ஆப்கன் விவகாரத்தில் இந்தியா நடத்தும் சிறப்புக் கூட்டம்.. ஓகே சொன்ன ரஷ்யா.. பாக்., சீனா பதில் என்ன?
காபூல்: ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 10ஆம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை இந்தியா நடத்தவுள்ளது. இதில் ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்க்கப்பட்டது. தாலிபான்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை அமைத்தனர்.
ஆப்கன் நிலை குறித்து சர்வதேச நாடுகள் தொடர்ந்து பல முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, ரஷ்யா இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
என் மகள் சிறுமி அவளை அடிக்காதீர்கள்...உணவுக்காக 9 வயது சிறுமியை விற்ற ஆப்கன் தந்தையின் கதறல்

இந்தியா சிறப்புக் கூட்டம்
இந்நிலையில், ஆப்கனில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை வரும் நவ. 10ஆம் தேதி நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆப்கனில் மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள்
ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளது. சீனா இது தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தியா நடத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கன் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மத்திய ஆசிய நாடுகளும் விவாதிப்பது இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தான் முடிவு
இந்தியாவின் அழைப்பிற்குப் பாகிஸ்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதில் அளிக்கவில்லை. இருப்பினும், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், இந்தியா நடத்தும் இந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என அந்நாட்டு ஊடகங்களிடம் கூறியிருந்தார். மேலும், நிலைமையை மோசமாக்கியவர்களால் எப்படித் தீர்வை தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

எதிர்பார்த்த ஒன்று தான்
பாகிஸ்தானின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்று தான் என்றும் இருப்பினும், உலகின் பல நாடுகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். மேலும், ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதே தங்கள் முதன்மை நோக்கம் என கூறும் பாகிஸ்தான் இந்த கூட்டம் என்றில்லை இதற்கு முன் நடந்த மாநாடுகளிலும் கலந்து கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

அஜித் தோவல்
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. முன்னதாக, கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ஆப்கன் நிலை குறித்து பல்வேறு நாடுகளும் கூடி விவாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கன் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பல்வேறு நாடுகளும் முடிவுகளை எடுத்து வருகிறது. இருப்பினும், தாலிபான் விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அவசரம் வேண்டாம்
தாலிபான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை தாலிபான்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் உலக நாடுகள் அவசரம் காட்டக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தாலிபான்கள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் ஆப்கானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என 50 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.