For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிபர் டான்!

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

பிரசிடென்ட் டொனால்ட் ட்ரம்ப்.

பிரதமர் விஜய் மல்லயா என்று சொல்லும்போது என்ன ஃபீலிங் வருமோ அது வருகிறது. நம்மாளாவது ராஜ்யசபா எம்.பி பதவியை வாங்கி அனுபவித்திருக்கிறார். ட்ரம்ப் வெறும் பிசினஸ்மேன். வெற்றிகரமான பி.மே என்று வைத்துக் கொள்ளலாம்.

'President' Trump

அந்த ஆள் அதிபராக வர மாட்டார்; ஹில்லரி கிளின்டன்தான் ஜெயிப்பார் என்று மொத்த அமெரிக்க மீடியாவும் சொன்னது. ட்ரம்பை தோற்கடிக்க பிரசாரமும் செய்தது. அவரும் மீடியாவுக்கு தீனி போடுவதில் சளைக்காதவர். தினம் ஒரு புகார் அவர் மீது. பழசையெல்லாம் கிண்டி கிளறி நாறடித்தன ஊடகங்கள். ஹில்லரி வர வேண்டும் என்பதைவிட ட்ரம்ப் வந்துவிட கூடாது என்ற பதட்டத்தை ஊடகர்களிடம் காண முடிந்தது.

ஒபாமாவுக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. அவரும் மிஷெலும் ஹிலரிக்காக மெனக்கிட்டு பிரசாரம் செய்தார்கள். பலன் இல்லை. ஹில்லரி அழகாக மேடையேறி தெளிவாக பேசினாலும் அவர் தலைக்கு மேலே ஒரு போலி வட்டம் தெரிந்தது.

ஒபாமாவை நம்பிய அதே மக்கள் ஹில்லரியை நம்ப இயலாமல் தரையை பார்த்தார்கள். அமைச்சராக இருந்து கொண்டு அரசு செர்வரை தவிர்த்து தனி இமெயில் சேவையை ஏன் பயன்படுத்தினார் என்ற அவர்களின் கேள்விக்கு ஹில்லரியோ அவரது பாஸ் ஒபாமாவோ திருப்தியான பதில் தர முடியவில்லை.

ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தைகள் பல பொறுக்கித்தனமாக இருந்தன. ஒரு அரசியல்வாதி அவ்வளவு மோசமாக பேசி யாரும் கேட்டது இல்லை. ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் 'போலித்தனம் இல்லாமல் மனசில் உள்ளதை ஓப்பனாக பேசுகிறார். சூதுவாது தெரியாதவர்' என்ற ஒளிவட்டத்தை ட்ரம்புக்கு பெற்றுத் தந்தது. முஸ்லிம்கள் நுழைய விட மாட்டேன்; மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவேன்; இந்தியர்களுக்கு வேலைகளை தாரை வார்க்கும் அமெரிக்க கம்பெனிகளை அழ வைப்பேன்; ரஷ்யாவோ பாகிஸ்தானோ சீனாவோ யாராக இருந்தாலும் சரி, அமெரிக்காவை மிரட்டும் வகையில் நடந்தால் எலும்பை முறிப்பேன்; இந்த நாட்டில் குடிமகன் ஆன பிறகும் இங்குள்ள கலாசாரத்துடன் ஒன்றிவாழ முடியாதவர்களை திருப்பி அனுப்புவேன்... என்றெல்லாம் பேசியது சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஊடகர்களுக்கும் கிலி ஏற்படுத்தியதே தவிர, சராசரி அமெரிக்கர்கள் கைதட்டி விசில் அடித்தார்கள்.

அவர்கள் எல்லாரும் ஒபாமாவுக்காக இரு முறை ஓட்டு போட்டவர்கள். மாற்றம் உருவாக்குவோம் என்ற ஒபாமாவின் கோஷத்தை நம்பியவர்கள். ஒபாமா அரசு பெரிய தப்பு எதுவும் செய்துவிடவில்லை. ஆனால் பெரிதாக நல்லதும் செய்யவில்லை என்பது அவர்களின் மதிப்பீடு. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை.

சொல்லப் போனால் முதலாவது கருப்பின அதிபரான ஒபாமா ஆட்சியில்தான் அதிகமான கருப்பர்கள் போலீஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள். அல்லது வெள்ளையர்களால் தாக்கப்பட்டார்கள். எனவே இந்த முறை அவர்கள் ஜனநாயக கட்சிக்கு ஓட்டு போடவில்லை. பலரும் பூத்துக்கே போகவில்லை.

நாட்டின் தலைவன் அல்லது தலைவி நல்லவராக இருப்பதைவிட வல்லவராக இருப்பது அவசியம் என்ற எண்ணம் படிப்படியாக பரவுகிறது. ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும் சிறு ஐரோப்பிய நாடுகளிலும் சமீபத்தில் கிழக்காசியாவின் இந்தொனேசியாவிலும் தேர்தல் முடிவுகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. செயல்படும் தலைவன்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு. இதுதான் மோடியை இந்தியாவின் பிரதமராக அமர வைத்தது.
'ஏதாவது தப்பு நடந்து விடுமோ, யாரையாவது காயப்படுத்தி விடுமோ, ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டுமா என்ற பயங்களால் தற்போதைய நிலைமையே தொடரட்டும் என்று அமைதியாக இருந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு இனி அதிகாரம் கிடையாது, அவர்கள் நல்லவர்களாக இருந்தால்கூட' என்று மக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்ட மாதிரி தெரிகிறது. அதற்காக அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் கையில் அணுகுண்டு பெட்டிச் சாவியை கொடுக்கவும் அமெரிக்கர்கள் துணிந்து விட்டார்கள்.

ட்ரம்ப் அதிபரானால் உலக அழிவு நிச்யம் என்று ஆரூடம் சொன்னார்கள். ஆர்ம்பத்தில் எனக்கும் கொஞ்சம் பயம்தான். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் சொல்வதை எல்லாம் பதவிக்கு வந்தபின் அப்படியே செயல்படுத்திய அரசியல்வதி உலக வரலாற்றில் எவரும் கிடையாது. ஆதரித்ததை கைவிடுவது, எதிர்த்ததை ஏற்றுக்கொள்வது என்று பரவலாக சமரசம் செய்து கொண்டுதான் அவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். மோடி விஷயத்திலேயே ஆதார் தொடங்கி பல எ.கா அடுக்க முடியும்தானே.

எட்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆளும் கட்சியை மாற்றுவோம் என்று அமெரிக்க வாக்காளர்கள் முடிவு செய்திருப்பதாக சிம்பிளாகவும் இந்த தேர்தல் ரிசல்ட்டுக்கு அர்த்தம் சொல்லலாம். ஆக, அதிலும் அவர்கள் விரும்புவது மாற்றம்தான். அது ஒன்றுதானே மாறாதிருப்பது.

குட் லக் ட்ரம்ப்.

குட் லக் அமெரிக்கா!

English summary
Veteran Journalist Kathir's write up on US president elect Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X