For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரீஸ் நகரில் செப்டம்பரில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!

By Mathi
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உலகத் தொல்காப்பிய மன்ற தொடக்க விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக முனைவர் மு. இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள இந்த நூலில் 1600 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

International association for

இதில் உள்ள இலக்கணச் செய்திகளும், மொழியியல் செய்திகளும் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

தொல்காப்பிய ஆய்வுகளை உலக அளவில் நடத்தும் வகையிலும், உலகெங்கும் உள்ள தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், பற்றாளர்கள், இலக்கிய, இலக்கண ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்புத் தொடங்கப்பட உள்ளது. இந்த அமைப்புத் தொல்காப்பியத்தைப் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகத் தொல்காப்பிய மன்றத்தில் தமிழ் படித்தவர்கள் மட்டும் என்று இல்லாமல் தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கணினி வல்லுநர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் ஈடுபாட்டாளர்கள், மாணவர்கள் எனத் தமிழறிந்த அனைவரும் இணைந்து பணிபுரியலாம்.

தொல்காப்பிய மன்றம் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொல்காப்பிய மன்றத்திற்குரிய கிளைகள் தொடங்கப்பட்டுத் தக்க ஆய்வறிஞர்களால் வழிநடத்தப்பட உள்ளன.

தொல்காப்பியம் குறித்த மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்தித் தொல்காப்பிய ஆய்வினை வளர்த்தெடுப்பது தொல்காப்பிய மன்றத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும் தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், தொல்காப்பியம் குறித்த கட்டுரைகள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள் என அனைத்து விவரங்களையும் ஒன்றுதிரட்டி உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு இணையத்தில் வைப்பது என்னும் நோக்கிலும் செயல்பட உள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொல்காப்பியச் செய்திகள் எளிமையாக வெளிவர உள்ளன.

தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணைநின்றவர்களையும் அறிஞர்கள்குழு அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும் பரிந்துரைசெய்யும். அதன் அடிப்படையில், மலேசியாவில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் உலக அளவிலான விருது வழங்கித் தக்கவரைப் போற்ற உலகத் தொல்காப்பிய மன்றம் எண்ணியுள்ளது.

தமிழார்வமும் இலக்கண, இலக்கிய ஈடுபாடும் கொண்டு, செயலுக்கு முதன்மையளிக்கும் தமிழ்மக்கள் இம்மன்றத்தில் இணைந்து பணிபுரியலாம். தொல்காப்பிய நூலில் புலமையும், தமிழ்மொழி வளர்ச்சியில் ஆர்வமும்கொண்ட முனைவர் பொற்கோ (சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), பேராசிரியர் அ.சண்முகதாஸ் (இலங்கை), முனைவர் இ.பாலசுந்தரம் (கனடா), முனைவர் சுப. திண்ணப்பன்(சிங்கப்பூர்), சிங்கப்பூர் சித்தார்த்தன், ம. மன்னர் மன்னன் (மலேசியா), பேராசிரியர் இ. மறைமலை, ஜீன் லாக் செவ்வியார் (பிரான்சு), முனைவர் சு. அழகேசன், புலவர் பொ.வேல்சாமி, சு. சிவச்சந்திரன் (இலண்டன்), உள்ளிட்டவர்கள் இந்த மன்றத்தின் மூதறிஞர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்

பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் 2015 செப்டம்பர் மாதம் 27 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு கலந்துரையாட உள்ளனர். தொல்காப்பியத்தைப் பரப்பவும், தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுக்கவும், தொல்காப்பியம் குறித்த செய்திகளைத் திரட்டவும் ஆர்வமுடையவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தினரை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

தொல்காப்பிய மன்றத்தின் உலக அளவிலான பொறுப்பாளர்களாகப் பிரான்சில் வாழும் கி.பாரதிதாசன் (பிரான்சு), மு.இளங்கோவன் (இந்தியா), ஆம்பூர் மணியரசன் (செர்மனி), ஹரிஷ் (இலண்டன்), சந்தன்ராஜ் (சிங்கப்பூர்), வாணன் மாரியப்பன்(மலேசியா), அரவணைப்பு கு.இளங்கோவன் (குவைத்து), பழமலை கிருட்டினமூர்த்தி (குவைத்), த.சிவ பாலு(கனடா), சுரேஷ் பாரதி (சவுதி), அருள் பாலாசி வேலு(தைவான்), அன்பு ஜெயா (ஆத்திரேலியா), பொறியாளர் தி. நா. கிருட்டினமூர்த்தி (அந்தமான்), ஆகியோர் இணைந்து பணிசெய்ய உள்ளனர்.

தமிழ்ப்புலவர்களின் கையில் இருந்த தொல்காப்பியம் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் கவனத்திற்குச் செல்ல உள்ளமை மொழியார்வலர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

தொடர்புக்கு: மு.இளங்கோவன் 9442029053

இவ்வாறு முனைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

English summary
The inaugural function of International association for "Tholkappiyam and the first discussion meeting will be taking place in Paris, the capital of France on September 27, 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X