For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா? கொரிய பிராந்தியத்தில் பதற்றம்

By BBC News தமிழ்
|

வட கொரியாவில் ஒரு பெரிய நில நடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வட கொரியா தனது ஆறாவது அணு சோதனையை நடத்தியிருக்கலாம் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது.

வட கொரியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவித்த அமெரிக்க நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள், இதனால் ஒரு அணு சோதனை நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியிருக்கக்கூடும் என்ற நிலையில், அதன் அண்டை நாடுகள் இது குறித்து துரித நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை
Getty Images
ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை

வட கொரியாவின் மற்றொரு அணுஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வர்ணித்துள்ளார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனை பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உடனடியாக தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தென் கொரியா கூட்டியுள்ளது.

சீனாவின் பூகம்ப நிர்வாக அமைப்பு இந்த நிலநடுக்கத்தை சந்தேகிக்கப்படும் அணுஆயத வெடிப்பு என்று வர்ணித்துள்ளது.

புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள சில மணி நேரங்களில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டை கிம் ஜோங்-உன் சோதனை செய்வது போன்று வெளியான படம்
Reuters/KCNA
புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டை கிம் ஜோங்-உன் சோதனை செய்வது போன்று வெளியான படம்

முன்னதாக, மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த கூற்றுகளை தன்னிச்சையான முகமைகள் எதுவும் இதுவரை உறுதிசெய்யவில்லை.

அண்மைய மாதங்களில் பல் ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.

தொடர்பான செய்திகள்:

அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.

வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஜப்பானும், மற்ற பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு பதிலளித்த வட கொரியா, ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
As North Korea has conducted its sixth nuclear test, tension prevails in Korea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X