For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிய ஸ்காட்லாந்தும்... மண் மணக்கும் விவசாயமும்.. சொக்க வைக்கும் கிராமிய வாழ்வும்!

Google Oneindia Tamil News

- வெங்கட் நாகராஜன்

ஸ்காட்லாந்தில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் செல்லும் கோட்டை, அரண்மனை போன்ற இடங்களை பார்த்துவிட்டு கிளாஸ்கோ (GLASGOW) நகருக்குத் திரும்பினோம். அடுத்த நாள் ஒரு வித்தியாசமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றெண்ணி, அங்குள்ள விவசாயத்தைப் பற்றி தேடினேன். அப்பொழுது கிடைத்தது தான் ஸ்காட்லாந்தின் கிராமப்புற வாழ்க்கை (RURAL LIFE OF SCOTLAND).

இது GLASGOW நகருக்குத் தெற்கே சுமார் 20 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. பேருந்தில் ஏறி குடும்பத்துடன் புறப்பட்டோம். தவறான பேருந்து என்பதால், அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து ஒரு வழியாக சுமார் 11:00 மணியளவில் பண்ணையை வந்தடைந்தோம்.

100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில் அருங்காட்சியம், தோட்டம், கோழி, ஆடு, மாடு, பன்றி, குதிரை மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளது. அதைத் தவிர சுமார் 400 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த அந்த குடும்பத்தின் பழங்கால வீடு ஒன்றும் உள்ளது.

சில நூற்றாண்டு வாழ்க்கை

சில நூற்றாண்டு வாழ்க்கை

முதலில் அருங்காட்சியத்தில் இருந்து ஆரம்பித்தோம். சில நூற்றாண்டுகளாக (அதாவது சுமார் 14 ஆம் நூற்றாண்டு முதல்) வாழ்ந்த கிராம மக்களின் வாழ்க்கை, விவசாயம், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்து அற்புதமாக நிறுத்தியது அந்த அருங்காட்சியம். முன்னாள் உழவன் என்ற முறையில் அதில் என்னை மிகவும் கவர்ந்தது "கலப்பைகள்" எனப்படும் ஏர் உழும் கருவிகள். அதில் ஓரிரு கருவிகள் அப்படியே நான் தமிழகத்தில் சிறுவயதில் பயன்படுத்திய கலப்பைகள் போலவே இருந்தது இன்னும் ஆச்சர்யம்.

நம்ம ஊர் உழுதல்

நம்ம ஊர் உழுதல்

ஆழ உழுதல், அகல உழுதல், நடவுக்கென உழுதல் என சுமார் 25 விதமான கலப்பைகள் இருந்தன. நம் ஊரின் மக்கள், தட்பவெட்ப நிலை, மண்வளம்
போன்றவை விவசாயத்திற்கு உகந்ததாக இருந்ததினாலேயோ என்னவோ, நாம் சில கலப்பைகளை தாண்டி மற்றதை உருவாக்கவில்லை அல்லது
பயன்படுத்தவில்லை.

அம்மிக் கல் அரவைக் கல்

அம்மிக் கல் அரவைக் கல்

மேலும் பலவிதமான கயிறு திரிக்கும் கொக்கிகளும் மாதிரி கயிறும் கூட பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர, அம்மிக்கல், உரல், அரவைக்கல் மற்றும் கரண்டி மத்து உட்பட பல விதமான சமையல் சாமான்கள் அனைத்தும் நம் ஊரில் நான் வளர்ந்த கிராமிய வாழ்வை நியாபகப் படுத்துவதாகவே இருந்தது. அக்கால மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. அக்கால கருவிகளில் ஆரம்பித்து இக்கால நாவீன இயந்திரங்கள் வரை அமைந்துள்ள அக்கட்சியத்தை முடித்துவிட்டு அங்கேயே உள்ள கஃபேக்கு சாப்பிட சென்றோம். அங்கே பண்ணையில் விளையும் பொருட்களைக் கொண்டே சமைக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

வளர்க்கப்படும் மாடுகள்

வளர்க்கப்படும் மாடுகள்

மதிய உணவிற்குப் பிறகு ட்ரெய்லர் மூலம் அருகில் உள்ள பண்ணையைச் சென்றடைந்தோம். அங்கு மாடுகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் வளர்க்கப்படுகின்றன. எந்திர முறையில் பால் கறக்கும் நிலையமும் உள்ளது. நகரத்தில் இருந்து வரும் பள்ளிச் சிறார்கள் இதை ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். அவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் பண்ணையைச் சுற்றிக் காட்டுகிறார்கள். வெறும் படிப்பு மட்டும் போதும் என்றிராமல், அவ்வப்பொழுது இது போன்ற சுற்றலா மூலமும் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மாட்டுப் பண்ணைப் போலவே கோழி, பன்றி, குதிரை மற்றும் தேனீ வளர்ப்புகளையும் பார்த்துவிட்டு பண்ணை வீட்டிற்குள் நுழைந்தோம்.

அரண்மனை போன்ற வீடு

அரண்மனை போன்ற வீடு

ஒரு சிறிய அரண்மனை போல் இருந்த அந்த வீட்டின் வரவேற்பறையில் நெருப்பூட்டி (FIREPLACE) அருகே நின்ற தன்னார்வலர் எங்களை அன்புடன்
வரவேற்றார். தேநீர் குவளையில் ஆரம்பித்து ரொட்டி செய்யும் கருவி வரை அனைத்தையும் விவரித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அறையாக எங்களை அழைத்துச் சென்ற அந்த முதியவர் அதன் வரலாற்றை எடுத்துரைத்தார். சுமார் 10 தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த அந்த குடும்பத்தின் கடைசி தலைமுறையான திருமதி ரீய்டு அம்மையார் தன் கணவர் மறைவிற்குப் பிறகு அந்த பண்ணையை அரசுடமை ஆக்கிவிட்டதாக தெரிவித்தார். சமையலறை, குளியலறை, படுக்கையறை, விருந்தினர் அறை, ஓவிய அறை என இரண்டு அடுக்கில் அமைந்திருந்த அவ்வீட்டின் சுவர்களை வண்ண ஓவியங்கள் அலங்கரித்தன.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

யாதும் ஊரே யாவரும் கேளீர்

அந்த வீட்டை சுற்றி காட்டிவிட்டு, எங்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த அவருக்கு வெகுமதி (TIPS) கொடுக்க முற்படும்போது, 80 வயது மதிக்க தக்க அம்முதியவர் அதை அன்புடன் மறுத்துவிட்டார். அதற்குப் பதில் இந்த பண்ணையைப் பற்றி நிறைய நண்பர்களுக்கு தெரிவியுங்கள். அதுவே போதுமானது என்றும் தெரிவித்தார். அதைக் கேட்டு நெகிழ்ந்த மனதோடு அவரிடமிருந்து விடைபெற்றோம். அங்கிருந்த அருங்காட்சியத்திற்கு சுமார் 10 நிமிடம் நடை. வரும் வழியில் சிறிய தோட்டம் அமைந்திருந்தது.அங்கு பூக்கள், காய்கறிகள் மற்றும் அத்திப் பழம் போன்ற சில பழங்கள் பயிரிடப்படுகின்றன. அதைச் சுற்றி நடக்க அழகான புல்வழியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கும் மேலாக அங்கு வைக்கப்பட்டிருந்த நம்மூர் சோலைக்கொள்ளை பொம்மை "யாதும் ஊரே; யாவரும் கேளீர்" என்ற கூற்றை நிரூபிப்பது போலவே இருந்தது.

எழில் கொஞ்சும் கிராமங்கள்

எழில் கொஞ்சும் கிராமங்கள்

பொழுது போனதே தெரியவில்லை. மாலைத் தேநீர் அருந்திவிட்டு, அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் வந்தடைந்தோம். கண்ணாடி நிழற்குடையில் சுமார் 20 நிமிடம் காத்திருந்த பிறகு, இம்முறை சரியான பேருந்தில் ஏறி இரண்டாவது தளத்தின் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டோம். பச்சை பசேல் புல்வெளி, வளைந்து நெளிந்து செல்லும் பாதை, குறுகலான ஒருவழிப் பாதை, ஆங்காங்கே எழில்கொஞ்சும் குக்கிராமங்கள், பழைய வீடுகள் என ரசித்துக்கொண்டே நகருக்கு திரும்பினோம்.

(வெங்கட் நடராஜன் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் வாசகர்)

English summary
Oneinida Tamil reader Venkat has shared his trip to a village and the rural life of Scotland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X