For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் காந்தி நினைவுமண்டபம்: கவர்னர் நிக்கி ஹாலே அடிக்கல் நாட்டினார்

By Shankar
Google Oneindia Tamil News

இர்விங்(யு.எஸ்): டல்லாஸ் மாநகரப் பகுதியான இர்விங் நகரில் காந்தியடிகளுக்கு 7 அடி உயர சிலையுடன் மணிமண்டபம் கட்டப்படுகிறது.

இதற்காக சமீபத்தில் நடந்த பூமி பூஜையில் தென் கரோலைனா கவர்னர் நிக்கி ஹாலே கலந்து கொண்டார்.

அமெரிக்காவிலேயே அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் இணைந்து வாழும் (Diversity) நகரமான இர்விங்கில் காந்தி சிலை அமைவது சிறப்புக்குரியதாகும் என்று மேயர் பெத் வான் டயன் கூறினார்.

வடக்கு டெக்சாஸ் காந்தி மெமோரியல்

வடக்கு டெக்சாஸ் காந்தி மெமோரியல்

வடக்கு டெக்சாஸ் இந்தியா அசோசியேஷனும், இந்தியன் அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஷிப் கவுன்சிலும் இணைந்து வடக்கு டெக்சாஸ் காந்தி மெமோரியல் (http://www.mgmnt.org/) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். அதன் சார்பில் 7 அடி உருவ வெண்கல சிலை மற்றும், எட்டு அடி க்ரானைட் சுவருடன், 6 அடி உயர மேடையில் மகாத்மா காந்தி நினைவு மண்டபம் அமைக்கப் படுகிறது.

சுற்றுச்சுவர் முழுவதும் காந்தியின் சிந்தனைகள் பொறிக்கப்படுகிறது. 1500 பவுண்டு எடையுள்ள இந்த சிலை, பிரபல சிற்பி புர்ரா வரபிரசாத் வடிவமைப்பில், ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மற்றும் இன்னாள் மேயர்கள்

முன்னாள் மற்றும் இன்னாள் மேயர்கள்

பூமி பூஜை விழாவுக்கு, இர்விங் நகர முன்னாள் மேயரும், இன்னாள் மேயரும் வந்திருந்தார்கள். நகர சட்ட திட்டங்களின் படி பார்க்கில் சிலை வைக்க முதலில் அனுமதி கிடையாது. நினைவாலய குழுவினர் எடுத்துரைத்த பிறகு, அமெரிக்காவின் மற்ற நகரங்களின் சட்டங்கள் போன்றவற்றை ஆராய்ந்து, சிறப்பு சட்ட அங்கீகாரம் வழங்கி இங்கு சிலை நிறுவப்படுகிறது.

நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, முன்னாள் மேயர் காலத்தில் ஆரம்பித்தாலும், அடுத்த மேயர் வந்த பிறகு சாத்தியமானது. இருவரையும் அழைத்து கவுரப்படுத்தியிருந்தார்கள்.

மேயர் பெத் வான் டயன்

மேயர் பெத் வான் டயன்

மேயர் பெத் வான் டயன் பேசும் போது, 'இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் இந்த பகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் பெருமளவில் இணைந்து ஒற்றுமையாக வாழ்கின்றனர். அகிம்சையையும் சமத்துவத்தையும் போதித்த காந்தியின் திருவுருவச் சிலை இங்கு அமைவது பெருமையாக உள்ளது. நினைவாலய குழுவினரே 700 ஆயிரம் டாலர் செலவில் இந்த பார்க்கில் அமைத்து தருவதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்,' என்றார்.

கன்சல் ஜெனரல் ஹரிஷ்

கன்சல் ஜெனரல் ஹரிஷ்

ஹூஸ்டன் இந்தியன் கன்சல் ஜெனரல் ஹரிஷ் பர்வதனேனி பேசுகையில், தென் ஆப்ரிக்கா நண்பர்கள் ‘ நீங்கள் வக்கீல் ஒருவரை தந்தீர்கள் நாங்கள் மகாத்மாவை திருப்பித் தந்தோம்' என குறிப்பிடுவதாக பெருமிதம் கொண்டார். டெக்சாஸ் மாநிலத்தில் காந்தி நினைவிடம் அமைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அமைப்புக் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

கவர்னர் நிக்கி ஹாலே

கவர்னர் நிக்கி ஹாலே

இந்திய வம்சாவளியைச் சார்ந்த, முதல் பெண் கவர்னரான நிக்கி ஹாலே, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமெரிக்காவில் வசிக்கும் சிறுபான்மையினர்களில் இந்திய வம்சாவளியினர்தான் அதிகம் படித்தவர்கள், அதிகமான தனி நபர் வருமானம் கொண்டவர்கள், அரசு உதவித் தொகையை நாடாதவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அதிகமாக சமூகப்பணிகளுக்கு செலவிடுபவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.

நகராட்சிக்கு ஒரு சென்ட் கூட செலவில்லை

நகராட்சிக்கு ஒரு சென்ட் கூட செலவில்லை

அவர் மேலும் கூறுகையில், "உள்ளூர் நகராட்சிக்கு எந்தவித செலவுக்கும் இடம் கொடுக்காமல், தாங்களாகவே நன்கொடையாக 700 ஆயிரம் டாலர்கள் செலவில் மகாத்மாவுக்கு நினைவு மண்டபம் எழுப்புகிறார்கள் என்றால், காந்தியின் கொள்கைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற காரணத்திற்காத்தான். காந்தியின் அகிம்சை மூலமே அமைதி நிலவும்.

அவருடைய பெண்கள் முன்னேற்றம் குறித்த சிந்தனையின் விளைவாகத்தான் முதல் பெண் கவர்னராக தென் கரோலைனா மாநிலத்தில் என்னால் வெற்றி பெற முடிந்தது. மகாத்மாவின் சிந்தனைகள் மென்மேலும் வளர இந்த நினைவு மண்டபம் மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகள் உறுதுணையாக இருக்கும்," என நம்புவதாகவும் தெரிவித்தார்.

எளிமையின் வடிவம்

எளிமையின் வடிவம்

அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களின் ஒன்றிற்கு கவர்னர் ( இந்தியாவில் முதல்வர்) என்ற நிலையில் கூட எந்த விதமான செக்யூரிட்டி கெடுபிடிகள் இல்லாமல், சாதாரண எஸ்யூவில் எந்த பந்தாவும் இல்லாமல் வந்திருந்தார் நிக்கி ஹாலே. மிகச் சாமானியராக அவர் கலந்து கொண்டது, பார்வையாளர்களிடம் நெருங்கி பழகியது கூடியிருந்தவர்களை மகிழ வைத்தது.

வருடத்திற்கு நான்கு நிகழ்ச்சிகள்

வருடத்திற்கு நான்கு நிகழ்ச்சிகள்

காந்தி நினைவாலய கமிட்டி தலைவர் டாக்டர் பிரசாத் தோட்டகுரா கவர்னரை வரவேற்று பேசினார். இந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் நினைவு மண்டபம் திறக்கப்படும். விழாவுக்கு காந்தியை பின்பற்றிய நெல்சன் மண்டேலா குடும்பத்தினர், மார்ட்டின் லூதர் கிங்க் குடும்பத்தினர், மகாத்மா காந்தியின் குடும்பதினர் அழைக்கப்படுகிறார்கள் என்றார். ஆண்டு தோறும், இந்திய சுதந்திர தின விழா, குடியரசு தினவிழா, காந்தி பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நான்கு நாட்களும் இங்கே கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். காந்தியின் பஜன் பாடல்களுடன், ஏ.ஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலும் ஒலிபரப்பப்பட்டது.

காந்தி பார்க்கில் காந்தி சிலை?

காந்தி பார்க்கில் காந்தி சிலை?

நினைவு மண்டபம் அமைக்கப்படும் இர்விங் ஜெஃபர்ஸன் பார்க்கிற்கு அருகில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். வார இறுதியில் நம்மவர்கள் கிரிக்கெட், வாலி பால் என ஆடும் இந்த பார்க்கை செல்லமாக 'காந்தி பார்க்' என்றே அழைக்கிறார்கள். ஜெஃபர்ஸன் பார்க், இனி நிஜமாகவே காந்தி பார்க்தான்!

English summary
South Carolina Governor Nikkei Hale laid foundation stone for Gandhi statue at Irving, US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X