மோசமான பிளம்பிங்; குறைவான வெண்டிலேஷன் - கொரோனா பிடியில் கொத்தாக சிக்கிய ஹாங்காங்
ஹாங்காங்: கொரோனா பரவல் அதிகமாகியிருக்கும் நிலையில், ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஹாங்காங்கில் புதிய கொரோனா அலை வீசி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 4,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 40% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஹாங்காங்கின் யாவ் சிம் மோங் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் பழைய கட்டிடங்கள் மற்றும் பிளாட்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்பகுதியில் நடத்தப்பட்ட கழிவுநீர் சோதனையில், அதிக அளவிலான கொரோனா வைரஸ் தடயங்கள் கிடைத்திருக்கின்றன. மோசமாக கட்டப்பட்ட பிளம்பிங் அமைப்புகள், குறைவான வெண்டிலேஷன்களால் காற்றோட்டம் இல்லாமல் போனது ஆகிய காரணங்களால் அங்கு வைரஸ் புகுந்து விளையாடியிருப்பது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து, யாவ் சிம் மோங்கில் 16 கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியில் வசிக்கும் அனைவருக்கும், கொரோனா சோதனை நடத்தப்படும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை யாருமே வெளியே வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கட்டாய சோதனைக்கு உட்பட்ட நபர்கள், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும் வரையிலும், அதற்கான முடிவுகள் கண்டறியப்படும் வரையிலும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த பொழுது ஹாங்காங் நகரத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், வேறு வழியின்றி லாக் டவுன் முடிவுக்கு அரசு வந்திருக்கிறது.
ஹாங்காங்கில் இதுவரை மொத்தம் 9,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, ஜன.22 வரை 168 இறப்புகள் பதிவாகியுள்ளன.