For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் ஹைட்ரோ கார்பனை படு பிஸியாக வியாபாரம் பண்ணும் மத்திய அமைச்சர்!

By Shankar
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்(யு.எஸ்): தமிழகமே ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரோ அமெரிக்காவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதலீட்டார்களை கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.

ஹூஸ்டன் நகரில் பெட்ரோலியத் துறை முதலீட்டாளர்கள், அரசாங்க பிரதிநிதிகள், பெட்ரோலிய நிறுவனங்களுக்காக ஆண்டு தோறும் நடைபெறும் CERAWeek மாநாட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.

Petroleum Minister Dharmendra Pradhan's hydro carbon campaign in Houston

இந்தியாவில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் முதலீடு செய்ய வருமாறு அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலுக்கு புதியவர்களுக்கும் அனுமதி..

மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பிரதான், இந்தியாவின் எரிவாயு, பெட்ரோலியத் துறையின் புதிய கொள்கைகளை விவரித்தார். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என பிரதமரின் திட்டங்களையும் சொல்லத் தவறவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்றி ஒற்றைச் சாளர அனுமதிக்கு வழி வகை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

உள் நாட்டு உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் புதிய முதலீட்டார்களையும் நிறுவனங்களையும் இந்தியா வரவேற்பதாகவும் கூறினார்.

பெட்ரோலியப் பொருட்களை உபயோகிப்பதில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, உற்பத்தியையை பெருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

சிறிய அளவில் உற்பத்தி செய்யத் தகுந்த பல இடங்களை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றில் பல தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்( தமிழகத்தின் நெடுவாசலும் இதில் அடங்கும்).

பல நிறுவனங்கள் எரிவாயு / பெட்ரோலியத் துறை தொழிலுக்கு புதியவர்கள் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார். இது வரையிலும் 34 திட்டங்களுக்கு 134 ஏலமுறையிலான விண்ணப்பங்களை 47 நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும் கூறினார்.

அவற்றில் 31 திட்டங்களை செயல்படுத்த 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், முக்கியமாக 15 நிறுவனங்கள் பெட்ரோலியத்துறைக்கு முற்றிலும் புதியவை என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எரிவாயு/பெட்ரோலியத் துறையில் முன் அனுபவம் இல்லாத 15 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றால் அவர்கள் செயல்படுத்தப் போகும் திட்டத்தின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுகிறது அல்லவா!

Petroleum Minister Dharmendra Pradhan's hydro carbon campaign in Houston

அமெரிக்காவில் அமைச்சர் கொடுத்த இந்த வாக்குமூலமே, நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலுவான காரணமாகி விடுகிறதே. மேலும், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தொலைத்தொடர்பு துறையில் அனுபவமில்லாதவர்களுக்கு அனுமதி கொடுத்தார் என்று பாஜகவினர் குற்றம் சாட்டினார்கள் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.

பணம்தான் முக்கியமா...

ஏல முறையில் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை.. எல்லா வகையான
எரிபொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஷேல் முறையில் எடுக்கப்படும் எரிவாயும் அடங்கும். நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என ஏகப்பட்ட சலுகைகளை, அமெரிக்காவில் அமைச்சர் அள்ளி வழங்கியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மட்டுமே அரசு கவனம் செலுத்துமாம்.

இந்தியாவில் எரிசக்தித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஏலமுறையில் அதிக பணம் கொடுத்து முதலீடு செய்ய வாருங்கள் என்பதுதான் அமைச்சருடைய பேச்சின் முக்கிய அம்சமாகும்.

மாநாட்டிற்கு வந்திருந்த சௌதி அரேபியா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோலியத் துறை அமைச்சர்களையும், டெக்சாஸ் கவர்னரையும் தர்மேந்திர பிரதான் சந்தித்துள்ளார். இலங்கை அமைச்சரையும் விட்டு வைக்கவில்லை.

தமிழக மீனவர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய வெளியுறவுத் துறை வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அமைச்சருடன் கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது என்று பிரதான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

CERAWeek மாநாடு தவிர வேறு சில முதலீட்டாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் முதலீடு செய்ய மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக பாஜக வினர் மக்கள் விருப்பப்பட்டால் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், அதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய அவர்கள் கட்சியின் மத்திய அமைச்சரோ, அமெரிக்காவில் படு பிஸியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அந்நிய முதலீட்டை கொண்டுவர கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

- இர தினகர்

English summary
Indian Petroleum Minister Dharmendra Pradhan is camping in Houston meeting various Petroleum Industry leaders, investors, ministers and corporate leaders. He addressed in CERAWeek annual conference and briefed about India’s new policies on Hydro Carbon and welcomed investors to invest in India. He also mentioned recently there are many new players in this Industry in India and more opportunities available for investors. He also mentioned there will be minimal government interventions in the operations of the organizations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X