சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. அதேபோல விண்வெளியில் என்ன வாசம் வீசுது தெரியுமா?
நியூயார்க்: விண்வெளியில் பொசுங்கிய உலோகத்தின் வாடை வீசுவதாக தான் உணர்வதாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார்.
பூமிக்கு மேலே மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து வருகிறார் நாசா விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி. அங்கிருந்தபடி அவர், பூமியின் தோற்றத்தை விதவிதமாக புகைப்படமாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில் 'ரெட்டிட் டாட் காம்' என்ற அமெரிக்க இணையதளம் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அப்போது அவரிடம், அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மட்டுமின்றி பலதரப்பட்ட சுவாரஸ்யமான கேள்விகளும் கேட்கப்பட்டன. அவற்றிற்கு ஸ்காட் அளித்த பதில்களாவது:-
|
கைகளைக் கட்டியபடி இருப்பது ஏன்?
புவியீர்ப்பு விசை குறைவாக உள்ள விண்வெளியில், கைகளை தொங்க போட முடியாது. கைகள் என் முன் மிதந்து கொண்டிருப்பது எனக்கு அசவுகரியமாக இருப்பதால் தான், நான் கைகளை கட்டிக்கொள்கிறேன். ஆனால், துாங்கும் போது எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை. காரணம் விண்வெளி நிலையத்தில், ஒரு பெரிய பைக்குள் புகுந்து கொண்டு நான் துாங்குவேன்.

என்னமாதிரியான கனவுகள் வரும்...
என் கனவுகள் சில சமயம் விண்வெளி தொடர்பாகவும், சில சமயம் பூமி தொடர்பானதாகவும் இருக்கும். ஆனால், அவை எல்லாமே வேடிக்கையானவை தான்.

மக்களின் கருத்து...
இதெல்லாம் ரொம்ப சுலபம் என்ற தோற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி விடுகிறோம் என்பதாலோ என்னவோ, மக்களும் விண்வெளி பயணத்தை மிகவும் சுலபமானதாக கருதுகின்றனர். எனவே, இது போன்ற விண்வெளி பயணங்களுக்குப் பின் உள்ள அபார உழைப்பும், சிரமங்களும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

சவாலான விஷயம்...
உதாரணமாக, அந்தரத்தில் மிதக்கும் ஒரு பெரிய ஆய்வகத்தில், 15 ஆண்டுகளாக மனிதர்கள் வசிப்பதையே எடுத்துக் கொள்ளுங்கள். இதை சாதிக்க, ஒரு பெரும் வல்லுனர் படையே கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறது.

விண்வெளியின் வாசம்...
விண்வெளி நிலையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வாசனைகள் வேறுபடும். சில பகுதிகளில், மருத்துவமனையின், 'ஆன்ட்டிசெப்டிக்' வாசம் அடிக்கும். சில இடங்களில் குப்பைக்கூள நாற்றம் அடிக்கும். ஆய்வகத்தின் கதவை திறந்து நான் விண்வெளியில் மிதக்கும் போது, பொசுங்கிய உலோக வாடை அடிப்பது போல உணர்கிறேன்.

பூமியில் பிடித்த பகுதி...
பஹாமாஸ் தீவுகள். கடலின் நீல நிறத்துக்கு நடுவே, பலவித வண்ணங்களுடன் அவை என் கண்களை கவர்கின்றன.

இண்டர்நெட் வசதி...
இப்போது நான் விண்வெளியிலிருந்த படி, பூமியிலிருக்கும் உங்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கிறேன். எனவே, இணைய வசதி நன்றாகவே இருக்கிறது. சில சமயம் இணைப்பு வேகமாக இருக்கும்; சில சமயம் மந்தமாக இருக்கும்.

நட்சத்திரங்கள்...
பூமியிலிருந்து இரவு, வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க முடிவது போல, இங்கிருந்து எங்களால் தெளிவாக பார்க்க முடிவதில்லை. எங்கள் நிலையம் மணிக்கு, 28 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறது. எங்களிடம் தொலைநோக்கி இல்லை. ஒரு சில நகரும் நட்சத்திரங்களை பார்த்திருக்கிறோம்.

எதிர்காலத் திட்டம்...
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு, ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன்' என இவ்வாறு அந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ஸ்காட் தெரிவித்துள்ளார்.