For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் தமிழர்கள் கூடினால் தமிழகத்திற்கு வசந்தம்.. இந்த முறை தமிழக அரசுப் பள்ளிகளுக்கு!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்). அமெரிக்காவில் தமிழர்கள் ஒன்று கூடினால் தமிழகத்திற்கு நன்மை என்று சொல்லும் வகையில், ஒரு நிகழ்வை மெட்ரொப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் நடத்தியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க 11 ஆயிரம் டாலர்களை இந்த சங்கம் திரட்டித் தந்துள்ளது.

குளிர்காலம் முடிந்தவுடன் வீட்டை விட்டு வெளியே போய், வசந்தத்தை அனுபவிக்கும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு.

அதற்கு வாய்ப்பாக தமிழ்ச் சங்க குடும்பங்களின் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ளேனோ ரஸல் க்ரீக் பார்க்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

பார்க்கில் உள்ள குளத்தைச் சுற்றி நடப்பது, வாலிபால், கூடைப் பந்து என தங்களுக்கு விருப்பமானதைச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலர் சைக்கிள் எடுத்து வந்து ரவுண்ட் அடித்தனர். சிறுவர் சிறுமிகள் பட்டம் பறக்க விட்டு மகிழ்ந்தனர். ஓடிப்பிடித்து ஆடினர். முகத்தில் வண்ண வண்ண டிசைன்களில் பெயிண்ட் செய்து மகிழ்ந்தனர். காலைச் சிற்றுண்டியாக சுண்டல், Sprouts, அவித்த முட்டை, நீர்மோர், காபி, டீ, பழம் என்று அசத்தினர். ஸ்டார்பக்ஸ் காபி கூட இருந்தது.

எல்லாம் எதற்காக?

எல்லாம் எதற்காக?

ஒரு பக்கம் எல்லோரும் மகிழ்ச்சியுடன் காலைப் பொழுதை கொண்டாடும் சந்திப்பு என்றாலும் அதிலும் ஒரு உயரிய நோக்கம் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வு மூலம் டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் சார்பில் 11,000 டாலர்கள் நிதி திரட்டி, தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ் நாடு அறக்கட்டளையின் உபதலைவர் சோலை நேரில் பங்கேற்று நிதியுதவியை பெற்றுக்கொண்டார்

தமிழ்ச் சங்கமும் மக்கள் தொண்டும்!

தமிழ்ச் சங்கமும் மக்கள் தொண்டும்!

ஹெல்த் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தன் வரவேற்றார். சங்கத் தலைவர் கீதா அருணாச்சலம் மக்கள் தொண்டும் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய பணியாக கருதுவதாகவும், ஆண்டுதோறும் ஒரு சமுதாயப் பணிக்காக நிதி திரட்டி வழங்கி வருவதையும் குறிப்பிட்டார். தமிழ்நாடு அறக்கட்டளை உபதலைவர் சோலை , திருக்குறளை மேற்கோள் காட்டி, முன்பின் தெரியாதவர்களுக்கு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவுவது தான் உண்மையான கொடையாகும். அந்த வகையில், எங்கோ முகம் தெரியாத மாணவர்களுக்காக, டல்லாஸ் தமிழர்களின் இந்த உதவி பெரும் கொடையாகும் என்றார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் ஏபிசி திட்டம்

தமிழ்நாடு அறக்கட்டளையின் ஏபிசி திட்டம்

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குவதற்காக, மாநில அரசின் அனுமதியுடன் ஏபிசி என்ற திட்டத்தை, அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. பள்ளி நேரத்திற்கு பின் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு தனித்தனி கவனம் செலுத்தப்படுகிறது, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கல்லூரிப் படிப்பிற்காக ஆயத்தப் படுத்தப்படுகிறார்கள். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது என்று ஏபிசி திட்டம் குறித்து சோலை எடுத்துரைத்தார்.

தமிழகத்துக்கும் வசந்தம் தான்!

தமிழகத்துக்கும் வசந்தம் தான்!

தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளரும், தமிழ் நாடு அறக்கட்டளை டல்லாஸ் கிளையின் ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன் நன்றியுரை கூறினார். சிற்றுண்டி ஏற்பாடுகளை லஷ்மி, சித்ரா, கீதா, தீபா,லதா, சுமதி மற்றும் சுமித்ரா செய்திருந்தனர். கவிதாவும் சுமித்ராவும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முகத்தில் பெயிண்டிங் செய்து நிகழ்ச்சியை கலர்ஃபுல் ஆக்கினார்கள்.

வசந்தத்தை வரவேற்று ஒன்று கூடி மகிழும் நிகழ்வையும், சமுதாய நோக்கத்துடன் நிதி திரட்டி தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும், நம் சக தமிழர்கள் போற்றத் தக்கவர்கள் தானே! தமிழகத்திற்கும் சேர்த்துத்தான் வந்தது வசந்தம்!

செய்தி: இர தினகர்

படங்கள் : நந்தகுமார்

English summary
Dallas based Tamil organisation, Metroplex Tamil Sangam has donated 11k US$ to Tamil Nadu Govt school students upliftment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X