துருக்கியில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 11 போலீசார் பலி- 70 பேர் படுகாயம்
இஸ்தான்புல்: தென் கிழக்கு துருக்கியில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 11 போலீசார் பலியாகியுள்ளனர். 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் உள்ள சிஸ்ரே பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தலைமையகத்தை குறித்து வைத்து, கார் வெடிகுண்டை வெடிக்க செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கார் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது.

இந்தத் தாக்குதலில் போலீசார் 11 பேர் பலியாகியுள்ளனர். 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் வெடிகுண்டு தாக்குதலில் சிறப்புப் படையின் தலைமையகம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 12 ஆம்புலஸ்களும் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக துருக்கி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை குர்திஷ் தொழிலாளர் கட்சி நடத்தி இருக்கலாம் என்று துருக்கி ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
துருக்கியில் கடந்த 2015ம் ஆண்டு போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டத்தில் இருந்து வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் போலீசாரை குறி வைத்து நடைபெற்று வருகின்றன.