எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்
டெஹ்ரான்: ஈரானில் எரிசாராயத்தை குடித்தால் கொரோனா குணமடையும் என வதந்தி பரவிய நிலையில் அதை குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 1000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கொரோனா வைரஸால் ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஈரானில் 29 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,200 பேர் பலியாகிவிட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானில் பலி எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் வருவதை தடுப்பதற்காக ஈரானில் உள்ள பல ஏழை, படிக்காத மக்கள் இணையதள வதந்திகளை நம்புகிறார்கள். அதன்படி எரிச்சாராயம் குடித்தால் கொரோனா வராது என வதந்தி காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்தனர்.
பொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம்.. கொரோனாவை பரப்புவோம்.. பெங்களூர் இளைஞரின் அதிர்ச்சி போஸ்ட்

1000 பேர் ஆபத்து
5 வயதுள்ள குழந்தைக்கு கூட அவரது பெற்றோர் சாராயம் கொடுத்ததால் அந்த குழந்தை பார்வையை இழந்துள்ளது. ஈரானில் சாராயம் குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர். 1000 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் உள்ளனர்.

குமட்டல்
இந்த மெத்தனால் எந்தவித வாசனையையும் சுவையையும் தராது. இது உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும், மூளையை சேதமடையச் செய்யும். இதற்கான அறிகுறிகளாக மார்பு வலி, கண் பார்வை இழத்தல், கோமா நிலைக்கு செல்லுதல், குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். சாலைகளில் கூட இந்த சாராயங்கள் எளிதில் கிடைக்கின்றன என்கிறார்கள்.

300 பேர் பலி
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் எரிச் சாராயம் குடித்தால் அது ஜீரண மண்டலத்தை சுத்தப்படும் என வதந்தியை பரப்பியுள்ளனர். இதை நம்பி சாராயம் குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர் என்றார். இது போல் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை 768 பேர் பாதிக்கப்பட்டனர். 76 பேர் பலியாகிவிட்டனர்.

ஆலைகள்
இதையடுத்து 4200 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஈரான் நாட்டில் சாராயம் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி குடித்தால் அபராதம் விதிக்கப்படும். 1979 ஆம் ஆண்டு முதல் ஈரானில் உள்ள சாராய தொழிற்சாலைகள் மருத்துவ தேவைகள் மற்றும் சானிடைசர்கள் தயார் செய்யும் ஆலைகளாக மாறிவிட்டனர். மற்ற ஆலைகள் மூடப்பட்டு அப்படியே கிடக்கிறது.