For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருட்சமாக வளரும் கவிஞர் நா முத்துக்குமார் விதைத்த விதை… அமெரிக்க தமிழர் நெகிழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): கவிஞர் நா முத்துக்குமார் இட்ட கட்டளை என்னை உற்சாகத்துடன் பணியாற்ற வைத்தது என்று ஹார்வர்ட் தமிழ் இருக்கை டல்லாஸ் ஒருங்கிணைப்பாளர்
முருகானந்தன் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.

சமீபத்தில் டல்லாஸில் நடைபெற்ற ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான 5 லட்சம் டாலர்கள் நிதியளிப்பு நிகழ்ச்சியில், கவிஞர் நா முத்துக்குமார் இட்ட அன்புக் கட்டளையை நிறைவேற்றியதாக உணர்கிறேன் என்று முருகானந்தன் தெரிவித்தார்.

Na Muthukumar's last wish nears its fulfillment

இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு மேலும் விசாரித்த போது கவிஞர் நா முத்துக்குமாரின் ஆழ்ந்த தொலை நோக்கு பார்வை தெரிய வந்துள்ளது.

கணக்குப் போட்டுக் காட்டிய கவிஞர்

"சித்திரைத் திருவிழாவுக்காகவும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிதி திரட்டுவதற்காகவும்
நா.முத்துக்குமார் டல்லாஸுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு வாரங்கள் முடிந்து அவர் சென்னை திரும்பும் நாளும் வந்தது.

நண்பர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது, 'என்னைப் போன்றவர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ஆதரவாகப் பேச முடியும். ஆனால் உங்களைப் போன்றவர்கள்தான் அதைச் செயலாக்கிக் காட்ட முடியும்..

இன்னும் தேவையான 5 மில்லியன் டாலர்களை 5 ஆயிரம் தமிழர்களால் தர முடியாதா?
குடும்பத்திற்கு ஆயிரம் டாலர்கள் என்றால் இது சாத்தியம் தானே! அமெரிக்காவில் லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கும் நிலையில், ஆயிரம் டாலர்கள் தரக்கூடியவர்கள் 5 ஆயிரம் பேர் இருக்க மாட்டார்களா?

Na Muthukumar's last wish nears its fulfillment

அவர்களை அடையாளம் காண்பது வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். நண்பர்கள் உறவினர்கள் மூலமாக, உதவக் கூடியவர்களைக் கண்டு பிடியுங்கள். ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லுங்கள்.

குடும்பத்திற்கு 250 டாலர்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 20 ஆயிரம் குடும்பங்கள்
சேர்ந்தால் இலக்கை அடைய முடியும். நீங்கள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். நீங்களும் குறிப்பிடத் தக்கவகையில் நன்கொடை வழங்க வேண்டும். நானும் என் பங்கை தருகிறேன்.

உங்கள் அனைவரின் அன்பு என்னை இந்த மண்ணுக்கு உறவுக்காரனாக்கி விட்டது. மீண்டும் நான் வருவேன். அதற்குள் நல்ல முயற்சிகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்' என்று உரிமையுடன் உத்தரவிட்டார்.

கவிஞரின் எதிர்பாராத திடீர் மறைவு என்னையும் இங்குள்ள மற்ற நண்பர்களையும்
சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டது. அவர் இட்ட கட்டளை என் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.

இந் நிலையில் டல்லாஸில் நிதி திரட்டும் முயற்சி குறித்து புரவலர் பால் பாண்டியன் அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். நானும் அவர்களுடன் இணைந்து என்னால் இயன்ற பணிகளைச் செய்தேன். கவிஞர் சொன்னது போல் என் பங்களிப்பான தொகையையும் தந்தேன்.

கவிஞர் நா முத்துக்குமாரின் அன்புக்கட்டளையை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி ஏற்பட்டது," என்று ஒரே மூச்சில் முருகானந்தன் கூறி முடித்தார்.

Na Muthukumar's last wish nears its fulfillment

அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்து பணியாற்றிய இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கவிஞர் நா முத்துக்குமார் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சிறப்பு சேர்த்து இருக்கும். மீண்டும் வருவேன் என்று சொன்ன கவிஞர் நம்மிடம் இல்லையே என்று எண்ணிய போது கண்கள் பனித்து விட்டது என்றும் கலங்கினார்.

கவிஞரின் ஆசியுடன்..

நா முத்துக்குமார் டல்லாஸில் அவருடைய நண்பர் மகேஷ் வீட்டில் தங்கியிருந்தார். மகேஷின் மனைவி, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க உபதலைவர் முனைவர் சித்ராவும், முத்துக்குமாரின் நினைவுகளுடனும் கண்ணீருடனும் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

முத்துக்குமார் தங்கியிருந்த நாட்களில் இலக்கியம், கவிதை, திரைப்பாடல்கள் பற்றிய
உரையாடல்களை நினைவு கூர்ந்த சித்ரா, அவரை மென்மேலும் கவிதைகள் எழுதவும், அமெரிக்க வாழ்க்கை முறை பற்றிய இலக்கியம் படைக்கவும் அறிவுறுத்தினார் என்று கூறினார்.

சித்ரா கூறுகையில், "கவிஞர் நா முத்துக்குமார் இன்று நம்முடன் இருந்திருந்தால், டல்லாஸில் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக அவர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, உத்வேகத்துடன் அனைத்து அமைப்புகள் சார்பிலும் நடந்த நிதியளிப்பு விழாவில், நிச்சயம் கலந்து கொண்டு அதற்காக தனியாக பாடலே எழுதி இருப்பார்.

அந்த நினைவிலேயே இருந்த போது, குடும்ப நண்பர் சதீஷ், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நாம் ஒரு பாடல் உருவாக்கலாம் என்ற யோசனை தெரிவித்தார். இன்னொரு நண்பர் விஜயகுமாரும் இதில் இணைந்தார்.

கவிஞரின் அறிவுரையை மனதில் கொண்டு ஒரு முயற்சி செய்தோம். பாடல் பதிவு முடிந்து, டல்லாஸ் ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிதியளிப்பு நிகழ்ச்சியில் வெளியானதும், மனதில் பாரம் குறைந்தது போல் இருந்தது. கவிஞரின் ஆன்மாதான் இந்த முயற்சியை எங்களுடன் இருந்து வழி நடத்தி இருக்கும் என நம்புகிறேன்," என்றார் .

உடல் நிலை சரியில்லாத போதும், தமிழ் இருக்கைக்கான அழைப்பு இது என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அமெரிக்கா வந்தார் கவிஞர் நா முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சியும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காகவே அமைந்து விட்டது.

சமீபத்திய டல்லாஸ் நிதியளிப்பு நிகழ்ச்சி கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹார்வர்ட் தமிழ் இருக்கை விருப்பம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

-இர தினகர்

English summary
Poet Naa. Muthukumar’s friends in Dallas recollect his visit, for promoting Harvard Tamil Chair. They mentioned how passionate the late Poet was about the formation of the Tamil Chair. He has also laid out a plan of fund raising, for this noble cause.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X