப்படுகிறது..

வெடிவிபத்து
சீன மொழியை இந்த பெண்கள், உள்ளூர் மக்களுக்கு கற்று தந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. ரிமோட் மூலம் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.. பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெடிவிபத்துக்குள்ளான வேனில் 8 பேர் இருந்ததாக தெரிகிறது.. அப்போதுதான், சம்பந்தப்பட்ட வேன் மீது, இன்னொரு வாகனம் மோதி வெடி விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்..

யாருடைய கார்?
வேனில் மோதிய அந்த வாகனம் யாருடையது என்று உறுதியாக தெரியவில்லை.. அந்த காரில் வெளியூர் நம்பர் உள்ளதாம்.. அதனால் கார் யாருடையது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.. எனினும், குண்டுவெடிப்பு நடந்துமே, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்தை சுற்றி வளைத்து, மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கிவிட்டனர்..

பலுசிஸ்தான்
இப்படிப்பட்ட சூழலில், இந்த தற்கொலை தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் பிரிகேட் என்ற பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் சொல்லும்போது, ஷாரி பலோச் என்ற பெண் இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தினார் என்று கூறியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து, டான் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது..

படுகாயம்
அதில், "கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்த குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.. பலர் காயமடைந்தனர்... பலியானவர்கள் 3 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள், கடந்த சில மாதங்களாகவே, பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் சீனர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்... அந்த வகையில் இன்று நடந்த தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்..

சிசிடிவி காட்சி
மேலும், குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், முதற்கட்டமாக வேனின் அருகே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவினரும் விரைந்துள்ளனர்.. இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழிந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பு தன்னுடைய இரங்கல் தெரிவித்துள்ளார்...!