For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்ரோசாப்ட் கோட்டையிலிருந்து சென்னை- கடலூருக்கு நிவாரணம் வழங்கிய தமிழர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

சியாட்டல்(யு.எஸ்): அமெரிக்காவில் தற்போது வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் துறை வல்லுனர்கள்.

சியாட்டல் மாநகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், ஏனைய பெரிய நிறுவனங்களான காஸ்ட்கோ, ஸ்டார்பக்ஸ், போயிங் நிறுவனங்களிலும் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் அமெரிக்க நகரங்களில் சியாட்டலும் முக்கியமான ஒன்றாகும்.

Seattle Tamil Sangam donates 18k dollars for Chennai flood relief

சியாட்டலில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும் 'சியாட்டல் தமிழ்ச் சங்கத்தின்' சார்பில் சென்னை - கடலூர் வெள்ள நிவாரண நிதியாக 18 ஆயிரம் டாலர்களுக்கும் மேலாக திரட்டப்பட்டு, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனிப்பட்ட நபர்களின் நன்கொடை, சிவாஜி திரைப்பட வெளியீடு மற்றும் அஞ்சப்பர் உணவகத்தின் ‘உணவருந்தி உதவி செய்வோம்' போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக நிதி திரட்டி வருகிறார்கள். இதுவரையிலும் 18 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

வெள்ள நிலவரம் தெரிந்த முதல் இரண்டு நாட்களுக்குள் 4000 டாலர்கள் திரட்டப்பட்டு, பூமிகா ட்ரஸ்ட் (Bhoomika Trust) மூலம் சென்னையில் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Seattle Tamil Sangam donates 18k dollars for Chennai flood relief

கடலூரில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விபா ட்ரஸ்ட் (Vibha Trust) மூலம் 4000 டாலர்களுக்கான உடனடித் தேவைகளுக்கான நிவாரணப் பணிகள் நடைபெற்றது.

சென்னையில் உதவும் கரங்கள் அமைப்பின் குடியிருப்புகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் சேதமான நிலையில், அவற்றின் மறு சீரமைப்பிற்காக 2000 டாலர்கள் நிதியுதவியும் வழங்கப்பட்டன.

இந் நிலையில் கடந்த புதன்கிழமை, சியாட்டல் அஞ்சப்பர் ரெஸ்டாரண்டும் சியாட்டல் தமிழ்ச் சங்கமும் இணைந்து ‘ உணவருந்தி உதவி செய்வோம்' என்ற உணவுத் திருவிழாவை நடத்தினர். காலை 11 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அன்றைய தினம் கிடைக்கப்பெற்ற மொத்த வருமானமான 7000 டாலர் தொகையை அஞ்சப்பர் சிஇஓ, கே.ஆர். ராஜகோபாலன், வெள்ள நிவாரண நிதியாக, தமிழ்ச் சங்க தலைவர் அருண் சுபாஷிடம் வழங்கினார்.

நான்கு சமையல் கலை நிபுணர்கள், 4 உதவியாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்ற, உடன் சிஇஓ, கே.ஆர். ராஜகோபாலனும் கரண்டியுடன் களம் இறங்கிவிட்டார். வரவேற்பு, ஆர்டர் எடுத்தல், சப்ளை செய்தல், சுத்தப்படுத்துதல் . கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல் என அனைத்து பணிகளிலும் 11 மணி நேரமும், தமிழ்ச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு விதிகளின் படி கையாள்வதற்கான சிறப்பு சான்றிதழ் பெறப்பட்டது. தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அலுவகப் பணிகளில் அனுமதி பெற்று நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றினர். சமூகத் தளங்கள் மூலம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் பற்றி விரிவான தகவல்கள் பரிமாறப்பட்டன.

Seattle Tamil Sangam donates 18k dollars for Chennai flood relief

வேலை நாளான புதன்கிழமையன்று கூட 600 க்கும் அதிகமான பேர் பங்கேற்றது, தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பது போல், தமிழகத்தின் மீதுள்ள தார்மீக உறவை உணரச்செய்வதாக இருந்தது.

இத்தகைய நிகழ்வுகள் மூலம் சியாட்டல் தமிழர்களை ஒன்றிணைத்து 26வது ஆண்டாக செயல்பட்டு வரும் சியாட்டல் தமிழ்ச் சங்கம், உறுப்பினர்கள் ஆண்டு சந்தா என்று எதுவும் வசூலிக்காமல், நிகழ்ச்சிகள் நடத்தி வருவது மிகவும் முக்கியமான அம்சமாகும். இரண்டாம் கட்டமாக திரட்டப்பட்ட் 8 ஆயிரம் டாலர்களும் பூமிகா மற்றும் விபா ட்ரஸ்ட்கள் மூலம் மறு சீரமைப்புப் பணிக்காக செலவிட உள்ளனர்.

சியாட்டல் தமிழ்ச்சங்கத்தை போல், அமெரிக்கா முழுவதிலும் பல்வேறு தமிழ் சங்கங்களும், தமிழ் அமைப்புகளும் தமிழக வெள்ள நிவாரணத்திற்காக நிதி திரட்டி, வெவ்வேறு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் உதவிகள் செய்து வருகின்றன.

தாங்கள் வழங்கும் நிதி, சரியான வழியில் செலவிடப்படுகிறதா என்று நன்கொடையாளர்களும், தாங்கள் அனுப்பும் நிதி / நிவாரண உதவிகள் சரியான அமைப்புகள் மூலம் தேவையானவர்களுக்கு நேரடியாக சென்றடைகிறதா என்று அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் மிகுந்த சிரத்தையுடன் செயல்படுவதை காண முடிகிறது. தவறானவர்கள் கையில் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது மிகவும் வரவேற்கதக்கதாகும்.

-சியாட்டலிலிருந்து இர தினகர்

English summary
The Seattle Tamil Sangam has organised various charitable events to collect fund for Chennai flood relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X