For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதாரத் தடை நீக்கம்.... ஈரான் - அமெரிக்காவின் ஆடுபுலி ஆட்டமும் அஞ்சும் அரபு நாடுகளும்!

By Mathi
Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரான் மீதான பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஈரான் சிறையில் இருந்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்க ஈரான் எதிர்த்து வருகிறது. இப்படி சர்வதேச அரங்கத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஆடுகிற ஆடுபுலி ஆட்டத்தால் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் நிலைத்தன்மை என்பது கேள்விக்குள்ளாகிக் கொண்டே இருக்கிறது.

அணு ஆராய்ச்சிகளை நிறுத்தவும், தங்கள் நாட்டு அணு ஆராய்ச்சி மையங்களில் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நீக்கியுள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூர்வமானவையே என்றது.. ஆனால் அணு ஆயுதம் தயாரிக்கவே அணுசக்தி ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபடுகிறது என அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் குற்றம்சாட்டின.

இந்த விவகாரத்தின் உச்சமான ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டன.

உருவான ஒப்பந்தம்

உருவான ஒப்பந்தம்

இதனைத் தொடர்ந்து ஐ.நா. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஜெர்மனியும் இணைந்து ஈரானுடன் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது; இதற்காக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் கடந்த ஆண்டு உருவானது. இந்த ஒப்பந்தத்தை ஏற்று, சில வகை அணு ஆராய்ச்சிகளை நிறுத்துவது, அணு ஆராய்ச்சிக் கூடங்களில் சர்வதேச நாடுகளின் ஆய்வை அனுமதிப்பது ஆகியவற்றுக்கும் ஈரான் ஒப்புதல் தெரிவித்திருந்தது.

யுரேனியம் விவகாரம்

யுரேனியம் விவகாரம்

இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுத தயாரிப்புக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிக்கும், 12,000 இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. புளுடோனியம் தயாரிப்பு உலை கைவிடப்பட்டுள்ளது. இப்படியான ஈரானின் அணுசக்தி செயல்பாடுகள் குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள், சர்வதேச சமூகம் விரும்புவதைப் போல இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தது.

பொருளாதாரத் தடை விலக்கம்

பொருளாதாரத் தடை விலக்கம்

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அறிக்கையை ஏற்று தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நீக்கியுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா அதிபர் ஒபாமா, ஈரானுடன் ஏற்பட்டுள்ள அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இனி ஈரான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அணு ஆயுதத்துக்கு எதிரானதாக இருக்கும். மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதப்போர் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஈரான் நம்பிக்கை

ஈரான் நம்பிக்கை

ஈரான் அதிபர் ரெளஹானியோ, சர்வதேச நாடுகளுக்கு ஈரான் நட்புக் கரம் நீட்டியுள்ளது. சந்தேகத்தையும் பகையையும் விடுத்து, உலக நாடுகளுடன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளோம். எந்த நாட்டுக்கும் எந்த அரசுக்கும் ஈரான் எதிரியல்ல. அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் தூதராக ஈரான் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

பயன் என்ன?

பயன் என்ன?

இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்ட சொத்துகளை ஈரான் திரும்பப் பெறும். கச்சா எண்ணெய்யை எந்த ஒரு தடையும் இல்லாமல் இனி ஏற்றுமதி செய்யும்.

மேலும் ஈரான் மற்றும் அமெரிக்காவில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் உள்ள வாஷிங்டன் போஸ்ட் நிருபர் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அமெரிக்கா சிறைகளில் இருந்து 7 ஈரானியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சும் நாடுகள்

அஞ்சும் நாடுகள்

இருந்தபோதும் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபுநாடுகள், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கத்தை அச்சத்துடன் பார்க்கின்றன. அதேபோல் இஸ்ரேல், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. அதே நேரத்தில் துருக்கி இதனை வரவேற்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை ஈரான், அமெரிக்காவின் பரம எதிரியாக இருந்து வந்தது. சவூதி அரேபியா போன்றவை நட்பு சக்திகளாக இருந்து வந்தன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் ஓங்கி வருகின்றன. இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா உறவு வலுப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா இதுவரை கடைபிடித்த அணுகுமுறையிலும் தலைகீழ் மாற்றம் ஏற்படலாம்; இது தங்களது நாடுகளின் அமைதிக்கு வேட்டு வைக்கலாம் என்பது அரபு நாடுகளின் அச்சம்.

புதிய தடைகள்

புதிய தடைகள்

அதே நேரத்தில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொண்ட மறுநாளே அமெரிக்கா, கடந்த ஆண்டு 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதைக் கண்டித்து புதியதாக சில பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஈரான் சிறையில் இருந்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து இந்த புதிய தடையை அமல்படுத்தியுள்ளது அமெரிக்கா.

இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை என்பது ஈரானின் தேசிய பாதுகாப்புக்கான ஒரு நடவடிக்கை. இது குறித்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானும் அமெரிக்காவும் சர்வதேச அரசியல் அரங்கத்தில் விளையாடும் ஆடுபுலி ஆட்டங்களில் பல நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறியாகிக் கொண்டுதான் இருக்கின்றன....

English summary
The lifting of sanctions on Iran, which came late Saturday, followed confirmation from the UN's International Atomic Energy Agency that Tehran had fulfilled its obligations under an agreement last summer to limit its nuclear programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X