For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனுபவம் இல்லாத சின்னஞ்சிறு புலிக்குட்டிகள் சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்தியது எப்படி?

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அனுபவம் இல்லாத கிராமங்களில் இருந்து வந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷரத்துல் தாகூர், முகமது சிராஜ், சைனி ஆகியோர் இந்த சாதனைக்கு பங்காற்றியுள்ளனர்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்திய கிரிக்கெட்டுக்கு இன்று மிகவும் பொன்னான நாள். பலம் வாய்ந்த சிங்கங்களை அதன் குகையிலேயே வீழ்த்தி உள்ளனர் இந்திய புலிகள். அதுவும் காப்பா மைதானத்தில் 33 ஆண்டுகளில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியாவுக்கு அந்த இடத்திலேயே கொடுத்த அடி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்காது.

விமர்சனங்கள் தாக்கியது

விமர்சனங்கள் தாக்கியது

இந்த தொடரின் வெற்றியை ஒரு சாதாரண விளையாட்டு வெற்றிபோல் கடந்து சென்று விட முடியாது. ஏனெனில் முதல் டெஸ்டில் இந்தியா 38 ரன்களில் அடங்கி தோல்வியை சந்தித்தபோது, இனி அவ்வளவுதான், 4-0 என்ற வெற்றியை உறுதி செய்து கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு இப்பவே கொடுத்து விடலாம் என பல்வேறு விமர்சனங்கள் பும்ரா பந்தின் வேகத்தை விட நான்குபுறமும் வந்து தாக்கியது.

காயம் கொடுத்த அடி

காயம் கொடுத்த அடி

இது மட்டுமா.. கோலி குழந்தை பிறப்புக்காக வீட்டுக்கு திரும்பினார். ஷமி காயத்துடன் சென்று விட்டார். இஷாந்த் சர்மாவால் வரவே முடியவில்லை. இருந்தும் 2-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகனியை பறித்து விமர்சகர்களுக்கு பரிசளித்தது இந்திய அணி. மூன்றாவது டெஸ்டில் காயத்தால் மேலும் பல அடிகள்.

குட்டிபுலிகளின் சாதனை

குட்டிபுலிகளின் சாதனை

உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல் காயத்தால் விலகி விட்ட நிலையில், ஏறக்குறைய தோத்து விடுவோம் என்ற கட்டத்தில் காயத்துடன் ஹனுமான் விகாரியும், நம்ம அஷ்வினும் களத்தில் மன உறுதியுடன் போராடி தேடி தந்த டிரா இந்த வெற்றியை விட தித்திப்பானது. 4-வது டெஸ்டில் அஷ்வின், பும்ரா, விஹாரியும் காயத்தால் விலகிக் கொள்ள நம்ம தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஷரத்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகிய சின்ன பையன்களை வைத்தே கங்காருவை ஓட என்ன, நடக்க கூட முடியாத அளவுக்கு முடக்கியதுதான் குட்டிபுலிகளின் சாதனை.

மன உறுதியின் உச்சம்

மன உறுதியின் உச்சம்

இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் எக்ஸ்பிரஸ் ஸ்டார்க் பந்தை எளிதில் சமாளித்த இந்திய அணியால் காயம் என்னும் தூஸ்ராவை சமாளிக்க முடியவில்லை. அதையும் சந்தித்து, ஆஸ்திரேலியா வீரர்களின் சீண்டல்கள், ரசிகர்களின் நக்கல்கள் என அனைத்தையும் தாங்கி வென்று காட்டியது மன உறுதியின் உச்சம். ஒரு காலத்தில் கிரிக்கெட் பணக்காரர்களின் விளையாட்டாக இருந்தது. ஆனால் குடிசையில், ஓட்டு வீட்டில் கிரிக்கெட் டி.வி.யில் கிரிக்கெட்டை பார்த்தவர்கள், தங்களது திறமையால், உழைப்பால் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி கொண்டிருப்பது இன்றைய காலகட்டத்தில் அதிகம்.

நடராஜன் சாதனை

நடராஜன் சாதனை

இந்தியாவின் இந்த மகத்தான வெற்றிக்கு மேலே குறிப்பிட்ட இந்த வகையிலான வீரர்களும் அடங்குவர். ஆம்.. இந்த தொடரில் இடம் பிடித்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷரத்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகிய 4 பேரும் சின்னஞ்சிறு கிராமங்களில் இருந்து வந்து இன்று சாதனையாளர்களாக மாறி நிற்கின்றனர்.

சேலத்து சிங்கம்

சேலத்து சிங்கம்

நமது சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்தவர். ஐ.பி.எல்.லில் ஹைதராபாத் அணியை கவுரவ நிலைக்கு கொண்டு சென்றதில் இந்த சேலத்து சிங்கத்தின் பங்கும் அதிகம் உண்டு. அந்த சிறப்பான பங்குதான் அவரை ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இழுத்து சென்றது. தனக்கு முதல் குழந்தை பிறந்துவிட்டது என்பதை அறிந்தும் வாரிசை விட வாய்ப்புதான் முதலில் முக்கியம் என்பதை தெரிந்து வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார். டி-20-ல் அசத்தியதால் ஒரு நாள் போட்டியில் இடம். அதிலும் சாதித்து காட்டியதால் டெஸ்ட் அணியில் இடம். தற்போது அதிலும் தனது திறமையை நிரூபித்து வெற்றிக்கனியுடன் நாடு திரும்ப உள்ளார் நடராஜன்.

வாஷிங்டன் சுந்தர் அசத்தல்

வாஷிங்டன் சுந்தர் அசத்தல்

அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர். டி.என்.பி.எல்.லில் ஜொலித்தால் ஐபிஎல் அழைப்பு தேடி வந்தது. அங்கும் தங்கமாக மின்னியதால் இந்திய அணியில் வாய்ப்பு. தற்போது கடைசி டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆஸிக்கு மரண பயத்தை காட்டி கெத்தாக ஊருக்கு பறக்க உள்ளார் சுந்தர்.

ஷரத்துல் தாகூரின் போராட்டம்

ஷரத்துல் தாகூரின் போராட்டம்

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிய அனுபவம் ஷரத்துல் தாகூர், உண்டு. ஆனால் சர்வதேச டெஸ்ட் அவருக்கு முதல் அனுபவம். தனது இளைய நாட்களில் உடல் பருமனை எதிர்த்துப் போராடியவர் அவர். ஆனாலும் போராடி சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்து 4-வது டெஸ்டில் சிறந்த ஆல்ரவுண்ரடாக ஜொலித்துள்ளார் ஷரத்துல் தாகூர்.

முகமது சிராஜின் மன உறுதி

முகமது சிராஜின் மன உறுதி

வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவரது தந்தை காலமானார், ஆனாலும் அவர் நாட்டுக்கு திரும்பி வராமல் தொடர்ந்து விளையாடினார். ரசிகர்களின் கேலி, கிண்டலும் அவரை துளைத்தன. எனினும் துவண்டு விடாமல் 5 விக்கெட் சாய்த்து தனது தந்தைக்கு மரியாதை செலுத்தினார் முகமது சிராஜ்.

சைனியின் பங்கு அதிகம்

சைனியின் பங்கு அதிகம்

இந்திய வீரர் சைனியையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம். அவர் சாதாரண வீட்டில் பிறந்தார். அரசாங்க ஓட்டுநரான அவரது தந்தைக்கு மகனுக்காக கிரிக்கெட் உபகரணங்களை வாங்க முடியவில்லை, கவுதம் கம்பீர் அவரது திறமையை கவனித்து டெல்லிக்கு சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு வளர்த்து விட்டார். இந்த தொடரில் காயத்துடன் போராடிய சைனி இரண்டு இன்னிங்ஸ்களில் 12.5 ஓவர்கள் வீசினார். மேற்கண்ட இந்த 5 வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழையும்போது அவர்களுக்கு அனுபவம் இல்லை. ரசிகர்கள் பலம் இல்லை. ஆனாலும் களத்தில் மன உறுதியுடன் போராடி இவர்கள் இந்த நிலையை எட்டியுள்ளனர்.

English summary
The Indian team has set a historic record in the Test series against Australia. Natarajan, Washington Sunder, Sharadul Tagore, Mohammad Siraj and Saini from inexperienced villages have contributed to this achievement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X