• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இளவரசி ஹயா: ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் தர துபாய் ஷேக்குக்கு உத்தரவு - மலைப்பூட்டும் மண முறிவு வழக்கு

By BBC News தமிழ்
|
Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum and Princess Haya Bint Al-Hussain
Reuters
Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum and Princess Haya Bint Al-Hussain

இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு என்று விவரிக்கப்படுகிறது. துபாயின் பில்லியனர் ஆட்சியாளர் மற்றும் அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீனவானம்சமாக £550 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடிக்கு தொகை தர வேண்டும் என்று முன்னாள் கணவரான துபாய் ஷேக்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஜோர்டானின் முன்னாள் மன்னர் ஹுசைனின் 47 வயது மகள் இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைனுக்கு 251.5 மில்லியன் பவுண்டுகளை மொத்தமாக வழங்குமாறு பிரிட்டன் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தமது தீர்ப்பில் கூறியது.

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூமின் ஆறு மனைவிகளில் இளையவராக இருந்தவர் ஹயா. செல்வமும் செழிப்பும் கொஞ்சும் ஷேக் முகமது பின் ரஷித், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமராகவும் செல்வாக்கு மிக்க குதிரை பந்தய உரிமையாளர்களில் ஒருவராகவும் இருப்பவர்.

ஹயாவுக்கு கிடைக்கும் சொத்துகள்

இந்த தீர்ப்பு பிரிட்டனில் உள்ள இரண்டு பில்லியன் பவுண்டு மதிப்பிலான சொத்துகளை இளவரசி ஹயா நடத்துவதற்கான ஏற்று நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதன்படி லண்டனின் கென்சிங்டன் அரண்மனைக்கு அருகே உள்ள மாளிகை மற்றும் சர்ரேயின் எகாமில் தற்போது அவர் வசித்து வரும் முக்கிய குடியிருப்பு இனி ஹயா வசம் வருகிறது.

தீர்ப்பின்படி ஹயாவுக்கு வழங்கப்படும் தொகையில், கணிசமான "பாதுகாப்பு பட்ஜெட்", விடுமுறை நாட்களுக்கான செலவினம், செவிலியர் மற்றும் பராமரிப்பாளருக்கான சம்பள்கள், குடும்பத்துக்கு பாதுகாப்பு வாகனங்களை இயக்குவதற்கான செலவினம், குதிரைகள் மற்றும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கான செலவினமும் அடங்கும்.

மேலும், ஹயாவின் இரண்டு குழந்தைகள் 14 வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகனுக்கு ஆண்டுதோறும் 5.6 மில்லியன் பவுண்டுகளை பாதுகாப்பான கொடுப்பனவு என்ற பெயரில் வழங்கவும் நீதிமன்ற தீர்ப்பு வகை செய்துள்ளது. இந்தத் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் உத்தரவாதத் தொகையாக 290 மில்லியன் பவுண்டுகள் பாதுகாக்கப்படும்.

'உயிர் பயத்தில் துபாயில் இருந்து வந்தவர்'

துபாய் ஆட்சியாளரும் தமது கணவருமான ஷேக் முகமது அல் மக்தூமிடம் இருந்து பிரிந்து நாட்டை விட்டு வெளியேற பிறகு பிரிட்டன் நீதிமன்றத்தில் இளவரசி ஹயா தொடர்ந்த வழக்கு இரண்டு வருட சட்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது நிறைவடைந்துள்ளது.

மண முறிவுக்கான இவர்களின் சட்டப்போராட்டம், இருள் சூழ்ந்த மேகம் போல ரகசியம் காக்கப்பட்டு வந்த மத்திய கிழக்கு அரச குடும்பங்கள் பற்றிய பொதுவான கவனத்தை உலக அளவில் ஈர்த்துள்ளது.

ஷேக் முகமது தனது மற்ற இரு மகள்களான ஷேக்கா லத்தீபா மற்றும் ஷேக்கா ஷம்சா ஆகியோரை கடத்திச் சென்றதாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை மீண்டும் துபாய்க்கு கொண்டு வந்ததாகக் கூறிய இளவரசி ஹயா, உயிர் பயத்தால் 2019இல் தமது குழந்தைகளுடன் துபாயில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.

72 வயதான ஷேக் முகமது, குதிரைப் பந்தய உலகில் ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்பவர். தமது மகள்களை கடத்தவில்லை என அவர் மறுத்தாலும், 2020ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அவை அனைத்தும் உண்மை என்றே கூறத் தோன்றுகிறது.

இளவரசி ஹயா தமது முன்னாள் பிரிட்டிஷ் மெய்க்காப்பாளருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த பிறகு அவரை அச்சுறுத்தும் வகையில் கவிதையொன்றை வெளியிட்ட ஷேக் முகம்மது அல் மக்தூம் அதில், "நீ வாழ்ந்தாய், நீ இறந்துவிட்டாய்" என்று கூறியிருந்தார்.

இளவரசி ஹயா பிரிட்டனுக்குச் சென்ற பிறகும், "எங்கு வேண்டுமானாலும் உன்னை எங்களால் தொடர்பு கொள்ள முடியும்" என்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததால், தனது குழந்தைகள் மீண்டும் கடத்தப்பட்டு துபாய்க்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அச்சத்தில் தங்களின் பாதுகாப்பிற்காகவே ஹயா பெரும் தொகையைச் செலவழித்து வந்துள்ளார்.

Princess Haya Bint Al-Hussain
Reuters
Princess Haya Bint Al-Hussain

ஷேக் முகமது, இளவரசி ஹயா, அவரது பாதுகாவலர்கள் மற்றும் அவரது சட்டக் குழுவின் செல்பேசி அழைப்புகள் சட்டவிரோதமாக ஹேக்கிங் செய்யப்படுவதாக இந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த ஹேக்கிங் பெகாசஸ் எனப்படும் ஊடுருவும் ஸ்பைவேரைப் பயன்படுத்தி செய்யப்பட்டது, இது இலக்கு வைக்கப்படும் செல்பேசிகளுக்குள் ஊடுருவி தகவல்களை திருடும். அந்த ஸ்பைவேரை தயாரித்தது இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுவாகும்.

ஷேக் முகமது தன்னிடம் ஹேக் செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்றும் தனது வெளிப்படையான அல்லது மறைமுகமான அதிகாரத்தை பயன்படுத்தி ஹயாவுக்கு எதிராக எந்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

ஆனால், பிரிட்டன் உயர் நீதிமன்றத்தின் குடும்ப வழக்குகள் பிரிவுத் தலைவரும் நீதிபதியுமான மூர், ஷேக் மக்தூமின் கூற்று நேர்மாறாக உள்ளதாகக் கண்டறிந்தார்.

தமது தீர்ப்பில், இளவரசி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற முடிவு வருவதாக அவர் கூறியுள்ளார். பிரிட்டனில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு தண்ணீர் கூட புகாத அளவுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் என்பது வெளி மூலங்களிலிருந்து வரவில்லை. மாறாக அவர்களின் தந்தையும் நாட்டின் முழு அமைப்பிலும் செல்வாக்கு உள்ளவரிடம் இருந்து வருகிறது என்று நீதிபதி கூறினார்.

"இந்த குழந்தைகளுக்கு ஒரு தெளிவான மற்றும் எப்போதும் தொடரக்கூடிய ஆபத்து உள்ளது, அது அவர்கள் சுதந்திரம் பெறும் வரை நிலைத்திருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி" என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

மேலும் இளவரசி ஹயா பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி மூர், "அவருக்கு [இளவரசி ஹயா] வாழ்நாள் முழுவதும், அவரால் [ஷேக் முகமது] அல்லது பொது பயங்கரவாதி மற்றும் பிற அச்சுறுத்தல்களில் இருந்து ஒரு தெளிவான மற்றும் எப்போதும் இருக்கும் ஆபத்து உள்ளது," என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது இளவரசி ஹயா மற்றும் அவரது குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடு விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கு "கடுமையான ஆபத்து உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஹயா மற்றும் அவரது குழந்தைகளை பாதுகாக்க பாதுகாப்பு கவச வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்கான தொகையை வழங்கும் உத்தரவை தமது தீர்ப்பில் நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum
Reuters
Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum

உயர் நீதிமன்ற நீதிபதி, "இந்தக் குழந்தைகள் திருமணத்தின் போது அனுபவிக்கும் விதிவிலக்கான செல்வம் மற்றும் குறிப்பிடத்தக்க வாழ்க்கைத் தரம்" ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு நியாயமான முடிவு கிடைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக கூறினார்.

இதன் காரணமாகவே பிற மண முறிவு வழக்கு போல இதை கருதாமல் வழக்கத்திற்கு மாறாக இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தியதாக நீதிபதி கூறினார்.

இளவரசி ஹயாவின் வழக்கறிஞர்கள், அவர் தனது சொந்த எதிர்காலத் தேவைகளுக்காக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்று வலியுறுத்தினர்,

ஆனால் நீதிமன்ற விசாரணைகளின் போது ஆடம்பரமாக அவர் செலவு செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

உதாரணமாக, ஒன்பது வயதே ஆன தனது மகனுக்கு, "அதுவரை கார்களை பரிசாக வழங்கிப் பழகியதால்" அவருக்கு மூன்று விலை உயர்ந்த கார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டது. அது நியாயமான விமர்சனமே என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

ஷேக் முகமது தனது முன்னாள் மனைவிக்கு வழங்கப்பட்ட பாரம்பரியமான பரம்பரை பொருட்கள் ஹயாவிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

உலக புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான டேம் மார்கோட் ஃபோன்டெய்ன் மற்றும் ருடால்ப் நூரேவ் ஆகியோரால் வழங்கப்பட்ட பாலே காலணிகள் இதில் அடங்கும். இளவரசி தனது உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதிய ஆன்லைன் கவிதையை நீக்கியதாகவும் ஷேக் மக்தூம் கூறியுள்ளார்.

இளவரசிக்கு தீங்கிழைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் ஷேக் மக்தூம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
London court directed Dubai ruler to give Rs 5000 crore as settlement for 17 years of marriage breakdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X