For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2045 திருவள்ளுவர் ஆண்டு: உலகத் தமிழர்களின் ஒருமைப்பாட்டை புலப்படுத்தும் ஆண்டாக மலரட்டும்

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: திருவள்ளுவர் ஆண்டு 2045 தொடக்கமான தமிழர் திருநாளன்று, இவ்வுலகில் தமிழர்களும், உலக மக்கள் அனைவரும் நீதி, அமைதி மற்றும் சுதந்திரம் நிறைந்த வாழ்கையை சுபிட்சமுடன் வாழ, உலகெங்கும் வாழும் தமிழர்களான நாம் ஒன்றிணைந்து உறுதி கொள்வோம் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பா. ராமசாமி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப. ராமசாமி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2013ம் ஆண்டு நவம்பரம் மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 12 நாடுகளை சேர்ந்த 61 பேராளர்கள் மற்றும் மொரிஷியஸைச் சேர்ந்த 100 பேராளர்களும், மொரிஷியஸ் நாட்டில் நடந்த அனைத்துலக புலம்பெயர் தமிழர் ஒருமைப்பாட்டு மாநாட்டில் சந்தித்தனர். அம்மாநாட்டின் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி தமிழர்கள் தென்னிந்தியாவைம், இலங்கையையும் பூர்விகமாகக் கொண்டு தங்களுக்கென்று மொழி, கலாச்சார மற்றும் அடையாளங்களைக் கொண்டவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ்மொழி, உலகின் 6 செம்மொழிகளில் ஒன்றாகும். உலகமெங்கும், 70 நாடுகளின் பரந்துக் கிடக்கும் 100 மில்லியன் பேர் தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறாரர்கள். தமிழர்கள் பல நாடுகளிலும் அந்த நாட்டின் குடிமக்களோடு ஒற்றுமையாக வாழ்வதோடு, அந்நாடுகளின் உருவாக்கம், மேம்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பங்காற்றியுள்ளனர்.

தமிழர்களின் பங்கை சில நாடுகள் அங்கீகரித்துள்ள வேளையில், ஒரு சில நாடுகள் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளையும் மறுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை ஒடுக்குமுறைக்கும் உட்படுத்துகின்றது. இலங்கையில் இரு நூற்றாண்டுகளாக தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிநத 5 இலட்சம் தமிழர்கள் அந்நாடு சுதந்திரம் அடைந்த 1948ம் ஆண்டே தங்களின் மூதாதையர்களின் சொந்த நாடான இந்தியாவிற்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் மீதமுள்ளோர், இன்றும் மத்திய இலங்கையில் குடிசைகளிலும், புறம்போக்கு குடியிருப்புகளிலும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இச்சவால்மிக்கக் காலகட்டத்தில், தமிழகம், இலங்கை மற்றும் உலகமெல்லாம் பரந்துள்ள 100 மில்லியன் தமிழர்கள், தங்களது உரிமை, கவுரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை தற்காக்க, மத, பிராந்திய வேறுபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ், ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் மதசார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருங்கிணைய வேண்டும். அதன்வழி மட்டுமே, இவ்வுலகத்தில் தமிழர்களான நமது இருப்பை உறுதி செய்து, நமது உரிமைகளை தற்காக்கவும், ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவும் முடியும். இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழ்த்தேசிய குடிமக்களுக்கெதிராக, 1948ஆம் முதற்கொண்டு அரச பயங்கரவாத சக்திகள் இன அழிப்பையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அத்தமிழ்த்தேசிய குடிமக்கள், தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உயிர்கள், பணம், சொத்துகள் ஆகியவற்றை விலையாக கொடுத்துள்ளனர். போரின் இறுதியில், இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 90,000 பேர் கணவனை இழந்து தனிமரமாகியுள்ளனர்; 30,000 உடலுறுப்புகளை இழந்து ஊனமாகியுள்ளனர், பல இலட்சம் பேர் ஆதரவற்ற அனாதைகள் ஆகியுள்ளனர். இன்னும் 146679 பேர் காணாமல் போயுள்ளவர்களாகவே உள்ளனர்.

2009இல் இலங்கையில் தசாப்தங்களைத் தாண்டி நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பொழுதிலும், அம்முடிவானது தமிழர்களுக்கு மிக ஆபத்தான் ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டுள்ளது. தமிழர்களின் தாயக மண்ணில் சுமார் 300,000 சிங்கள இராணுவ வீரர்கள் மையம் கொண்டுள்ளது, அங்குள்ள தமிழர்களுக்கு, குறிப்பாக தமிழ்ப்பெண்களுக்கு மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நில அபகரிப்புகள், தெற்கிலங்கையிலிருந்து சிங்களர்களைக் கொண்டுவந்து தமிழர் தாயகத்தை சிங்களமயப்படுத்துதல், ஆகியவை தமிழர்களுக்கெதிராக இன்றும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளாகும்.

அண்மையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் மக்கள், தங்களின் ஜனநாயக உரிமையின்படி, தங்களுக்கு எந்த சிங்கள ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கையில்லை என்பதை தங்களின் வாக்குச்சீட்டுகளின் வழி தெளிவாகக் கூறியுள்ளனர்

இலங்கையில் வாழும் தங்களின் தமிழ்ச் சகோதரர்களின் துன்பங்களை அனைத்துலக சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு உலகத் தமிழர்களுக்கு உள்ளது. இலங்கையில் நடந்துவரும் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகள், அங்கு தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைத் தவிர வேறொரு தேர்வு நமக்கில்லை.

நாளை 14 ஜனவரி 2014 அன்று மலரவிருக்கும் 2045 திருவள்ளுவர் ஆண்டில், உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களான நாம், தமிழ் மக்களின் துன்பங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு உன்னிப்பாக கொண்டுசெல்ல வேண்டிய கடமையை உறுதியாக எடுத்துக்கொள்வோம். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது அறிக்கையில் "ஐநா சபை, இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு காரணம், ஐநா சபையின் உறுப்புநாடுகளின் ஆதரவின்மையை காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார். அதனாலேயே மிகப்பெரிய பேரவலம் ஏற்பட்டுள்ளது." பான் கீ மூன் கூறியுள்ளதைப் போல, இச்சம்பவம், ஐநாவிற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஆகவே, அனைத்துலக சமூகத்திற்கு நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் :-

ரோமை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக அமைப்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின், கடந்த 7 டிசம்பர் தொடங்கி 10 டிசம்பர் வரையிலான அமர்வில், 11 நீதிமான்கள், இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பு குற்றம் புரிந்துள்ளதோடு, அந்த குற்றத்தை இன்று வரையும் தொடர்ந்து வருகின்றது. ஆகவே :

1. இலங்கை அரசு புரிந்துள்ள இன அழிப்பு, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்க சுயேட்சையான அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைத்தல்;

2. தமிழர்களின் தாயகமான, இலங்கைத்தீவின் வட-கிழக்கு பகுதியில் இடைக்கால அரசு அமைப்பதின் வழி தற்பொழுது நடைபெற்று வரும் இனவழிப்பு நடவடிக்கைகளை தடுத்த நிறுத்த முடியும்;

3. இனங்களுக்கிடையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அமைத்ததைப் போன்ற உண்மை மற்றும் சமாதான ஆணையம் ஒன்றை இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது; ஏனெனில் இலங்கையின் சூழ்நிலையும், தென்னாப்பிரிக்காவின் சூழ்நிலையும் வெவ்வேறு வகையானவை. அதிலும், இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம், இலங்கையின் அரசியலில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆகவே, மேலுமொரு ஆணையம், தன்னை சூழ்ந்திருக்கும் அனைத்துலக அழுத்தத்திலிருந்துக் காப்பாற்றிக்கொள்ள இலங்கை அரசின் சூழ்ச்சி என்பதால், தமிழர்கள் அவ்வாறான ஆணைய அமைப்பை முழுதாக எதிர்க்கின்றோம்;

4. தமிழர் தாயகமான தமிழீழத்திலும், புலம்பெயர் தமிழர்களிடமும் ஒரு சுயேட்சையான வாக்கெடுப்பை நடத்தி, தமிழ்மக்கள் தங்களின் சுயாட்சியையும், தங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்துதல்.

திருவள்ளுவர் ஆண்டு 2045 தொடக்கமான, தமிழர் திருநாளன்று, இவ்வுலகில் தமிழர்களும், உலக மக்கள் அனைவரும் நீதி, அமைதி மற்றும் சுதந்திரம் நிறைந்த வாழ்கையை சுபிட்சமுடன் வாழ, உலகெங்கும் வாழும் தமிழர்களான நாம் ஒன்றிணைந்து உறுதி கொள்வோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Penang deputy CM Dr. Ramasamy has wished the world tamils ahead of Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X