For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாவின் கிரீன்கார்டு சலுகை அறிவிப்பு: பெரும் மகிழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

வாசிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தங்கள், க்ரீன் கார்டு விண்ணப்பித்து இன்னும் கிடைக்காத இந்தியர்களுக்கு புதிய சலுகைகளை கொடுத்துள்ளது.

இது கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின், பல்வேறு அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டும், பாராளுமன்றத்தில் பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டும் வரும் குடியுரிமைச் சீர்திருத்த மசோதா நிறைவேறாத நிலையில், அதிபர் ஒபாமா, சில ஆணைகள் பிறப்பித்துள்ளார்.

Indians are immense happy with Obama's new Immigration amendments

செயல்படாத பாராளுமன்றம்

சட்டத்தை மீறி எல்லை தாண்டி வந்த, சுமார் 11 மில்லியன் லத்தீன் இன மக்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பவேண்டும் என்று குடியரசுக் கட்சியினரும், மன்னித்து குடியுரிமை அளிக்கவேண்டும் என்று ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினரும் நேர் எதிர் கருத்து கொண்டுள்ளனர்.

அதனால் க்ளிண்டன் காலத்திலிருந்தே இதுதொடர்பான எந்த ஒரு மசோதாவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், சற்று சிரமமாக இருந்தாலும் தனது கட்சியினர் பெரும்பான்மை பெற்றுவிடுவார் என ஒபாமா எதிர்ப்பார்த்தார். ஆனால் குடியரசுக் கட்சியினர் இரண்டு அவைகளையும் கைப்பற்றி விட்டனர்.

எல்லை தாண்டியவர்களுக்கும் பரிவு

இனியும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்த ஒபாமா அதிரடியாக செயல்பட முடிவெடுத்துள்ளார். தனது அதிகாரத்துக்குட்பட்டு, சீர்திருத்தங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம்,அமெரிக்கக் குடிமகன் அல்லது க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் பெற்றோர்கள், எல்லை தாண்டி வந்திருந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தால், தற்கால அனுமதி வழங்கப்படும். அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமான வரி உட்படஅனைத்து விதிகளையும் பின்பற்றவேண்டும். சுமார் 3 மில்லியன் மக்கள் இதனால் பலனடைவார்கள்.

குற்றவாளிகளை நாடு கடத்தல்

சட்டத்தை மீறி அமெரிக்காவில் நுழைந்த குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிழல் உலக தாதாக்கள் போன்றவர்களை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையில் கூடுதல் படை, கருவிகள் கொண்டு, இனிமேல் யாரும் நுழைய முடியாதபடி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதிபர் ஒபாமாவின் முந்தைய நடவடிக்கைகளால் கடந்த சில ஆண்டுகளில் எல்லைதாண்டி வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் இந்தியர்கள்

சாதாரண விசா பிரிவில் விண்ணப்பித்த இந்தியர்கள், க்ரீன்கார்டு பெறுவதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. 2003ம் ஆண்டு விண்ணப்பத்தவர்களுக்கே இன்னும் கிடைத்த பாடில்லை. அதற்கு பின்னால் வந்தவர்கள், முதல் இரண்டு நிலைகள் (Labour, I-140) முடிந்து, மூன்றாம் நிலை விண்ணப்பம் (I-485) செய்ய முடியாமலே இருக்கிறார்கள். மூன்றாம் நிலை விண்ணப்பம் செய்தால்தான், வேலைமாற்றம் மற்றும் தாய்நாடு சென்றுவர விசா (Advance Parole) போன்ற வசதிகள் கிடைக்கும்.

ஆனால் வருடாந்திர விசா எண்ணிக்கை, தேவையை விட மிகக் குறைவாக இருப்பதால், லட்சக்கணக்கானோர் I-485 விண்ணப்பிக்க முடியாமலே உள்ளார்கள். I-485 விண்ணப்பித்து, நிர்ணய தேதி முந்தைய வருடங்களுக்கு போய்விட்டதால் சுமார் 40 ஆயிரம் பேர் காத்து இருக்கின்றனர்.

சட்டபூர்வமான ஊழியர்களுக்கும் பரிவு

உயர்கல்வி மற்றும் சிறப்புத் தகுதியுடன் அமெரிக்காவில் ஹெச்1 பி விசாவில் வேலை பார்த்து வருபவர்களுக்கு, தற்போதைய அறிவிப்பு மூலம் க்ரீன்கார்டு கிடைக்கும் வரையிலும் கூடுதல் சலுகைகள் கிடைக்க உள்ளது. முதல் இரண்டு நிலை விண்ணப்ப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், மூன்றாம் நிலை விண்ணப்பம் (I-485) செய்வதற்கு முன்னதாகவே, வேலைவாய்ப்பு அனுமதி (EAD) க்கு விண்ணப்பிக்கலாம். இதனால் வேலை மாற்றம் எளிதாகிறது.

விண்ணப்பதாரரின் மனைவி /கணவனும் இந்த வேலைவாய்ப்பு அனுமதி (EAD) பெற்றுக்கொள்ளலாம். சிறு நிறுவனங்கள் க்ரீன்கார்டு என்று ஆசை காட்டியே குறைந்த ஊதியம் வழங்கி வந்தார்கள். அப்படிப்பட்ட நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு வேலை மாற்றம் இனிமேல் எளிதாகிறது. ஊழியர்களின் அதிக சம்பளம் மூலம் அரசாங்கத்திற்கும் அதிக வருமான வரி கிடைக்கிறது.

ஹெச்1 பி விசாக்காரர்களுக்கும் பெண் கொடுக்கலாம்

அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்தால், அமெரிக்க குடிமகனா, க்ரீன் கார்டு வைத்திருப்பவரா என்று பார்த்து தான் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். ஹெச்1பி விசா வைத்திருந்தால், மாப்பிள்ளை எப்போ வேண்டுமானாலும் திரும்பி வந்துவிடுவாரோ என்ற அச்சம் இருக்கும். தற்போதைய விதிமுறை மாற்றத்தின் மூலம் ஹெச்1பி விசாவில் இருந்து க்ரீன்கார்டு விண்ணப்பத்திருந்தால், க்ரீன்கார்டுக்குரிய முக்கிய சலுகைகளை பெற்று தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருக்கமுடியும்.

மனைவிக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு அனுமதி(EAD) பெறமுடியும் என்பதால், நிச்சயத்தன்மை அதிகரித்துள்ளது. அதனால் ஹெச்1பி பையன்களுக்கு கல்யாணச் சந்தையில் மவுசு கூட வாய்ப்புள்ளது.

விடாக்கண்டன் கொடாக்கண்டன் விளையாட்டு

அதிபர் ஒபாமாவின் அறிவிப்பு, இந்தியர்களுக்கு இனிப்பாக இருந்தாலும், அவருடைய அதிகார வரம்பு குறித்து குடியரசுக் கட்சியினர் கேள்வி கேட்டுள்ளனர். சட்டத்துறை வல்லுனர்கள் ஒபாமாவுக்கு இத்தகைய அதிகாரம் இல்லையென்று கூறியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை அதிகாரிகளோ, அதிபருக்குரிய அதிகாரங்களுக்கு உட்பட்டே ஒபாமா ஆணை வெளியிடப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளனர். இது குறித்து குடியரசுக் கட்சியினர் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. அந்த கட்சி ஆளும் டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் ஒபாமாவின் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அரசாங்கத்தை முடக்கிப்பார்.... ஒபாமா எச்சரிக்கை

குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் தலைவர்களும், ஒபாமாவின் ஆணைக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் 11 ம் தேதி நிதி ஒதுக்கீடு மசோதா வர இருக்கும் நிலையில், ஏதாவது இடையூறு செய்து அரசாங்கத்தை முடக்க நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தனது உரையில் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், குடியரசுக் கட்சியின் முக்கிய கோரிக்கையான 'கனடா கீஸ்டோன் பைப்லைன்' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு அவர்களின் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

புறக்கணித்த தொலைக்காட்சிகள்

அதிபர் மக்களிடம் நேரிடையாக உரையாற்றுகிறார் என்றால், பொதுவாக அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்வார்கள். ஒபாமாவின் குடியுரிமை சீர்திருத்த சட்ட ஆணை அறிவிப்பை சிபிஎஸ், என்பிசி, ஃபாக்ஸ், ஏபிசி தொலைக்காட்சிகள் ஒலிபரப்பவில்லை. அதிபரின் முக்கிய அறிவிப்பு மக்களிடம் சென்று சேர்ந்து விடாமல் தடுப்பதற்கான முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

உச்சக் கட்டமாக பிரபல லத்தீன் தொலைக்காட்சியான யுனிவிசன், அந்த நேரத்தில் லத்தீன் க்ராமி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. ஒபாமாவின் அறிவிப்பால் பலன் அடையும் லத்தீன் இன மக்கள் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்துள்ளார்கள்.

வருங்காலத்தை குறிவைக்கும் ஒபாமா அரசு

நீங்கள் செய்வதை செய்யுங்கள் நான் செய்வதை செய்கிறேன் என்று சந்தடி சாக்கில், இன்னும் அமெரிக்கக் குடியுரிமை(citizenship) பெறாதவர்களை குறிவைத்து, புது வியூகம் வகுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார் ஒபாமா. குடியுரிமை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய இந்த ஆணையில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக க்ரீன்கார்டுகாரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பத்து மாநிலங்களில் இதை செயல்படுத்தக் கூறியுள்ளார். இந்தியர்கள் உட்பட பெரும்பான்மையான க்ரீன்கார்டு வைத்திருப்பவர்கள் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். ஆனால் குடியுரிமை பெற்றால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். வெறும் ஆதரவை வைத்து என்ன செய்வது, அதை வாக்கு வங்கியாக மாற்ற வேண்டாமா? என்ற கோணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் தேர்தல் தோல்வி மூலம் ஒரு வித சோர்வு நிலையில் இருந்த அமெரிக்க அரசியல், ஒபாமாவின் ஒரே ஆணை மூலம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அடுத்தடுத்து பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
The Indians who are waiting for Green card and citizenship in US, immense happy with the announcement of Obama's new Immigration Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X