ஆட்சிக்கு எதிராக புரட்சி.. திடீரென ராணுவ தளபதி உடன் சந்திப்பு.. நேபாள பிரதமர் சர்மா பகீர்.. பின்னணி?
காத்மண்டு: நேபாளம் பிரதமர் சர்மா ஒளி அந்நாட்டு ராணுவ தளபதி உடன் திடீரென சந்திப்பு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் சர்மாவிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நேபாளத்தில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இந்தியா திட்டம் போடுகிறது என்று சர்மா கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக மேப் வெளியிட்டதால் இந்தியா எனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறது என்று அவர் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் பீகார் அருகே இருக்கும் லீபுலேக், கல்பாணி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்து நேபாளம் வரைபடம் வெளியிட்டது.
நேபாளத்தின் இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தது. அதேபோல் அந்த நாட்டை சேர்ந்த ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்களே பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த நிலையில்தான் அவரின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான கோஷங்கள் எழுந்துள்ளது .
முக்கியமாக அவரின் ஆளும் கட்சி உறுப்பினர்களே ஆட்சிக்கு எதிராக எழுந்துள்ளனர். முக்கியமாக கட்சியின் மூத்த தலைவர்கள் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா, மாதவ் குமார், ஜல்நாத் காணல் ஆகியோர் அரசுக்கு எதிராக குதித்துள்ளனர். கட்சி தலைவர், ஆட்சி தலைவர் இரண்டு பதவியிலும் சர்மா இருக்க கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பிரதமர் கேபி சர்மா கண்டிப்பாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நேற்று கட்சியின் அமைச்சர்களை பார்த்த சர்மா இன்று அந்நாட்டு ராணுவ தளபதி பூர்ணா சந்திரா தாப்பா உடன் திடீரென சந்திப்பு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவர் ராணுவ ஆட்சி அல்லது எமர்ஜென்சிக்கு திட்டமிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அவர் கட்சியை இரண்டாக பிரிக்க திட்டமிடுகிறார் என்றும் செய்திகள் வெளியானது. இன்னொரு பக்கம் அவர் பதவி விலக தயாராக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
முன்னதாக இந்தியாவின் இந்த சதியை முறியடிப்பேன் என்று பிரதமர் கேபி சர்மா குறிப்பிட்டு இருந்தார்