For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராகும் தகுதி இந்தியாவை விட தங்களுக்கே அதிகமாம்... சொல்கிறது பாக்.

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) உறுப்பினராகும் தகுதி இந்தியாவை விட தங்கள் நாட்டுக்கே அதிகமுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகள் கூட்டமைப்பில்(என்.எஸ்.ஜி) 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப் பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பரஸ்பரம் விநியோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக பல நாடுகளிடம் இந்தியா ஆதரவு திரட்டி வருகிறது.

அண்மையில் 5 நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிடம் என்.எஸ்.ஜியில் இடம் பெற இந்தியாவுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் ஆஸ்திரியா தலைநகர் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது.

சீனா எதிர்ப்பு

சீனா எதிர்ப்பு

அதில் இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்கா கடும் முயற்சி மேற்கொண்டது. அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி என்எஸ்ஜி உறுப்பு நாடுகளுக்கு இந்தியாவை ஆதரிக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா மறைமுகமாக அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பம் இடாத நாடுகளை என்எஸ்ஜியில் சேர்க்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.

குறுக்குசால் ஓட்டும் பாக்.

குறுக்குசால் ஓட்டும் பாக்.

இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் துருக்கியும் இந்தியாவை உறுப்பினராக்க எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவை என்.எஸ்.ஜி அமைப்பில் சேர்ப்பது குறித்து மீண்டும் வரும் 24-ந் தேதி சியோலில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதற்காக ரஷ்யா அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி ஆதரவு கோரினார். இதனிடையே இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் சேர்ப்பதை விட எங்களுக்கே அதிக தகுதி என குறுக்குசால் ஓட்டத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான்.

என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா உறுப்பினராவதைத் தடுக்கும் வகையில் சீனா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பாகிஸ்தானின் டான் நியூஸ் சேனலுக்கு பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தங்களுக்கே அதிக தகுதி

தங்களுக்கே அதிக தகுதி

என்எஸ்ஜியில் உறுப்பினராக விரும்பும் நாடுகளுக்கு அந்த அமைப்பு சில விதிகளை நிர்ணயித்தால் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே உறுப்பினராக அதிக தகுதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில் என்எஸ்ஜியில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சீனா ஆதரவு

சீனா ஆதரவு

என்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு இந்தியா விண்ணப்பித்த பிறகு நாங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி, இந்தியா விண்ணப்பித்ததும் நாங்களும் விண்ணப்பம் அளித்துள்ளோம். என்எஸ்ஜியில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கு சீனா ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ரஷியா, நியூஸிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் இதுகுறித்து நான் பேசினேன். அந்த நாடுகள், தகுதியின் அடிப்படையில் எங்களை ஆதரிக்கும் என்று நம்புகிறோம். என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராகும்பட்சத்தில் பாகிஸ்தானும் அதில் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியாவுக்கு தகுதி இல்லை

இந்தியாவுக்கு தகுதி இல்லை

இந்தியா கடந்த 1974ஆம் ஆண்டில் அணுகுண்டு சோதனை நடத்தியது. அதாவது அமைதி நோக்கத்துக்காக அளிக்கப்பட்ட அணு மூலப் பொருட்களை இந்தியா தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தியது. இந்தியாவில் இருந்து அணுப்பிளவுப் பொருள் திருடப்பட்டதைப் தொடர்ந்துதான் என்எஸ்ஜி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இதுபோல் எந்தச் சம்பவமும் பாகிஸ்தானில் நடக்கவில்லை.

அமெரிக்கா மீது புகார்

அமெரிக்கா மீது புகார்

இந்தியாவை பெரும் சக்தியாக உருவாக்கும் கொள்கையை அமெரிக்கா கடைபிடித்து வருகிறது. அவர்களது ஒட்டுமொத்த நோக்கமும், இஸ்லாமிய உலகத்தையும், சீனாவையும் கட்டுப்படுத்துவதில்தான் உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அமெரிக்கா ஒரு தனி இறையாண்மை கொண்ட நாடாகும். அந்நாட்டுக்கு எந்த நாட்டுடனும் உறவைப் பேண உரிமை இருக்கிறது. அதேசமயத்தில் தெற்காசியக் கண்டத்தில் சமநிலையில்லாத உறவை அமெரிக்கா கடைபிடித்தால் அது இங்கிருக்கும் நாடுகளுக்குதான் பிரச்னையை அதிகரிக்கும்.

இவ்வாறு சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.

English summary
Pakistan claimed that its credentials for NSG membership are “stronger than India” if the elite club agrees on a uniform criteria for non-NPT states to join the group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X