உக்ரைன் போரால்.. புதினின் 38 வயது காதலிக்கு வந்த சோதனை.. நெருக்கடியில் சுவிஸ்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் காதலி குடும்பத்தினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 4வது வாரமாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது. இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்றவில்லை.
ரஷ்ய படைகளை ஒப்பிடும்போது உக்ரைன் ராணுவம் சிறியது. இருப்பினும் உக்ரைன் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.
உக்ரைன் போர்: ரஷ்யாவை எதிர்க்க இந்தியா நடுங்குகிறது.. பிடன் விமர்சனம்

பொதுமக்கள் வெளியேற்றம்
இதற்கிடையே இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் உக்ரைனில் போர் மேகங்கள் இன்னும் கலையவில்லை. இதற்கிடையே பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஆண்கள் ரஷ்யாவை எதிர்த்து போர் புரிகின்றனர். இதனால் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் தான் அதிகம்.

புதினின் காதலி
இந்நிலையில் தான் ரஷ்யாவின் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (வயது 38), என்பவர் ஸ்வீட்சர்லாந்தில் தங்கியுள்ள விஷயம் வெளியாகி உள்ளது. இவர் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் காதலி என கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இருவரும் இதுவரை பகிரங்கமாக எதையும் கூறவில்லை. இருப்பினும் பல்வேறு பத்திரிகைகளில் இவர்கள் இருவரும் காதலர்களாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் குழந்தைகளுடன் ஸ்வீட்சர்லாந்தில் ஆடம்பர பங்களாவில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளியேற்ற கோரிக்கை
இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஸ்வீட்சர்லாந்தில் இருந்து அலினா கபேவாவை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக Change.org மூலம் இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள மனுக்களுக்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திரும்ப அனுப்புவதே சரி
இந்த போர் நெருக்கடியில் அலினா கபேவா, விளாடிமிர் புதினுடன் இணைந்திருக்க வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாகி நிலையில் புதின் அரசின் முக்கிய நபர்களை சுவிஸ் நிர்வாகம் உபசரிப்பது சரியான செயல் அல்ல. சுவிட்சர்லாந்து எப்போதும் ஒரு நடுநிலை நாடு, அதனால் அலினா கபேவாவை ரஷ்யாவுக்கு திரும்ப அனுப்புவது தான் சரியாக இருக்கும். தற்போது பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் குடிமக்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு சுவிஸ் அதிகாரிகளிடம் முறையிடுகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் தென்படவில்லை
உக்ரைனில் போர் நடக்கும் சூழலில் தான் பாதுகாப்பு காரணங்களுக்கா அலினா கபேவா குழந்தைகளுடன் சுவீட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் தான் இந்த கோரிக்கையும் எழுந்துள்ளது. அலினா கபேவா கடைசியாக 2021 டிசம்பரில் மாஸ்கோவில் நடந்த டிவைன் கிரேஸ் ரித்மிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது கேமராக்களின் கண்களால் படம்பிடிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் பொதுவெளியில் தென்படவில்லை.

யார் இவர்
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் காதலியாக கூறப்படும் அலினா கபேவா. இவர் 2004 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மொத்தம் 2 பதக்கம் வென்ற இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார். புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சியில் 2007 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார். கிரெம்ளின் சார்பு ஊடக குழுவான தேசிய மீடியா குழு இயக்குனர்களின் தலைவராகவும் 7 ஆண்டுகளாக செயல்பட்டார். அப்போது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு அவருக்கு சம்பளம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விவாகரத்துக்கு காரணம்
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 69, தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார். இவர் விமான பணிப்பெண்ணாக இருந்த நிலையில் 1983ல் விளாடிமிர் புதின் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு மரியா, கத்ரீனா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் லியுத்மிலா உடனான 31 ஆண்டுகால வாழ்க்கை 2014ல் முடிவுக்கு வந்தது. இந்த விவாகரத்துக்கும் அலினா கபேவா தான் காரணம் என கூறப்பட்டது. இருப்பினும் தற்போது வரை விலாடிமிர் புதின், அலினா கபேவா இருவரும் தங்களுக்கு இடையே எந்த வகை உறவு உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.