For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐந்து மணி நேரம்... 1330 குறள்கள்... டல்லாஸில் முனைவர் சித்ரா மகேஷின் புதிய சாதனை!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற 9ம் ஆண்டு திருக்குறள் போட்டி இரண்டு கட்டமாக டி.எஃப்.டபுள்யூ கோவில் வளாகம் மற்றும் ஆல்ஃபா மாண்டசரி பள்ளி வளாகத்தில் ஜனவரி 9 மற்றும் 17 ம் தேதிகளில் நடைபெற்றது. ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் தன்னார்வ ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர் சித்ரா மகேஷ், 1330 திருக்குறள்களையும் ஐந்துமணி நேரத்தில் சொல்லி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

ஆல்ஃபா மாண்டசரி பள்ளி வளாகத்தில், காலை 9 மணிக்கு அகர முதர எழுத்தெல்லாம் என ஆரம்பித்து, தொடர்ந்து பொருட்பால் அதிகாரத்தில் 700 குறள்களை இரண்டரை மணி நேரத்தில் ஒரே மூச்சில் கூறினார். உணவு இடைவேளைக்குப் பிறகு, அறத்துப்பால் அதிகாரத்தின் 380 குறள்களை ஒன்றரை மணி நேரத்திலும் காமத்துப்பால் அதிகாரத்தின் 250 குறள்களை ஒரு மணி நேரத்திலும் சொல்லி முடித்தார். போட்டியின் நடுவர்களாக சுழற்சி முறையில் ஒன்பது பேர் பணியாற்றினர்.

Dr Chitra Mahesh's new feat in Thirukkural

பின்னர், ப்ளேனோ தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள், மாணவர்கள் முன்னிலையில் , முனைவர் சித்ராவிடம் நேர்காணல் நிகழ்வு நடந்தது.

அப்போது தனக்குப் பிடித்த அதிகாரத்திலிருந்து சில குறள்களுக்கு விளக்கம் அளித்து, எதனால் பிடிக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "சொந்த பந்தங்களை, தமிழ் நாட்டில் விட்டு விட்டு வந்து, இங்கே புதிய நட்புகளையே சொந்தமாக்கிக் கொண்டு வாழும் நமக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நட்பு பற்றி பல உன்னதமான கருத்துக்களை நட்பியல், கூடா நட்பு அதிகாரங்களில் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். இதைப் போன்று ஏனைய அதிகாரங்களிலும், நமது அன்றாட வாழ்வை வழி நடத்தத் தேவையான அனைத்து அம்சங்களும் திருக்குறளில் பொதிந்து கிடக்கின்றன," என்றார்.

Dr Chitra Mahesh's new feat in Thirukkural

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் தமிழ் கற்று, பேசி, எழுதப் படிப்பது என்பதே மிகவும் போற்றுதலுக்குரியதாகும். தமிழகத்தில் பிறந்து தமிழில் படித்தவர்களுக்கே, குறளில் உள்ள கடினமான புதிய வார்த்தைகளைப் படிப்பதற்கு சிரமமாக இருக்கும் நிலையில், இந்த குழந்தைகளுக்கு கூடுதல் சிரமம் இருப்பதில் ஆச்சரியமில்லை.

பல சான்றோர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்த போதிலும், அவை அந்தந்த கால சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாகக் கருதுவதாக கூறினார். குழந்தைகளும் புதிதாக தமிழ் கற்கும் பெரியவர்களும் திருக்குறளைக் கற்றுக்கொள்வதற்கு உதவியாக , எளிய நடையில் உரை எழுத விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பழநிசாமி, ஜெய்சங்கர் சில குறள்களைக் கூறி சித்ராவிடம் விளக்கம் கேட்டனர். ஒரே விதமான வார்த்தைகளை வெவ்வேறு பொருள்படியான வேறு வேறு குறள்களைச் சொல்லி, அவற்றை விவரிக்கச் சொன்னார்கள். பார்வையாளர்களாக இருந்த பெற்றோர்கள் மாணவர்களும் கேள்விகள் எழுப்பினர். வேலு ராமன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

Dr Chitra Mahesh's new feat in Thirukkural

இறுதியாக பழநிசாமி, 1330 குறள்களையும் சொல்லி சாதனை படைத்த முனைவர் சித்ரா மகேஷ் - க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நிகழ்ச்சி, ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறினார்

பொள்ளாச்சி பகுதியைச் சார்ந்த சித்ரா, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில், வைரமுத்துவின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மென்பொருள் வல்லுனரான கணவர் மகேஷ்குமார், மகள் ஆதனாவுடன் டல்லாஸ் மாநகரில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் ஐந்தாண்டுகளாகத் தன்னார்வ ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள் எழுதுவதில் நாட்டம் உள்ளவர். சங்க இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

முன்னதாக 2014 ம் ஆண்டு நடந்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் திருக்குறள் போட்டியில் பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகள் கீதா அருணாச்சாலம் 1330 குறள்கள் சொல்லி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆண்டு திருக்குறள் தமிழ்த் திறன் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 23ம் தேதி மாலை நான்கு மணிக்கு , அலன் நூலக வளாக அரங்கில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் குழந்தைகளுக்கு 'ஒரு குறள் ஒரு டாலர் 'பரிசுத் தொகை வழங்கப்படும்.

விழாவின் சிறப்பு விருந்தினராக யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் - ஆஸ்டின் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சங்கரன் பங்கேற்க உள்ளார். இந்த பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையை ஆரம்பித்து 15 ஆண்டுகளாக திறம்பட நடத்தி வருகிறார். எளிய முறையில் தமிழ் கற்பதற்கான பல புதிய உத்திகளையும், புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் ஏனைய பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறையுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சி பணிகளிலும் பங்காற்றி வருகிறார்.

-இர தினகர், டல்லாஸ்.

English summary
Dr Chitra Mahesh has achieved a rare feat in Thirukkural competition that held at Dallas, US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X