For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் க்ளிண்டன் சகாப்தம் முடிந்ததா ? ஜனநாயகக் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): ஜனவரி 20ம் தேதி குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். அரசியலில் அனுபவம் இல்லாமல் நேரடியாக அதிபராகி உள்ள பெரும் செல்வந்தர் ட்ரம்ப், அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று
இருக்கிறது. வெளியுறவு விவகாரம், தொழில்துறை, குடியுரிமை, புதிய தொழில் நுட்பம் என அனைத்து துறைகளிலும் ஒபாமா ஆட்சிக்கு நேர் எதிர் நிலைப்பாடு கொண்டவராக ட்ரம்ப் இருக்கிறார்.

ஒபாமாவின் எட்டாண்டு ஆட்சியில் அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது வலுவான நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Is this the end of Clinton Era in the US?

ட்ரம்பின் ஆட்சியில் பொருளாதாரம் தொடர்ந்து இதே நிலையில் இருக்குமா, மேலும் வலுவடையுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

அடுத்த நான்கு ஆண்டுகளின் ட்ரம்பின் ஆட்சியில் வலுவான பொருளாதாரம் தொடர்ந்து நீடிக்குமானால், ட்ரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்பில்லை. , அதற்கடுத்த நான்கு ஆண்டுகளும் அவர் அதிபராக தொடர்வதிலும் சிக்கல் இருக்காது.

பில் க்ளிண்டன் சகாப்தம்

குடியரசுக் கட்சியின் ரொனால்ட் ரீகன் சமீப கால அமெரிக்க அதிபர்களில் மிகவும் வெற்றிகரமானகவராக இருந்தார். அவரது ஆட்சி புதிய சகாப்தமாக விளங்கியது. அவரது துணை அதிபர் ஜார்ஜ் ஹெச் டபுள்யூ புஷ், ரீகனின் சகாப்தத்தை அடுத்து அதிபராகத் தொடர்ந்தார்.

1992 ம் ஆண்டு ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ வை தோற்கடித்து அமெரிக்காவின் இள வயது அதிபராக பில் க்ளிண்டன் ஆட்சியில் அமர்ந்தார். அடுத்த எட்டாண்டுகள் க்ளிண்டன் சகாப்தமாக இருந்தது.

Is this the end of Clinton Era in the US?

ஆட்சியை விட்டு இறங்கிய பிறகும் அனைத்து தரப்பினராலும் மிகவும் மதிக்கப்படும் தலைவராக இருந்தார். ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவராக தொடர்ந்தார். ஒபாமாவை ஆதரித்து, 2008, 2012 அதிபர் தேர்தல்களில் பில் க்ளிண்டனின் பிரச்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரதி உபகாரமாக ஹிலரி க்ளிண்டனுக்காக 2016ல் ஒபாமாவும் மிஷல் ஒபாமாவும் தீவிர பிரச்சாரம் செய்தனர். நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார் என்று நம்பப்பட்ட நிலையில் ஹிலரி தோல்வியைத் தழுவினார். அத்துடன் பில் க்ளிண்டனின் செல்வாக்கும் கட்சி மட்டத்தில் சரிந்து விட்டது.

என்ன செய்யப் போகிறது ஜனநாயகக் கட்சி?

ஜனநாயகக் கட்சியை பலப்படுத்தக் கூடிய அடுத்த தலைவர்கள் யார் என்று தெரியாத குழப்ப நிலைதான் இப்போதைக்கு உள்ளது. பதவியை விட்டு இறங்கிய பிறகு ஒபாமா கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா அல்லது ஜார்ஜ் புஷ் வழியில் அமைதியாக இருந்து விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய பேட்டியில் ஜனநாயகக் கட்சி மற்றும் ஹிலரி குழுவினரின் தேர்தல் செயல்பாடுகள் பற்றி தனது அதிருப்தியை ஒபாமா தெரிவித்து இருந்தார்.

ஜனநாயகக் கட்சி பலப்படுத்தப் படவேண்டும், புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் விருப்பத்தை கூறி இருந்தார். அதற்கான நடவடிக்கைகளில் ஒபாமாவின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

தீவிர இடதுசாரிகளான பெர்னி சான்டர்ஸ், எலிசபெத் வாரன் ஆகியோர் செனட்டர்களாக உள்ளனர். அவர்களது குரல் பாராளுமன்றத்தில் இன்னும் உரக்க ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த அதிபர் வேட்பாளராக, ட்ரம்பை எதிர் கொள்ள அவர்களுக்கு கட்சியில் ஆதரவு கிடைக்குமா என்பது அப்போதைய சூழலைப் பொறுத்து அமையும்.

Is this the end of Clinton Era in the US?

புதிய முகம் கமலா ஹாரிஸ்

கலிஃபோர்னியாவிலிருந்து செனட் அவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார். கல்ஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இரு முறை வெற்றி பெற்றவர். அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளார்.

தேசிய அரசியலுக்கு வந்த உடனேயே அவருக்கு நான்கு முக்கிய கமிட்டிகளில் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. உள் நாட்டு பாதுகாப்பு &அரசு விவகாரம், அறிவுசார்ந்த துறை, சுற்றுச்சூழல், பொதுப்பணித் துறை மற்றும் பட்ஜெட் கமிட்டிகளின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒபாமாவின் நன்மதிப்பை பெற்றவர் கமலா. பெர்னி சான்டர்ஸ், எலிசபெத் வாரன் உள்ளிட்ட மற்ற செனட்டர்களுடனும் இணக்கமான உறவு கொண்டவர். மிகப்பெரிய மாநிலமான கலிஃபோர்னியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என பல அனுகூலங்கள் கமலாவுக்கு உண்டு.

கமலா ஹாரிஸுடன் உள்ளூர் அரசியல் ரீதியாக தொடர்புடன் உள்ள அ.இ.அ.தி.மு.க வின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் அபு கான் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

"கலிஃபோர்னியாவில் குடியரசுக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக விளங்குகிறார் கமலா. பொருளாதார வீழ்ச்சியில் கலிஃபோர்னியாவில் வீட்டு மதிப்பு மிகவும் குறைந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள். அதற்கு தீர்வு காணும் விதத்தில் வீட்டுக் கடன் நிறுவனங்களிடமிருந்து 25 பில்லியன் டாலர்கள் இழப்பீடு பெற்றுத் தந்தார்.

தெற்கு கலிஃபோர்னியாவில் போதைப் பொருட்கள் மற்றும் கேங்ஸ்டரிஸைத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். சிலிக்கான்வேலி நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புடன், அவர்களின் பிரச்சனைகளை முழுமையாக அறிந்தவர்.

சமூக நலத்திட்டங்களுக்கும் சமநீதிக் கொள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பவர். ஜனநாயகக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் ஆவதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டவர்.

தமிழ் வம்சாவளி

எல்லாவற்றிற்கும் மேலாக நமது தமிழ்ப் பாரம்பரியத்தை இன்றளவும் கடைப்பிடிப்பவர். தமிழ் நாட்டு மீதும், குறிப்பாக சென்னை மீதும் நேசம் கொண்டவர். எப்போது பார்த்தாலும் வணக்கம் என்று தான் முதலில் சொல்லுவார். கமலா அடுத்த அதிபர் ஆனால் தமிழர்களுக்கு பெருமையாக அமையும்," என்று அபு கான் கூறினார்.

ஜனநாயகக் கட்சி பலவீனமடைந்து காணப்படும் நிலையில் கமலா ஹாரிஸ் அடுத்த தலைவராக உருவெடுப்பாரா? தேர்தலில் ட்ரம்பை எதிர்கொண்டு வெற்றி பெற்று அதிபர் ஆவாரா?

முதல் முறையாக அமெரிக்க செனட்டராக பராக் ஒபாமா பதவி ஏற்ற போது, அமெரிக்காவை எட்டு ஆண்டுகள் அதிபராக ஆட்சி செய்யப்போகிறவர் என்று யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.

ஆப்ரிக்கன் அமெரிக்கன் பின்னணியும் கொண்ட கமலா ஹாரிஸ், ஒபாமா வழியில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தால் ஆச்சரியமில்லை.

கமலாவைப் போல், இதுவரையிலும் எதிர்பார்த்திராத புதிய தலைவர்கள் வந்தால்தான்
ஜனநாயகக் கட்சியும் மீண்டும் வலுப்பெறும்.

கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா புற்றுநோய் ஆராய்ச்சியாளர். ஹார்மோன்ஸ் மற்றும் மார்பக புற்று நோய் மருத்துவத்திற்கு பெரும் பங்காற்றியவர். கமலாவின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் இந்திய அரசில் வெளியுறவுத் தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-இர தினகர்

English summary
Republican Donald Trump is geared up for the swearing in ceremony on January 20 th as 45 th President of United States and there are questions raised about the future of Democratic Party. After serving two terms as California Attorney General Kamala Harris has won as US Senator for the first time. With her African American background many consider her as a woman version of President Obama. Kamala Harris is a daughter of an Indian origin Dr. Syamala Gopalan. There is expectation that Kamala will emerge as the next leader of the Democratic Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X