மலேசியாவில் ட்விஸ்ட் .. அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன் மீண்டும் பிரதமராகிறாரா மகதீர் முகமது?
கோலாலம்பூர்: மலேசியாவில் அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன் ராஜினாமா செய்த மகதீர் முகமது மீண்டும் பிரதமராவார் என்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மகதீர் கூறுகையில் பெரும்பான்மை ஆதரவு எனக்கு கிடைக்கும் என்பது உறுதி என கடந்த சனிக்கிழமை வெளியான அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். அப்படியெனில் 94 வயதான மகதீர், மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிமுடன் மீண்டும் இணைவார் என தெரிகிறது.
மலேசியாவின் பிரதமராக 2-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டவர் மகதீர் முகமது (94). உலகிலேயே அதிக வயதான பிரதமர் என அழைக்கப்படுகிறார்.

மகதீர் சத்தியம்
யுனைடட் இன்டிஜீனியஸ் கட்சியை சேர்ந்த இவர் மக்கள் நீதி கட்சியின் தலைவருடன் கூட்டணி அமைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். இருவரும் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில் அந்த தேர்தலில் இவர்களது கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது இரு தரப்புக்கும் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

மலேசியா
அன்வருக்கு ஆட்சி பொறுப்பை கொடுப்பதாக மகதீர் சத்தியம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அன்வருக்கு சொன்னபடி ஆட்சி பொறுப்பை மகதீர் விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் அண்மைக்காலமாக கூட்டணிக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த வார இறுதியில் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் திடீரென மகதீர் ராஜினாமா செய்தார்.

வேறு கட்சியினர்
அன்வர் ஆட்சி பொறுப்பேற்க முடியாதபடி மகதீர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை மன்னருக்கும் அனுப்பிவிட்டார். இதனால் மலேசியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகதீர் வேறு கட்சியினருடன் இணைவாரா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் வரும் திங்கள்கிழமை அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சிறப்பு கூட்டம்
இதனிடையே தனக்கு போதிய ஆதரவு உள்ளது என்றும் தான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மகதீர் அறிவித்துள்ளார். அவ்வாறு எனில் அவர் இப்ராஹிமுடன் மீண்டும் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மகதீரின் இந்த அறிவிப்பு குழப்பமாக இருப்பதால் வரும் திங்கள்கிழமை சிறப்பு கூட்டம் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவில்லை.