Flash back 2021: அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய தாலிபான்கள்.. முடிவுக்கு வந்தது 20 ஆண்டு கால போர்
காபூல்: இந்த ஆண்டில் அனைவரையும் உலுக்க வைத்த மற்றொரு நிகழ்வு தாலிபான்கள் 2.oஇன் அசுர வளர்ச்சி. அமெரிக்கப் படைகள் வெளியேறும் முன்னரே இந்த குறுகிய காலத்தில் மீண்டும் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை
ஆப்கனில் மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த அதே தாலிபான்கள் கைகளுக்கு இப்போது அதிகாரம் சென்று இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!
வியட்நாம் போருக்குப் பிறகு, வெளிநாட்டு மண்ணில் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. 20 ஆண்டுகள் நீட்டித்த போதிலும் தாலிபான்களுக்கு இதில் வெற்றி கிடைக்கவில்லை. அங்கு என்ன தான் நடந்தது.

தாலிபான் முதல் ஆட்சி
முதலில் ஆப்கானைக் கடந்த 1996-2001 வரையிலான காலகட்டத்தில் தாலிபான்கள் ஆட்சி செய்தன. அந்த சமயத்தில் நாட்டில் மிக மோசமான அடக்குமுறை நிலவியது. பொது இடங்களில் வைத்து தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்குக் கல்வி தொடங்கிப் பல அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. மேலும், பல பகுதிகளில் கடும் பஞ்சம் கூட நிலவியது. இந்த ஆட்சி சுமார் 4 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

இரட்டை கோபுர தாக்குதல்
தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கனில் பயங்கரவாதமும் அதிகரித்தது. உலக அரங்கையே அதிர வைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை ஆப்கனில் இருந்தபடி தான் திட்டமிட்டார் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன். இதன் பின்னரும் பொறுத்திருந்தால் வேலைக்கு ஆகாது என்று களத்தில் இறங்கியது அமெரிக்கா. அதன்படி ஆப்கனில் இருந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை அறிவித்தது அமெரிக்கா. அங்குள்ள மலைப் பிரதேசங்களில் தாலிபான்கள் பதுங்க, புதிய அரசு அமைந்தது.

20 ஆண்டுகள் நீட்டித்த போர்
இந்த அரசு 20 ஆண்டுகள் தொடர்ந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆப்கனில் பதுங்கிய தாலிபான்களை அழிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியது. ஆனாலும் அது பெரியளவில் அவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை. மண்ணனில் மைந்தர்களான தாலிபான்களால் அங்குள்ள மலைப் பிரதேசங்களில் எளிதாகப் பதுங்க முடிந்தது. ஆனால், அமெரிக்காவில் அந்த நிலப்பரப்பைப் புரிந்துகொள்ளவே பெரும் சிரமமாக இருந்தது. இதே நிலை தான் இங்கு 20 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

அடுத்து வந்த அதிபர்கள்
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கன் மீதான படையெடுப்புக்கு ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஆதரவாக இருந்தது. ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல நிலை அப்படியே மாறியது. ஜார்ஜ் புஷுக்கு பிறகு வந்த ஒபாமா, டிரம்ப் போன்ற அதிபர்களும் கூட ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் முயற்சிகளிலேயே ஈடுபட்டிருந்தனர். இந்தச் சூழலில் தான் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தாலிபான்கள் அதிரடி
அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தனது மொத்த படைகளையும் ஆப்கனில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அமெரிக்கா மெல்லத் தனது படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியதும், சற்றும் தாமதிக்காத தாலிபான்கள் மீண்டும் ஆப்கனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடங்கியது. முதலில் எல்லைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபான்கள், பிறகு கிராமப்புறங்களையும் அடுத்து நகர்ப்புறங்களையும் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

யாரும் எதிர்பார்க்கவில்லை
தாலிபான்கள் இவ்வளவு வலிமையாக இருப்பார்கள் என உண்மையில் யாருமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க உளவுத் துறையும் கூட தாலிபான்கள் ஆட்சி கவிழ்ப்பை நடத்தக் குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றே தெரிவித்திருந்தது. ஆனால், அமெரிக்கப் படைகள் வெளியேறும் முன்னரே ஒட்டுமொத்த ஆப்கனையும் தன்வசப்படுத்தியது தாலிபான்கள். அந்நாட்டு மக்களின் ஆதரவும் தாலிபான்களுக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தான் இத்தனை குறுகிய காலத்தில் அவர்களால் ஆப்கனில் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

தாலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கன்
இறுதியாகக் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றியது தாலிபான்கள். பல பகுதிகளில் ஆப்கன் ராணுவம் எவ்வித சண்டையும் போடாமல் சரணடைந்துவிட்டன. குறிப்பாகத் தலைநகர் காபூலை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றியது தாலிபான் அமைப்பு. இது இதற்கு முன்பு இருந்து அஸ்ரப் கானி அரசு எந்தளவுக்குச் செயல்படாமல் இருந்தது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது. தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய போது, அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகம் தப்பிச் சென்றார்.

வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சி
இருப்பினும், அதன் பின்னரும் கூட சுமுகமாக எதுவும் நடக்கவில்லை. தாலிபான்கள் ஆட்சியில் இருக்க அஞ்சிய பலரும் வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றனர். குறிப்பாக அமெரிக்க ராணுவத்திற்கு உதவியவர்கள், வெளிநாட்டு ஊடகங்களில் பணிபுரிந்தவர்கள், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளில் பணிபுரிந்தவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். யாருமே இவ்வளவு சீக்கிரம் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவியது.

குண்டுவெடிப்பு
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆப்கன் விமான நிலையத்தில் சக்திவாயந்த் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய இதில் 170 ஆப்கன் மக்கள், 13 அமெரிக்க வீரர்கள் என மொத்தம் 183 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இது தவிரச் சிலர் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும், சிலர் விமானத்தில் இருந்து விழுந்தும் கூட உயிரிழந்தனர். மேலும், சில ஆப்கன் பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் காப்பற்ற அமெரிக்க ராணுவத்திடம் குழந்தைகளைக் கொடுக்கும் துயர சம்பவங்களும் கூட நடந்தது.

தாலிபான் 2.o
இந்த களேபரங்களுக்கு இடையே செப்டம்பர் மாதம் தாலிபான் அரசு பொறுப்பேற்றது. அந்நாட்டின் பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் பதவியேற்றார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அமெரிக்கப் படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முல்லா அப்துல் கனி பரதர் முதல் துணைப் பிரதமரானார். இரண்டாவது துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா முகம்மது யாகூப் பதவியேற்றனர். அதேபோல அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி உள்துறை அமைச்சரானார். மொத்தம் 19 பேரை உள்ளடக்கிய ஆப்கன் அரசு பதவியேற்றது.

என்ன எதிர்காலம்
இருப்பினும், அதன் பின்னரும் கூட நிலைமை மேம்படவில்லை. உள்நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வெளிநாடுகளும் தாலிபான்கள் அடிப்படைவாதிகள் என்பதால் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுகின்றன. தற்போதைய சூழலில் சீனாவை மட்டுமே ஆப்கன் நம்பியுள்ளது. சீனா அளிக்கும் உதவிகளை வைத்து ஆப்கனை மீண்டும் கட்டமைக்கலாம் என்று தாலிபான்கள் நினைக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு லாபம் இல்லை என்றால் எந்த நாடும் வலியச் சென்று மற்ற நாடுகளுக்கு உதவாது. இதனால் ஆப்னில் நிலைமை இன்னும் நிச்சியமில்லாமலேயே உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் போராட்டத்திற்குப் பின்னர், ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், அதன் தலையெழுத்தது எப்படி அமையும் என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்!