For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போகும் செளதி அரேபிய இளவரசர்கள்: காரணம் என்ன?

By ரேடா எல் மாவி - பிபிசி செய்தியாளர்
|

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள். அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு சௌதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால், அதன் பின்னர் அவர்களைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

விருந்து, மயக்க ஊசி, கடத்தல்

2003-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் நாள், ஒரு சௌதி இளவரசர், ஜெனீவாவின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அவர் பெயர் சுல்தான் பின் துர்க்கி பின் அப்துல்அஜீஸ். அந்த அரண்மனை மறைந்த சௌதி மன்னர் ஃபாஹத்துக்குச் சொந்தமானது. அவரை அந்த அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தவர் மன்னர் ஃபாஹத்தின் மகன் இளவரசர் அப்துல்அஜீஸ் பின் ஃபாஹத்.

சுல்தான் சௌதி அரசு மீது முன்வைக்கும் விமர்சனங்கள் மீதான சர்ச்சர்களைத் தீர்த்துக்கொள்வதற்கு, அப்துல் அஜீஸ் அவரை சௌதி அரேபியாவுக்கு நாடு திரும்பச் சொல்கிறார்.

சுல்தான் அதை மறுக்க, ஒரு தொலைபேசி அழைப்பு செய்தவதற்காக அப்துல்அஜீஸ் செல்கிறார். அந்த அறையில் இருந்த இன்னொரு நபரான, இஸ்லாமிய விவகாரங்களுக்கான சௌதி அமைச்சர், ஷேக் சாலேஹ் அல்-ஷேக்கும் அந்த அறையை விட்டுப் போகிறார். கொஞ்சம் நேரம் கழித்து, முகமூடி அணிந்த நபர்கள், அந்த அறைக்குள் வருகிறார்கள். சுல்தானை அடிக்கும் அவர்கள், அவருக்கு கைவிலங்கிடுகிறார்கள். பின்னர், அவர் கழுத்தில் ஒரு ஊசி சொருகப்படுகிறது.

சுயநினைவற்ற சுல்தான் ஜெனீவா விமான நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறார். அங்கு காத்திருக்கும் மருத்துவ சேவைக்காகப் பயன்படுத்தப்படும் 'மெடவேக்' ஹெலிகாப்டருக்கு அவர் தூக்கிச்செல்லப்பட்டார்.

இவை யாவும், ஒரு சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் சுல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவை.

சொகுசு கப்பல்
Getty Images
சொகுசு கப்பல்

விருந்துக்குச் சென்ற சுல்தான் திரும்பி வருவார் என்று அவரின் விடுதி அறையில் காத்திருந்த அவரது பணியாளர்களில், அவரது தகவல் தொடர்பு அலுவலர் எட்டி ஃபரைராவும் ஒருவர்.

"அவர் திரும்பாமல் நாள் கழியக் கழிய பெரும் நிசப்தம் நிலவியது," என்று நினைவு கூறும் ஃபரைரா, "எங்களால் பாதுகாப்புக் குழுவையும் அணுக முடியவில்லை. அதுவே எங்களுக்கு முதல் எச்சரிக்கையாக இருந்தது இருந்தது. இளவரசரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை," என்கிறார்.

'இடத்தைக் காலி செய்யவும்'

அன்று மதியம், இரண்டு எதிர்பாராத நபர்கள் வருகை தருகிறார்கள்.

"சுவிட்சர்லாந்துக்கான சௌதி தூதர், அந்த ஆடம்பர விடுதியின் மேலாளருடன் வந்து, எங்கள் அறையைக் காலி செய்துவிட்டு, உடனே வெளியேறுமாறு கூறினார்," என்று கூறிய ஃபரைரா, இளவரசர் சுல்தான் சௌதி தலைநகர் ரியாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதால், எங்கள் சேவை அவருக்குத் தேவைப்படவில்லை என்று தெரிவித்தார்.

செளதி அரேபியாவில் காணாமல் போகும் இளவரசர்கள்
BBC
செளதி அரேபியாவில் காணாமல் போகும் இளவரசர்கள்

தனது சொந்தக் குடும்பத்தினரே அவருக்குக் கட்டாயமாக மயக்க ஊசி செலுத்தி, கடத்தி செல்லும் அளவுக்கு இளவரசர் சுல்தான் என்ன செய்தார்?

அந்தச் சம்பவம் நடந்ததற்கு முந்தைய ஆண்டு ஐரோப்பாவிற்கு மருத்துவ சிகிச்சை பெற வந்த அவர், சௌதி அரசை விமர்சனம் செய்து பேட்டி கொடுக்கத் தொடங்கினார். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை விமர்சித்த அவர், அங்குள்ள அரச குடும்பத்தினரும் அதிகாரிகளும் ஊழல் செய்தகாகக் குற்றம்சாட்டினார்.

அங்கு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இபின் சௌத் என்று அழைக்கப்படும் மன்னர் அப்துல்லஸீஸ், 1932-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை நிறுவிய நாள் முதல், அந்நாடு சர்வாதிகாரம் நிறைந்த முடியாட்சியில்தான் உள்ளது.

அரசுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள்.

அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு சௌதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதன் பின்னர் அவர்களைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

2003-இல் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன் இளவரசர் துர்க்கி பின் பந்தர் (இடது)
Getty Images
2003-இல் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன் இளவரசர் துர்க்கி பின் பந்தர் (இடது)

காவல் காத்தவருக்கே பாதுகாப்பு இல்லை

இளவரசர் துர்க்கி பின் பந்தர் ஒரு காலத்தில் சௌதி காவல் துறையில் மேஜராக இருந்தவர். அரச குடும்பத்தைக் காவல் காக்க வேண்டியது அவரது பொறுப்பு. ஆனால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு கசப்பான ஒரு சொத்துத் தகராறில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

2012-இல் அவர் விடுவிக்கப்பட்டதும் பிரான்ஸ் தலைநகர் பாரிக்குப் பறந்த அவர், சௌதி அரசை விமர்சித்து, அங்கு சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி யூ டியூபில் காணொளிகள் வெளியிடத் தொடங்கினார்.

சுல்தானிடம் செய்ததைப் போலவே அவரையும் நாடு திரும்ப வைக்க சௌதி அரசு முயற்சித்தது. அவரைச் சந்தித்த சௌதி உள் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அகமது அல்-சாலேம், அவருடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டார்.

"அனைவரும் உங்கள் வருகையை எதிர்நோக்கியுள்ளனர். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்," என்று கூறுகிறார்.

"என்னுடைய வருகையையா," என்று கேட்கும் இளவரசர் துர்க்கி, "வேசி மகனே! சுல்தான் பின் துர்க்கியை திரும்ப இழுத்துச் சென்றதைப்போலவே உன்னையும் இழுத்துச் செல்வோம் என்று உங்கள் அதிகாரிகள் எனக்கு அனுப்பிய கடிதங்கள் என்ன ஆனது," என்கிறார்.

"அவர்கள் உங்களைத் தொடக்கூட மாட்டார்கள். நான் உங்கள் சகோதரன்," என்று அமைச்சர் பதில் அளிக்கிறார்.

செளதி அரேபியாவில் காணாமல் போகும் இளவரசர்கள்
Getty Images
செளதி அரேபியாவில் காணாமல் போகும் இளவரசர்கள்

"இல்லை. அவை உன்னிடம் இருந்து வந்த கடிதங்கள். உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகமே அந்தக் கடிதங்களை எனக்கு அனுப்பியது," என்கிறார் இளவரசர் துர்க்கி.

ஜூலை 2015 வரை காணொளிகளை வெளியிட்ட அவர், சிறிது காலத்தில் காணாமல் போகிறார்.

'கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம்': முன்கூட்டியே கனித்த துர்க்கி

"ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை அவர் என்னை அழைப்பார்," அவரது நண்பரான, வலைப்பதிவாளர் மற்றும் செயல்பாட்டாளர், வாய்ல் அல்-கலாஃ ப்.

"பின்னர் நான்கு-ஐந்து மாதங்கள் அவர் காணாமல் போனார். எனக்கு அப்போது சந்தேகம் ஏற்பட்டது. சௌதி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் மூலமாகத்தான் இளவரசர் துர்க்கி பின் பந்தர் அவர்களின் பிடியில் இருப்பது தெரிந்தது. ஆக, அவர் கடத்தப்பட்டுள்ளார்," என்கிறார் அல்-கலாஃப்.

துர்க்கியைப் பற்றிய நீண்ட தேடலுக்குப் பிறகு, மொராக்கோவில் அவர் மேற்கொள்ளும் பயணத்திற்குப் பிறகு அவர் பிரான்ஸ் திரும்புவதாக செய்தி ஒன்றைப் படித்தேன். ஆனால் அங்கு அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சௌதி அதிகாரிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மொராக்கோ நீதிமன்றம் ஒன்றின் அனுமதியுடன் அவர் நாடுகடத்தப்பட்டார்.

துர்க்கி பின் பந்தருக்கு என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் காணாமல் போகும் முன்பு, அவர் எழுதிய நூல் ஒன்றின் பிரதியை அவரது நண்பர் வாய்ல் அல்-கலாஃபிடம் கொடுத்துள்ளார். முன்கூட்டியே கணித்த ஒரு குறிப்பை அவர் அந்த நூலில் எழுதியுள்ளார்.

அல்-மஸ்மாக் அரண்மனை, ரியாத்
Getty Images
அல்-மஸ்மாக் அரண்மனை, ரியாத்

"அன்புக்குரிய வாய்ல், நான் கடத்தப்படும் முன்போ, கொலை செய்யப்படும் முன்போ, இவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். அவர்களால், நான் கடத்தப்படவோ, கொல்லப்படவோ நேரலாம் என்பதை நான் அறிவேன். அவர்கள் எனது உரிமைகளையும், சௌதி மக்களின் உரிமைகளையும் எவ்வாறு நசுக்குகிறார்கள் என்பதையும் நான் அறிவேன்," என்று துர்க்கி அதில் எழுதியுள்ளார்.

ஆட்சி கவிழ்ப்புக்கு அழைப்பு விடுத்தவர்

இளவரசர் துர்க்கி மாயமான அதே காலகட்டத்தில், ஐரோப்பிய சூதாட்டக் கூடங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும் அதிக நாட்டம் உடைய, சௌதியில் அதிகம் முக்கியத்துவம் இல்லாத, இன்னொரு சௌதி இளவரசரான சௌத் பின் சயிஃப் அல்-நாசர் என்பவரும் காணாமல் போனார்.

2014-ஆம் ஆண்டு அவர் சௌதி அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்துக்களை வெளியிடாத தொடங்கியிருந்தார்.

அதற்கு முந்தைய ஆண்டு, அப்போதைய எகிப்து அதிபர் முகமது மோர்சியைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக இருந்த சௌதி அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் அவர் கூறியிருந்தார்.

செப்டம்பர் 2015-க்குப் பிறகு அவர் அடுத்தகட்டத்திற்குப் போனார். பெயர் வெளியிடாத சௌதி இளவரசர் ஒருவர், மன்னர் சல்மானின் ஆட்சியைக் கவிழ்க்க வலியுறுத்தி எழுதிய இரண்டு கடிதங்களுக்கு, சௌத் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

அரச குடும்பத்தில் இருந்து வெளிப்படையாக அந்தக் கடிதங்களை ஆதரித்தவர், அவர் ஒருவர் மட்டுமே. அரச துரோகத்திற்கு நிகரான இந்தச் செயல், அவர் விதியை மாற்றியது.

செளதி அரேபிய மன்னர் சல்மான்
Getty Images
செளதி அரேபிய மன்னர் சல்மான்

சில நாட்களுக்குப் பிறகு, "அந்தக் கடிதங்களில் உள்ள விடயங்கள், சௌதியில் ஒரு பொது அழுத்தமாக மாற வேண்டும்," என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டார். அதன் பின்னர் அவரின் ட்விட்டர் கணக்கு நிசப்தமானது.

2013-இல் ஜெர்மனிக்குப் பறந்த, அரசுக்கு எதிராக இருந்த இன்னொரு இளவரசர் காலீத் பின் ஃபர்ஹான், வளைகுடாவில் தொழில் தொடங்க விரும்பும் ஒரு ரஷ்ய-இத்தாலிய நிறுவனத்துடன் தொழில் நிமித்தமாகப் பேசுவதற்காக, சௌத் பின் சயிஃப் அல்-நாசர் மிலானில் இருந்து ரோம் நகருக்கு வருமாறு ஏமாற்றப்பட்டார், என்று நம்புகிறார்.

"இளவரசர் சௌதை ஏற்றிக்கொண்ட அந்தத் தனியார் நிறுவனத்தின் விமானம் ரோமில் தரையிறங்கவில்லை, ரியாத்தில்தான் தரையிறங்கியது," என்கிறார் காலீத்.

"சௌதி உளவுத் துறை இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் அரங்கேற்றியுள்ளது," என்கிறார் அவர்.

"இப்போது இளவரசர் சௌதின் நிலையும், இளவரசர் துர்க்கியின் நிலைதான். பாதாளச் சிறைதான் அவர்களின் விதி," என்றார் காலீத்.

சிறப்புச் சலுகையாக மருத்துவ சிகிச்சை

அரச குடும்பத்தில் மேல் நிலையில் இருந்ததால், இளவரசர் சுல்தான் சிறை மற்றும் வீட்டுக் காவலுக்கிடையே அடிக்கடி மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையம் மோசமடைந்து வந்தது. அதனால், அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Camel
Getty Images
Camel

அவர் அமெரிக்காவில் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பில் செய்த செயல்கள் சௌதி மக்களைத் திகைப்படையச் செய்திருக்கும். இளவரசர் அப்துல்லஸீஸ் பின் ஃபாஹத் மற்றும் ஷேக் சாலேஹ் அல்-ஷேக் ஆகியோர் தன்னை 2003-ஆம் ஆண்டு கடத்தியதாக அவர் சுவிட்சர்லாந்து நாடு நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடுத்தார்.

அவரது அமெரிக்க வழக்கறிஞரான கிளைடு பெர்ஜ்ஸ்ட்ரெஸ்ஸர், சுல்தான் 2003-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் நாள், சுல்தான் அனுமதிக்கப்பட்டிருந்த, ரியாத்தில் உள்ள மன்னர் ஃபைசல் சிறப்பு மருத்துவமனையின் அறிக்கையைப் பெற்றிருந்தார்.

அதில், அவர் மயக்க நிலையில் இருக்கும்போது சுவாசிக்க உதவுவதற்காக அவர் வாயில் ஒரு குழாய் நுழைக்கப்பட்டிருந்ததும், அவர் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள தசைகள் தாக்கப்பட்டகால் செயல் இழந்து இருப்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் முறையாக சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு மேற்கத்திய நீதிமன்றத்தில் தன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு குற்றப் புகாரைப் பதிவு செய்துள்ளார். ஆனால், சுவிட்சர்லாந்து அதிகாரிகள் வழக்கில் பெரிதாக ஒன்றும் ஈடுபாடு காட்டவில்லை என்று பெர்ஜ்ஸ்ட்ரெஸ்ஸர் கூறுகிறார்.

"அந்த விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை," என்று கூறும் அவர், "யார் அந்த விமானிகள்? ஏன் அந்த ஹெலிகாப்டர் சௌதிக்குப் போனது? அந்தக் கடத்தல் சுவிட்சர்லாந்து மண்ணில் நடந்ததால், அதைக் கண்டு பிடிக்க ஆர்வம் காட்டப்படும் என்று நான் நம்பினேன்," என்று கூறுகிறார்.

Arabian desert from the air
Getty Images
Arabian desert from the air

திசை மாறிப் பறந்த விமானம்

ஜனவரி 2016-இல் சுல்தான் பாரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். சௌத் பின் சயிஃப் அல்-நாசரைப் போலவே அவரும் விமானத்தில் கடத்தப்படுகிறார்.

அவரைப் போலவே சௌதி அரசைக் கடுமையாக விமர்சித்த, அவரது தந்தையைச் சந்திக்க அவர் எகிப்து தலைநகர் கெய்ரோ செல்லத் திட்டமிட்டிருந்தபோது, பாரியில் உள்ள சௌதி தூதரகம், அவருக்கும், மருத்துவர், செவிலியர் மற்றும் மெய்க்காவலர்களை உள்ளடக்கிய 18 பேர் கொண்ட அவரின் உதவிக் குழுவுக்கும் ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியது.

2003-இல் அவருக்கு நடந்த சம்பவத்தையும் மீறி அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அந்தக் குழுவில் இருந்த பெயர் வெளியிட விரும்பாத இருவர் அன்று நடந்த சம்பவங்களை விவரிக்கின்றனர்.

"நாங்கள் விமான நிலையத்தின் ஓடுதளத்திற்கு சென்றதும் எங்கள் முன்பு பெரிய விமானம் இருந்தது. அதன் மேல் புறத்தில் 'சௌதி அரேபியா' என்று எழுதப்பட்டிருந்தது," என்று அவர்களில் ஒருவர் கூறுகிறார்.

அந்த விமானம் புறப்பட்டபோது, அதன் உள்ளே இருந்த மின் அறிவிப்புப் பலகைகளில் அது கெய்ரோ செல்வதாகக் காட்டப்பட்டது. சற்று நேரத்தில் அவை அணைந்து போயின.

சன்னல் வழியே சௌதி அரேபியா

இளவரசர் சுல்தான் அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் அவர் கண்விழித்தார். விமானத்தின் சன்னல் வழியாக வெளியே பார்த்த அவர் பதற்றமாகக் காணப்பட்டார், என்று அவரது முன்னாள் பணியாளர்கள் கூறுகின்றனர்.

சௌதி அரேபியாவில் அந்த விமானம் தரை இறங்கப்போகிறது என்று அதில் இருந்த பயணிகளுக்குத் தெரிய வந்தது. சுல்தான் விமானிகள் இருக்கும் அறையின் கதவுகளை வேகமாகத் தட்டியதுடன், உதவி கேட்டு அழத் தொடங்கினார். விமானக் குழுவைச் சேர்ந்த ஒருவர், இளவரசரின் ஊழியர்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

"நாங்கள் சன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, துப்பாக்கி ஏந்திய நபர்கள், விமானத்தைச் சூழ்ந்து கொண்டனர்," என்று இளவரசரின் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

செளதி அரேபியாவில் காணாமல் போகும் இளவரசர்கள்
Getty Images
செளதி அரேபியாவில் காணாமல் போகும் இளவரசர்கள்

ராணுவத்தினரும், விமானக் குழுவினரும் சுல்தானை வெளியே இழுத்துச் சென்றபோது, அமெரிக்கத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அவரின் ஊழியர்களை நோக்கி அவர் கூச்சலிட்டார்.

மன்னிப்புக் கேட்ட கடத்தல்காரர்கள்

இளவரசரும், அவரது மருத்துவக் குழுவினரும் ஒரு தனி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பதற்றத்துடன் விமானத்திலேயே காத்துக்கொண்டிருந்தனர். ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், தொலைபேசி வசதி மற்றும் பாஸ்போர்ட் எதுவும் வழங்கப்படாமல் மூன்று நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர், அவர்கள் விரும்பும் இடங்களுக்கு விமானம் மூலம் பறந்து செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அந்த விடுதியில் இருந்து புறப்படும் முன்பு, அந்த விமானத்தை இயக்கிய குழுவில் இருந்த ஒரு சௌதி அதிகாரி சுல்தானின் ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

"நாங்கள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததாகவும், எங்களுக்கு நேர்ந்த இன்னல்களுக்கு வருந்துவதாகவும் அவர் எங்களிடம் கூறினார், " என்கிறார் ஒரு ஊழியர்.

"எனக்கு இன்னல் ஏற்படுத்தப்படவில்லை. நான் கடத்தப்பட்டேன். என் விருப்பத்திற்கு மாறாக, நான் செல்ல விரும்பாத ஒரு நாட்டில் நான் சிறை வைக்கப்பட்டேன்," என்கிறார் இன்னொருவர்.

அது ஒரு மிகவும் மோசமான சூழலாக இருந்தது. இளவரசர் சுல்தானுடன் 18 வெளிநாட்டவர்களும் கடத்தப்பட்டிருந்தனர். இந்த சம்பவங்களுக்குப்பின் இளவரசர் சுல்தானைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

இந்த ஆவணப் படத்திற்காக, சௌதி அரேபிய அரசுத் தரப்பின் கருத்தை நான் கேட்டேன். ஆனால் அவர்கள் இது பற்றிப் பேச மறுத்துவிட்டனர்.

இளவரசர் காலீத்
BBC
இளவரசர் காலீத்

'அடுத்தது நானாக இருக்கலாம்'

இதனிடையே, இன்னும் ஜெர்மனியில் வசிக்கும் இளவரசர் காலீத், தானும் சௌதி அரேபியாவுக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்படலாம் என்று கூறுகிறார்.

"எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஐரோப்பிய நாடுகளில் வசித்தோம். நாங்கள் சௌதி அரேபியாவை ஆளும் குடும்பத்தையும், அதன் ஆட்சியையும் விமர்சனம் செய்தோம். எங்களில் மூவர் கடத்தப்பட்டுள்ளனர். நான் ஒருவன்தான் மிச்சம் உள்ளேன்," என்கிறார் அவர்.

'அவர் இந்தப் பட்டியலில் அடுத்ததாக இருப்பாரா?' எனும் கேள்விக்கு அவரே விடை சொல்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
In the last two years, three Saudi princes living in Europe have disappeared. All were critical of the Saudi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X