For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற கெடு விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை விட்டு இஸ்ரேல் 2 ஆண்டுகாலத்தில் வெளியேற கெடு விதிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நேற்று தாக்கல் செய்துள்ளது. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு குறித்து விரைவில் தெரியவரும்.

பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை தற்போது பார்வையாளர் அந்தஸ்து மட்டும் வழங்கியுள்ளது. இதனால் பாலஸ்தீனத்தின் சார்பில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜோர்டான் நாடு, ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலியத் துருப்புகளை 2 ஆண்டுகளுக்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.

Palestinian U.N. draft calls for Israel occupation end by 2017

அதாவது 2017ஆம் ஆண்டுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்கிறது ஜோர்டானின் தீர்மானம். மேலும் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதிப் பேச்சுகளை நடத்தவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

இந்தத் தீர்மானமானது அரபு நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான தொடர்ச்சியான ஆலோசனைகளுக்குப் பின்னரே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 24 மணிநேரத்துக்கு பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும் அல்லது ஒத்தியும் வைக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இப்படி தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கே வராமலே பல கிடப்பிலும் கிடக்கின்றன.

இதனால் இன்று அல்லது நாளை வாக்கெடுப்பு குறித்த உறுதியான தகவல் வெளியாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை நிரந்தர உறுப்பினர் நாடுகள். எஞ்சிய உறுப்பினர் அல்லாத 10 நாடுகளும் சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை. அதே நேரத்தில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் தங்களுக்குரிய "வீட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுக்கவும் முடியும்.

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் நாடாக உள்ளது. அதனால் அமெரிக்கா இத் தீர்மானத்தை தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என்று ஏற்கெனவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். ஆனால் இத்தீர்மானம் தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை அமெரிக்கா வெளிப்படுத்தவில்லை.

அதே நேரத்தில் தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்த ஜோர்தானின் ஐ.நா.வுக்கான தூதர் தினா கவார், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தீவிர பேச்சுவார்த்தையை அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடத்தி வருகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இஸ்ரேல் தமது ஆக்கிரமிப்பை கைவிடும் நிலையில் பாலஸ்தீனம் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட முழுமையான தனிநாடாக உருவாகும். ஐ.நா. சபையில் பார்வையாளர் அந்தஸ்து என்ற தற்போதைய நிலையைத் தாண்டி முழுமையான உறுப்பினர் என்ற தகுதியைப் பெறும்.

முன்னதாக ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் பாலஸ்தீனத்தில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்திலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் இம்மாநாட்டை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Jordan formally submitted to the United Nations Security Council on Wednesday a draft resolution calling for peace between Israel and the Palestinians within one year and an end to Israel's occupation of Palestinian territories by the end of 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X