For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய சினிமாக்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக்கூடாது: பாக். ஹைகோர்ட் அதிரடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Lahore high court stops screening of Indian films in Pakistan
லாகூர்: இந்திய சினிமாக்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கூடாது என பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பாகிஸ்தானில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படங்கள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட படங்களை விட அதிக நாள் ஓடி, வெற்றி விழா கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான முபாஷிர் லுக்மேன் என்பவர் 'இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது' என லாகூர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

1979-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டின் சினிமா தொடர்பான அவசரசட்டம் 270 (ஏ)-வின் படியும், நீதிமன்ற உத்தரவு 81-ன் கீழும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சினிமா, நாடகம் போன்றவற்றை பாகிஸ்தானில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி, முறைகேடான வகையில் இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக திரைப்படங்களை இறக்குமதி செய்து பாகிஸ்தானில் திரையிடும் சில சினிமா வினியோகிஸ்தர்கள், கொழுத்த லாபம் குவித்து வருகின்றனர். இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என்று அந்த பொதுநல மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் எதிர்கட்சிக்காரர்களாக பாகிஸ்தான் சினிமா வினியோகஸ்தர்கள் சிலரை இணைத்திருந்த முபாஷிர் லுக்மேன், பாகிஸ்தானின் அவசர சட்டத்தை மீறிய வகையில்,கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இதுவரை 213 இந்திய திரைப்ப்படங்கள் இவ்வாறு கள்ளத்தனமாக பாகிஸ்தானில் திரையிடப்பட்டதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் எதிர்கட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘திரைப்படங்களுக்கு அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய வேண்டியது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்சார் வாரியத்தின் கடமை. எனது கட்சிக்காரர்களை இந்த விவகாரத்தில் குற்றவாளிகளாக்க முடியாது' என்று வாதாடினார்.

இதற்கிடையில், உலகெங்கும் டிசம்பர் 20 அன்று வெளியான ‘தூம் 3' திரைப்படம் பாகிஸ்தானிலும் ரிலீஸ் ஆனது. பல நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட்டுகள் எல்லம் முன்பதிவு செய்து விற்று தீர்ந்துப் போய் விட்ட நிலையில் ஏராளமான பாகிஸ்தான் ரசிகர்கள், ‘தூம் 3' படத்தை காண திரையரங்குகளின் முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இந்த நிலையில், லாகூர் ஹைகோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காலித் முஹம்மது கான், ‘கோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் சென்சார் வாரியம் சான்றிதழ் அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக, பாகிஸ்தான் மைய அரசும், சென்சார் வாரியமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Lahore high court on Friday restrained Pakistan's federal film censor board from issuing certificates for the exhibition of Indian films in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X