For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றி பெற்றால் மட்டுமே தேர்தல் முடிவை ஏற்பேன் – ட்ரம்ப் அடாவடி!

By Shankar
Google Oneindia Tamil News

டெலவர்(யு.எஸ்): நான் வெற்றி பெற்றால் மட்டுமே அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

240 ஆண்டு கால அதிபர் தேர்தல் வரலாற்று பாரம்பரியத்தில் எந்த வேட்பாளரும் சொல்லத் துணியாததைச் சொல்லி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

I’ll accept elections if I win, says Trump

லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற இறுதி விவாதத்தில், தேர்தல் முடிவுகள் பாதகமாக வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்று நெறியாளர் க்ரிஸ் வாலஸ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அந்த நேரத்தில் அதைப் பற்றி பார்க்கலாம் என்றார். மேலும் அது ஒரு சஸ்பென்ஸ் என்றும் கூறினார்.

ட்ரம்பின் இந்த பதிலுக்கு, ஜனநாயகத்தில் இது கொடூரமான அணுகுமுறையாகும் என்று ஹிலரி உடனடியாக மேடையிலேயே கருத்து தெரிவித்தார்.

மீண்டும் உறுதி செய்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில், பெரும்பான்மையான அதிபர் வாக்குகளை ஒருவர் பெற்று விட்டால் எதிர்த்து போட்டியிட்டவர், 'மக்களின் முடிவை ஏற்று தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது அதிபருக்கு வாழ்த்துகள்' என்று அறிவிப்பது வழக்கம்.

முதல் அதிபர் தேர்தல் நடைபெற்ற காலம் தொட்டே இந்த நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் பிளவு பட்டுக்கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.

அதிபர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவும் தலைவர்கள் கடைப்பிடித்து வரும் பாரம்பரியமாகும்.

விவாதத்திற்கு அடுத்த நாள் ஒஹாயோ மாநிலத்தின் டெலவர் நகரில் பிரச்சாரம் செய்த ட்ரம்ப், இந்த தேர்தல் முடிவுகளை நான் வெற்றி பெற்றால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்று அறிவித்தார்.

தோற்றால் என்ன செய்வேன் என்று நேரடியாகச் சொல்லவில்லை. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றால் நீதிமன்றத்தை நாடுவேன் என்பதைத்தான் இப்படி கூறியுள்ளார் என்று நம்பப்படுகிறது.

ட்ரம்பின் இந்த பேச்சு குடியரசுக் கட்சிக்குள்ளேயே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கட்சிக்கு மேலும் பின்னடைவாக கருதுகிறார்கள்.

நீதிமன்றம் போன அல் கோர்

2000ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் , எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அல் கோரை விட 547 வாக்குகள் கூடுதலாக பெற்று ஃப்ளோரிடாவைக் கைப்பற்றினார். அங்கு பல நகரங்கள், கவுண்டிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் இல்லாமல், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தது.

ஃப்ளோரிடா கிடைத்ததால் புஷ்க்கு 6 அதிபர் வாக்குகள் கூடுதலாக பெற்று அல் கோரை தோற்கடித்தார். அதாவது வெறும் 547 வாக்குகள் அமெரிக்க அதிபர் யாரென்று முடிவு செய்தது.

ஆனால் தேசிய அளவில் புஷ்ஷை விட அரை சதவீதம் கூடுதல் வாக்குகள் அல் கோர் பெற்று இருந்தார்.

இந்த முடிவை எதிர்த்து அல் கோர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அவரது மறு எண்ணிக்கை கோரிக்கையை மறுத்து விட்டது.

மேல் முறையீடு செல்லலாம் என்று ஆதரவாளர்கள் அறிவுறுத்திய போது, நாட்டு நலன் கருதி தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். நிலையற்ற தன்மை நாட்டுக்கு ஆபத்தானது. தனி மனித வெற்றியை விட நாட்டின் வெற்றி தான் முக்கியமானது என்று புஷ்ஷை அதிபராக ஏற்று தோல்வியை ஒப்புக்கொண்டார்..

சட்டச் சிக்கல் வருமா?

எதிரணி வேட்பாளரின் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் பாரம்பரியமானது என்றாலும் சட்டப்படி தேவையற்றது. வெற்றி பெற்றவர் அதிபராக பதவி ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதே சமயத்தில் தோல்வியுற்றவர் , தேர்தல் முறைகேடு என்று நீதிமன்றத்தை அணுக முடியும்.

அப்படி நேரும் பட்சத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவு தள்ளி வைக்கப்படும். பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் போது நீதிமன்றம், அத்தகைய கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விடும்.

வாக்காளர் முறைகேடு என்று குற்றச்சாட்டுகளை கூறிவரும் ட்ரம்ப், அதைக் காரணம் காட்டி முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லக்கூடும்.

தற்போதைய நிலையில் ஹிலரி மாபெரும் வெற்றி பெறுவார் என்று கணிப்புகள் கூறுகின்றன. டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் கோட்டைகளில் கூட வெல்லக்கூடும் என்று எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

2004ம் ஆண்டு தேர்தலில் ஜான் கெரி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு புஷ் ஐ அதிபராக ஏற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் ஜான் மெக்கய்ன், மிட் ராம்னி ஆகியோர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒபாமாவை அதிபராக வாழ்த்தினர்.

அமெரிக்க வாக்காளர்கள் தெளிவான முடிவைக் கொடுத்து விட்டால் ட்ரம்பின் இந்த மிரட்டல் பேச்சு, கேலிக்கூத்தாக போய்விடும்.

English summary
Mocking his critics, Donald Trump pledged on Thursday to fully accept the outcome of next month’s presidential election if he wins. The Republican said he reserved the right to contest questionable results, deepening his unsubstantiated assertions that the race against Hillary Clinton could be rigged against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X