'இதுதான் ஒரே தீர்வு..' ஆப்கனில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்.. தாலிபான்கள் போட்ட அதிரடி உத்தரவு
காபூல்: ஆப்கனில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்கத் தாலிபான்கள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
ஆப்கனில் இருந்து அஸ்ரப் கானி தலைமையிலான அரசைத் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்த்தனர். அமெரிக்கப் படைகள் வெளியேறியதுமே ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ஆட்சி அமைத்து சுமார் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இதுவரை அங்கு அமைதியான சூழல் முற்றிலுமாக திரும்பவில்லை.
சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!

ஆப்கன் குண்டுவெடிப்பு
கடந்த வாரம் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முதலில் மருத்துவமனை அருகே 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும் அதன் பிறகு மருத்துவமனைக்கு உள்ளே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு
ஆப்கனில் தாலிபான் ஆட்சி அமைந்தது முதலே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்களும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் புகுந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் தாலிபான்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

புதிய உத்தரவு
அதேபோல குண்டுவெடிப்பு சம்பவங்களும் அடிக்கடி நடக்கத் தொடங்கியுள்ளது. இதை ஐஎஸ்எஸ் - கே பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே நடத்துவதாகத் தாலிபான்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஐஎஸ்எஸ் - கே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் தாலிபான்கள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதாவது கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் தாலிபான்களைத் தவிர மற்றவர்கள் துப்பாக்கியுடன் வந்தால் அவர்களை டாக்ஸிகாரர்கள் ஏற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

என்ன காரணம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் இதற்கு அனைத்து டாக்ஸி ஓட்டுநர்களும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகப்படும்படியாக யாராவது துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் அவர்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும்படி தாலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர். தாலிபான்களின் இந்த அறிவிப்பில் எந்தவொரு குறிப்பிட்ட அமைப்பின் பெயரும் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, ஐஎஸ்எஸ் - கே பயங்கரவாதிகளைக் குறிவைத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,