அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் மக்கள்.. என்ன நடக்கிறது ரஷ்யாவில்?
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இன்னும் 16 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிராக மாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள், பங்கேற்றுள்ளனர். அவர்களில் பலர் 'NO' என்ற வார்த்தை கொண்ட முகக் கவசங்களை அணிந்திருந்தனர். புடின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டக்காரர்கள், நகரின் முக்கிய தெருக்களில் அணிவகுத்துச் செல்லத் தொடங்கியதும், போலீசார் அவர்களை கைது செய்து வேன்களில் ஏற்றிநர்.

கைது நடவடிக்கை
உரிமைகள் கண்காணிப்புக் குழு (OVD)தகவல் படி, நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து காவல்துறை அல்லது அரசிடமிருந்து உடனடியாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யாவில் வாக்கெடுப்பு
இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவில் அரசியலமைப்பை திருத்த ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவுப்படி மேலும் இரண்டு அதிபர் தேர்தலை தவிர்த்து, விளாடிமிர் புடினே அதிபராக தொடர அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இதன்படி, 2036ம் ஆண்டு வரை, ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் தொடருவார்.

சட்ட விரோதமானது
ஆனால் இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், 20 வருடங்களுக்கும் மேலாக ரஷ்யாவை அதிபர் அல்லது பிரதமராக ஆட்சி செய்த புடின், இப்போதாவது, பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இந்த நிலையில்தான், மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

தீவிர போராட்டம்
"நான் ஒரு தேசியவாதி என்பதால் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட நான் இங்கு வந்தேன்" என்று 40 வயதான கருப்பு சட்டை அணிந்திருந்த ஒரு எதிர்ப்பாளர் தெரிவித்தார். இதேபோல பலரும் புடினுக்கு எதிராக கடும் வார்த்தைகளால் கோஷம் எழுப்பினர். புடினுக்கு எதிராக மக்கள் திரளாக போராட தொடங்கியுள்ளது ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.