For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொல்காப்பிய மன்றம்.. மலேசியாவில் இன்று இரவு கலந்துரையாடல்... அனைவரும் பங்கேற்கலாம்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறவுள்ளது.

மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கத்தின் சார்பில் இன்று 03.06.2015 அறிவன் (புதன்) கிழமை இரவு எட்டு மணிக்குத் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Discussion on Tholkappiya Mandram in Malaysia

இந்தநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் புதுச்சேரியிலிருந்து முனைவர் மு.இளங்கோவன் கலந்து கொண்டு தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றார். இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அருள்முனைவர், மாரியப்பனார் உள்ளிட்ட தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

நடைபெறும் இடம்: கிள்ளான் தாமான் பெர்க்கிலி, பெர்க்கிலி உணவக மண்டபம்
நாளும் நேரமும்: 03.06.2015, இரவு எட்டுமணி
தொடர்புக்கு:

அருள்முனைவர் 017 - 3315341
மாரியப்பனார் 012 - 3662286
மு.இளங்கோவன் -010 - 4356866

தொல்காப்பியமன்றம் - நோக்கமும் செயல்பாடுகளும்

தமிழில் படைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளன.

இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் பேராய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை நடுவணாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரை வரைந்துள்ளனர்.

தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தொல்காப்பியம் குறித்த அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தரும் வகையிலும், தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கிலும் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளை உலக அளவில் நடத்தும் வகையிலும், உலகெங்கும் உள்ள தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், பற்றாளர்கள், இலக்கிய, இலக்கண ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையில் தொல்காப்பிய மன்றம் என்ற உலக அளவிலான அமைப்பினைத் தொடங்க முடிவு செய்து அதற்குரிய முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொல்காப்பிய மன்றம் இலண்டன் அல்லது பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொல்காப்பிய மன்றத்திற்குரிய கிளைகள் தொடங்கப்பட்டுத் தக்க ஆய்வறிஞர்களால் வழி நடத்தப்பட உள்ளன. தமிழ் கற்ற, மொழியியல் கற்ற அறிஞர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த தொல்காப்பியத்தைத் தமிழ் ஆர்வலர்கள், கணினி வல்லுநர்கள், பல்துறை அறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்களின் ஒத்துழைப்புடன் பரப்பத் திட்டமிட்டுள்ளோம்.

தொல்காப்பியச் செய்திகள் மக்கள் மனத்தில் இடம்பெறும் வண்ணம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பணிகளைச் செய்யத் தன்னார்வலர்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தொல்காப்பியப் பரவலுக்குக் குரல் கொடுத்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் பல்வகைத் திட்டங்களைக் கொண்டு தொல்காப்பிய மன்றம் செயல்படஉள்ளது.

ஆண்டுதோறும் தொல்காப்பியம் குறித்த மாநாடுகள் நடத்தித் தொல்காப்பிய ஆய்வினை வளர்த்தெடுப்பது தொல்காப்பிய மன்றத்தின் முதன்மை நோக்கமாகும்.
மேலும் தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், தொல்காப்பியம் குறித்த கட்டுரைகள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள் என அனைத்து விவரங்களையும் ஒன்று திரட்டிஇணையத்தில் உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு வைப்பது என்னும் நோக்கில் செயல்பட உள்ளோம்.

தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணை நின்றவர்களையும் அடையாளம் கண்டு அறிஞர்கள் குழு ஒவ்வொரு ஆண்டும் பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் மலேசியாவில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் உலக அளவிலான விருது வழங்கிப் போற்றுவதும் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

தமிழார்வமும் இலக்கண, இலக்கிய ஈடுபாடும் உள்ள வினையாண்மை மிக்க தமிழார்வலர்களை - தொழில்நுட்ப வல்லுநர்களை- பல்துறை அறிஞர்களை எங்களுடன் இணைந்து பணிபுரிய அன்புடன் அழைக்கின்றோம். தொல்காப்பிய மன்றம் தொடங்குவதற்குரிய தங்களின் மேலான கருத்துகளையும், வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய நூலில் புலமையும், தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வமும் கொண்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இம்மன்றத்தை நெறிப்படுத்தி வளர்க்க உள்ளனர்.

உலக நாடுகளில் உள்ள தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பியத்தைப் பரப்பவும், தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுக்கவும், தொல்காப்பியம் குறித்த செய்திகளைத் திரட்டவும் ஆர்வமுடைய பெருமக்கள் - தமிழ்த் தொண்டர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்படி மெத்தப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புக்கு:

[email protected]
[email protected]

English summary
A discussion has been arranged in Malaysia today on the formation of Tholkappiya Mandram. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X