For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரணத்தின் வாசலுக்கு சென்று தப்பினோம்: உயிர்தப்பிய பெஷாவர் பள்ளி மாணவர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெஷாவர்: வகுப்பறையில் தீவிரவாதிகள் புகுந்து சுடத் தொடங்கிய போது மேஜைக்கு அடியில் ஒடுங்கிய படி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தோம்....இது பெஷாவர் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர்தப்பிய ஒரு மாணவனின் நடுக்கமான குரல்.

என் கண் முன்னே என் நண்பர்களை சுட்டு சாய்த்தார்கள். நாங்களும் மரணத்தின் வாசலுக்கு சென்று திரும்பினோம் என்று நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் தெரிவிக்கிறான் இன்னொரு மாணவன்.

Children massacred in Pakistan school attack

நடந்த சம்பவத்தை ஊடகங்களில் பார்த்தும்,செய்தியாக படிக்கும் போதே உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகளின் வெறியாட்டத்தை நேரில்பார்த்த மாணவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதற்கு மாணவர்களின் இந்த அதிர்ச்சியான நடுக்கமான பேட்டியே சாட்சி.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் ‘ஆர்மி பப்ளிக்' பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். ராணுவத்தினரின் குழந்தைகள் அந்த பள்ளி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போலவே வீட்டிலிருந்து கிளம்பிய மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு விடைகொடுத்துவிட்டு அரையாண்டு தேர்வு எழுத சென்றனர்.

அப்போது அவர்களுக்குத் தெரியாது... இதுதான் பெற்றோர்களை கடைசியாக சந்திப்பது என்று.

காலை 10.30 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது, ராணுவ சீருடை அணிந்திருந்த ஆறு பயங்கரவாதிகள் பள்ளியின் உள்ளே நுழைந்தனர். அவர்களிடம் இயந்திர துப்பாக்கிகளும் கையெறி குண்டுகளும் அதிநவீன ஆயுதங்களும் இருந்தன.

தீவிரவாத வெறியாட்டம்

பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அவர்கள் மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 132க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்; மேலும் ஒன்பது ஆசிரியர் அலுவலர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

பூட்டிய ஆசிரியர்கள்

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் பதறிய ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் மாணவர்களை உட்புறமாக பூட்டி வைத்தனர். ஒவ்வொரு வகுப்பறையாக தேடித் தேடிச் சென்று சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதிகம் கொல்லப்பட்டது 5வயது முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள்தான்.

அறியாமலேயே மரணம்

தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பதைப்பற்றி அறியாமலேயே அவர்கள் மரணத்தை தழுவினார்கள். பிஞ்சு குழந்தைகளின் தலையிலும், நெஞ்சிலும், வயிற்றுப்பகுதியிலும் சுட்டு தங்களின் வெறியாட்டத்தைத் தணித்துக்கொண்டனர் தீவிரவாதிகள்.

தானும் சுட்டுக்கொண்டு

தற்கொலை தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளில் ஒருவன் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கூடியிருந்த வகுப்பறைக்குள் தற்கொலை தாக்குதல் நடத்தி தானும் இறந்து குழந்தைகளை ரத்தம் சதையுமாக ஆக்கினான்.

சவப்பெட்டியில் திரும்பினான்

காலையில் சீருடை அணிவித்து என் மகனை பள்ளிக்கு அனுப்பினேன். ஆனால் சவப்பெட்டியில் என் மகன் சடலமாக திரும்பிவந்தான் என்று கதறி அழுதார் மகனை பறிகொடுத்த ஒரு தந்தை.

பெஷாவர் நோக்கி

நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்ட உடன் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ஏராளமானோர் பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மெழுவர்த்தி ஏற்றி வைத்து பலரும் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உயிர் தப்பினோம்

தீவிரவாதிகள் தாக்கத் தொடங்கியபோது மேஜைக்கு அடியில் ஒடுங்கிக்கொண்டோம். நடுங்கியபடியே உயிரை கையில் பிடித்துக்கொண்டு, காத்திருந்தோம். தப்பியோடியவர்களைப் பார்த்து தீவிரவாதிகள் கொன்று குவித்தனர். என் நண்பர்கள் ரத்தம் சொட்ட உயிரை விட்டது இன்னமும் கண் முன் நிற்கிறது என்று கண்களில் அச்சம் விலகாமல் நடந்த சம்பவத்தை விவரித்தான் உயிர் தப்பிய மாணவன்.

மரணத்தின் வாசலில்

நாங்களும் கொல்லப்படுவோம் என்றுதான் எண்ணினோம். ஆனால் இறைவன் அருளினால் காக்கப்பட்டோம். தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தினால் மரணத்தின் வாசலுக்கு சென்று தப்பி வந்தோம் என்கிறார் ஒருமாணவர்.

முட்டாள்களின் தாக்குதல்

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், இந்த கொடூர செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாத்தையும் கற்பிக்கமுடியாது. இதுபோன்ற பயங்கரத்திற்கு எந்த பிரச்னையையும் காரணமாக கூறமுடியாது என்றார். பாடம் கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்பில்லாத குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது கோழைத்தனமான, கொடிய செயல் என்று கூறியுள்ளார்.

மனிதாபிமானமற்ற செயல்

ஒரு போர் நடைபெறும் போதுகூட குழந்தைகள், முதியவர்களை கொல்லக்கூடாது என்பதுதான் விதி. அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். ஆனால் மனமே இல்லாத கல்நெஞ்சம் மிக்க, உணர்ச்சிகளற்ற இந்த கொடியவர்கள் நடத்திய தாக்குதலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் பெற்றோர்கள்.

English summary
At least 145 people, including 132 children, have been killed in an attack by Pakistani Taliban fighters (TTP) on a military-run school in Peshawar in Pakistan's northwest. One survivor, Shahrukh Khan, 16, shot in both legs, said he managed to survive after playing dead. "The man with big boots kept on looking for students and pumping bullets into their bodies. I lay as still as I could and closed my eyes, waiting to get shot again," Khan said from the trauma ward at the Lady Reading hospital in Peshawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X