பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் எல்லாமே பொய்யா??.... சொல்லுங்க ஒபாமா சொல்லுங்க!
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொலை தொடர்பாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார் புலிட்சர் விருது பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் செய்மோர் ஹெர்ஷ். அதாவது பின்லேடனுடன் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், பாகிஸ்தானுக்குக் கூட தெரியாமல் அவரை கொன்று குவித்ததாகவும், பின்னர் அவரது உடலைத் தூக்கி கடலில் புதைத்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியது அத்தனையும் கப்சா என்று ஹெர்ஷ் போட்டு உடைத்துள்ளார்.
உண்மையில் பாகிஸ்தான் அரசின் உதவியுடன்தான் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளனர். மேலும், பாகிஸ்தான் அரசை முழுமையமாக சம்மதிக்க வைத்த பின்னரே, அவர்களது உதவியுடன்தான் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளனர். அப்போது துப்பாக்கிச் சண்டை எதுவும் நடக்கவும் இல்லை. மேலும் பின்லேடன் உடலை கடலிலும் போடவில்லை. மாறாக ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு போய் புதைத்து விட்டனர் அமெரிக்க வீரர்கள் என்றும் ஹெர்ஷன் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஹீரோ போல காட்டுவதற்காகவே இந்த பில்டப் மற்றும் பொய்த் தகவல்களை அமெரிக்கா வெளியிட்டதாகவும் ஹெர்ஷ் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக ஒபாமாவின் செல்வாக்கைக் கூட்டுவதற்காகவே இப்படி அமெரிக்கத் தரப்பு நடந்து கொண்டதாகவும் ஹெர்ஷ் கூறுகிறார்.
இதுகுறித்து ஹெர்ஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியிருப்பதாவது...

அபோதாபாத்தில் வைத்து
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில்தான் பின்லேடன் பல வருடங்களாக மறைந்து வாழ்ந்து வந்தார். அவரது இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் அரசில் சிலருக்கும், ஐஎஸ்ஐ உளவுத் துறையினருக்கும், ராணுவத்திற்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

பணத்திற்காக மாட்டி விட்ட ஐஎஸ்ஐ அதிகாரி
இந்த நிலையில் பின்லேடனின் தலைக்கு அமெரிக்கா வைத்திருந்த 25 மில்லியன் டாலர் பணத்திற்கு ஆசைப்பட்டு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரிதான், அமெரிக்காவுக்கு பின்லேடன் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் குதித்த ஒபாமா அரசு
அந்தத் தகவல் உண்மையானதுதான் என்பதை உறுதி செய்து கொண்ட ஒபாமா அரசு அவசரமாக திட்டம் தீட்டியது. பாகி்ஸ்தான் அரசை அணுகியது. பின்லேடன் குறித்து தங்களுக்குத் தெரிய வந்துள்ளதாக கூறி பாகிஸ்தான் அரசை அதிர வைத்தது. பின்னர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

போட்டுத் தள்ளப் போறோம்
பின்லேடனை சுட்டுக் கொல்ல முடிவு செய்துள்ளோம். அதை எங்களால் தனித்து செய்ய முடியாது. நீங்கள் உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு, ஐஎஸ்ஐ, ராணுவ உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க அரசு உதவி கோரியுள்ளது.

ஓகே சொன்ன பாகிஸ்தான்
நீண்ட நாள் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பாகிஸ்தான் தரப்பு அமெரிக்காவுக்கு உதவ முன்வந்தது. இதையடுத்து சம்பவத்தன்று பின்லேடன் வீடு உள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இருளோடு இருளாக வந்து
இதையடுத்து அமெரிக்க சீல் கடற்படை கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் அங்கு வந்தனர். அவர்கள் வந்ததும் அந்தப் பகுதியிலிருந்து விலகி விடுமாறு ஏற்கனவே, பின்லேடன் வீட்டுக்குக் காவலாக இருந்த ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவர்களும் அங்கிருந்து சென்றனர்.

உள்ளே புகுந்து கொன்ற சீல்
அதன் பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அமெரிக்கக் கடற்படை கமாண்டோக்கள் வீட்டுக்குள் இருந்த பின்லேடனை மிக நெருக்கத்தில் வைத்து சாவகாசமாக சுட்டுக் கொன்றனர்.

ஒரு துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை
அப்போது எதிர்த்து யாரும் துப்பாக்கியால் சுடவும் இல்லை. துப்பாக்கிச் சண்டையும் நடக்கவில்லையாம். அந்த இடத்தில் பாய்ந்த குண்டுகள் அனைத்துமே அமெரிக்கப் படையினரின் துப்பாக்கிக் குண்டுகள் மட்டுமே.

ஆப்கானிஸ்தானில் புதைப்பு
அதன் பின்னர் பின்லேடன் உடலுடன் கிளம்பிச் சென்ற அமெரிக்கப் படையினர் நேராக ஆப்கானிஸ்தான் போய்ச் சேர்ந்தனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து பின்லேடனை அடக்கம் செய்து விட்டு அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்று விட்டார்களாம்.

எல்லாம் பொய்
ஆனால் இதற்கு நேர் மாறாக அமெரிக்கத் தரப்பும், அதிபர் ஒபாமாவும் பல பொய்களை அடுக்கடுக்காக கூறி உலகையே ஏமாற்றியுள்ளனர். பின்லேடனைப் பிடிக்க ரகசியமாக சீல் படையினர் சென்றதாகவும், பாகிஸ்தானுக்கே தெரியாமல் வீடு புகுந்ததாகவும், கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பின்லேடனை வீழ்த்தியதாகவும், அவரது உடலை கடலில் புதைத்து விட்டதாகவும் கூறிய அனைத்துமே பொய்யாகும்.

ஒபாமாவுக்கு நல்ல பெயர் சேர்க்க
இத்தனை பொய்களையும், அதிபர் ஒபாமாவுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும், அவரது செல்வாக்கு உயர வேண்டும் என்பதற்காக சொல்லியுள்ளனர் என்று ஹெர்ஷ் கூறியுள்ளார்.
இந்த புதிய தகவல் குறித்து வெள்ளை மாளிகை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!