மலேசியாவில் அடுத்த திருப்பம்.. மகாதீருக்கு அதிர்ச்சி.. புதிய பிரதமர் ஆனார் முஹைதீன் யாசீன்!
மலேசியா: மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து மொஹமது மகாதீர் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது முஹைதீன் யாசீன் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். மலேசியாவில் அவரின் பதவி ஏற்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் மலேசியாவின் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமத் தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். மகாதீர் மொஹமத் மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து பகத்தான் ஹரப்பன் என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி அமைத்தார்.
இந்த கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் பதவியில் இருந்து விலகினார். அன்வரும், மகாதீர் மொஹமதும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.

என்ன ஆனது
அதன்படி கடந்த வாரம் மகாதீர் மொஹமத் கட்சியை சேர்ந்த சிலர், அங்கு இருக்கும் முன்னாள் ஆளும் கட்சி கூட்டணியின் ( ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UMNO)) உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தனர். அன்வர் கட்சியை சேர்ந்த சிலரும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தனர்.இந்த செய்தி நேற்று இணையம் முழுக்க வெளியானது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, அன்வர் இப்ராஹிம், மகாதீர் மொஹமத் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் எங்களுக்கு கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார் என்றார்.

பதவி விலகல்
ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் என்னிடம் பொறுப்பை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் மகாதீர் மொஹமத் அதை செய்யவில்லை, என்று அன்வர் புகார் அளித்தார். இதையடுத்து திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் பதவி விலகி இருக்கிறார். மகாதீர் மொஹமத் சத்தியத்தை மீறிவிட்டார் என்று அன்வர் புகார் கொடுத்த சில மணி நேரங்களில் மகாதீர் மொஹமத் பதவி விலகி இருக்கிறார். இதனால் மலேசியாவில் அன்வர் பிரதமர் ஆவாரா என்று கேள்விகள் எழுந்தது.

ஆனால் என்ன
இந்த நிலையில் அந்நாட்டு மன்னர் அப்துல்லா சார்பாக எம்பிக்கள் ஆலோசனை நடந்தது. அந்நாட்டில் இருக்கும் நாடாளுமன்ற எம்பிக்கள் எல்லோரையும் தனி தனியாக சந்தித்து மன்னர் ஆலோசனை செய்தார். இதையடுத்து புதிய திருப்பமாக அந்நாட்டில் முஹைதீன் யாசீன் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். மலேசியாவில் அவரின் பதவி ஏற்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாதீர் தரப்பை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னாள் அரசு
முஹைதீன் யாசீன் முன்னாள் அரசான பகத்தான் ஹரப்பன் கூட்டணியில் உள்துறை அமைச்சராக இருந்தார். ஆட்சியில் இருக்கும் போதே இவர், மகாதீருக்கு எதிராக குரல் கொடுத்தார். முன்னாள் எதிர்கட்சிகளான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UMNO), பிஏஎஸ், மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகிய கட்சிகள் முஹைதீன் யாசீனுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வருகிறது. முஹைதீன் யாசீன் மலேசியாவின் 8வது பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

துணை பிரதமர்
முன்னதாக நஜிப் ரஸ்ஸாக் ஆட்சியின் கீழ் முஹைதீன் யாசீன் துணை பிரதமராக இருந்தார். 2015ல் நஜிப் ரசாக் ஆட்சி கவிழ்த்ததை அடுத்து, முஹைதீன் யாசீன் மஹாதீருக்கு ஆதரவு அளித்தார். இதன் மூலம் பகத்தான் ஹரப்பன் கூட்டணி உருவாக்கப்பட்டு மகாதீர் ஆட்சி அமைத்தார். தற்போது அந்த கூட்டணி உடைந்துள்ளது. முஹைதீன் யாசீன் பிரதமர் ஆகியுள்ளார். இதனால் முஹைதீன் யாசீன் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று மகாதீர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
அதோடு எனக்கு பெரும்பான்மை உள்ளது. 140+ எம்பிக்கள் உள்ளனர் என்று மகாதீர் கூறியுள்ளார். மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் 222 எம்பிக்கள் உள்ளனர். முஹைதீன் யாசீன் இன்னும் பெரும்பான்மை நிரூபிக்கவில்லை. அதுவரை அவரின் உண்மையான பலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் முஹைதீன் யாசீன் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது.